Tuesday, September 22, 2009

நம்பிக்கை கொள்ளுங்கள், எதன்மீதாவது!

ஒரு அறிஞரிடம் ஒருவர், நீங்கள் பேய் இருப்பதை நம்புகிறீர்களா என்று கேட்டாராம், அதற்கு அவர்,

"பேய் இருப்பதை நான் நம்பல
இருந்தாலும்
கொஞ்சம் பயமாத்தான் இருக்கிறது" என்றாராம்!.

கடவுள் நம்பிக்கை என்பதும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான். கடவுள் நம்பிக்கை என்பது ஆளுக்கு ஆள், நேரத்திற்கு நேரம் வேறுபடும். சில பேர் எப்பொழுதும் ஆத்திகரா இருப்பாங்க, சில பேர் எப்பொழுதும் நாத்திகரா இருப்பாங்க. இன்னும் சில பேர் சில நேரம் ஆத்திகராகவும் சில நேரம் நாத்திகராகவும் இருப்பாங்க. நமக்கு பிடித்த விஷயங்கள் நடக்கும் போது ஆத்திகராகவும், நமக்கு பிடிக்காத விஷயங்கள் நடக்கும்போது நாத்திகராகவும் மாறுகிறோம்.

கடவுள் இருக்கிறாரோ இல்லையோ , ஆனால் ஏதேனும் ஒன்றின் மேல் நம்பிக்கை வைப்பது மிகவும் அவசியம் மற்றும் நல்லது. எடுத்துக்காட்டாக நம்மை சுற்றி நம் கட்டுப்பாட்டில் இல்லாத, ஆனாலும் அதன் விழைவுகள் நம்மை பாதிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கும் போது, நம்மால் இயல்பான வாழ்க்கையை வாழ முடியாது. அத்தகைய நேரங்களில் விழைவுகளைப் பற்றிக் கவலைப்படாத மனம் வேண்டும் அல்லது நேர்மறை எண்ணங்களை கொண்ட மனம் வேண்டும். உங்களால் நேர்மறை எண்ணங்களை உருவாக்க முடியவில்லையா ? அப்ப இங்குதான் கடவுள் வருகிறார். இங்குதான் கீதை வருகிறது. அனைத்தையும் கடவுளிடம் விட்டு விட்டு உங்கள் வேலையை பாருங்கள். ஆனால் அதே நேரம் எல்லாவற்றையும் கடவுளிடம் விட்டுவிட்டால் முயற்சி எங்கே? பலன் எங்கே? . அதனால் முயற்சியும் வேண்டும், ஆனால் அதன் விழைவுகளை பற்றிக் கவலைப்படாத மனமும் வேண்டும். இங்கு நாம் வள்ளுவரையும் துணைக்கு அழைத்துக் கொள்ளலாம்,

"தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்்".

ஒருவன் கடவுளிடம் தவம் இருந்தானாம். கடவுள் அவன் முன் தோன்றினார்

"பக்தா உன் பக்தியை மெச்சினோம், உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?" என்றார்.
அதற்கு பக்தன்
"இது கூட தெரியலனா நீ என்ன கடவுள்? " என்றானாம்.

இங்கு நான், பக்தனுக்கு என்ன வேண்டும் என்று கடவுளுக்கு தெரியவில்லை என்று நினைக்கவில்லை. பக்தனுக்கே, தனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்திருக்கிறதா என்றுதான் சோதிக்கிறார். ஒருவருக்கு தனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். அதுதான் முக்கியம். அது தெரிந்திருந்தாலே முக்கால் வாசி பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுவிடலாம். அது தெரிந்திருந்தாலே கடவுள் இரண்டாம் பட்சம்தான்.

எனவே செய்வது சரியோ தவறோ நம்பிக்கை கொள்ளுங்கள்,எதனிடமாவது!

சரி நீ கடவுள் இருப்பதை நம்புகிறாயா, இல்லையா? என்று கேட்குறீர்களா,

"கடவுள் இருப்பதை நம்பத்தான் செய்கிறேன்,
இருந்தாலும்
கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருக்குது!."

No comments: