Wednesday, October 7, 2009

யவன ராணியும் பொன்னியின் செல்வனும் - 2

யவன ராணியின் கதாநாயகன், ஒரு கதாநாயகனுக்குரிய அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருப்பான். ஒற்றாடல்
ஆகட்டும், போர்த் தந்திரம் ஆகட்டும், காதல் ஆகட்டும், போரிடுதல் ஆகட்டும், போர் வீயுகம் அமைப்பதில் ஆகட்டும், ஆகிய அனைத்திலும் ஒரு கதாநாயகனுக்குரிய அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருப்பான்.

பொன்னியின் செல்வனின் கதாநாயகன் வந்தியத்தேவனுக்குச் சற்றுத் திறமை குறைவே. ஒற்றாடலிலும், போர்த் திறனிலும், காதல் காட்சிகளிலும், இளஞ்செழியனைவிடச் சற்றுக் குறைவே. என்னுடைய அண்ணன் ஆனந்த் கூறியபடி , வந்தியத்தேவன் ஒரு comedy க் கதாநாயகனாகவேத் எனக்குத் தோன்றினான் ;).

பொன்னியின் செல்வனில், அருள்மொழிவர்மனின் தீரத்தை எடுத்துரைக்க சில இடங்கள் அமைந்திருக்கும். யானை மீது ஏறி விரட்டிச் செல்லும் காட்சிகளும், இலங்கையில் மகுடம் ஏற்க மறுத்துரைக்கும் காட்சிகளும், அருள்மொழிவர்மன் மீது ஒரு ஈர்ப்பை ஏற்ப்படுத்தும்.

ஆனால் கதையின் திருப்பங்களிலும் சரி, கதையின் முடிச்சுகளை அவிழ்ப்பதிலும் சரி, கல்கி மிக நன்றாக கையாண்டிருப்பார். மேலும் பொன்னியின் செல்வன் நாவல் சற்று நகைச் சுவை கலந்தும் இருக்கும். ( இதில் குறிப்பாக எனக்கு ஒரு சம்பவம் பிடிக்கும். வந்தியத்தேவன் ஒரு பாழடைந்த மண்டபத்தின் வாயிலில் இருந்து, உள்ளே யார்? என்று கேட்பான். அதற்க்கு உள்ளே இருந்து ஒரு சிறு குழந்தை நீ புலியா? என்று கேட்கும். அதற்க்கு வந்தியத்தேவன் இல்லை குதிரை என்று பதிலுரைப்பான். அதற்க்கு அச்சிறுவன் குதிரை எங்காவது பேசுமா? என்று கேட்பான். அதற்க்கு வந்தியத்தேவன், பின் புலி எங்காவது பேசுமா? என்று திரும்பிக் கேட்ப்பான. இக்காட்சி மிக நன்றாக அமைந்திருக்கும்). அந்த வகையில் பொன்னியின் செல்வன், யவன ராணியை விட சிறந்ததாக இருக்கும்.

இவ்விரு நாவல்களிலும் பெண்களின் பங்கு மிக அபாரமாக இருக்கும். சொல்லப்போனால், இரண்டு நாவல்களின்ஓட்டத்திற்கும் பெண்களே காரணமாக இருப்பார்கள். யவன ராணியில், யவன ராணியும், பொன்னியின் செல்வனில் நந்தினியும் மற்றும் குந்தவையும் மிகப் பெரிய பங்காற்றியிருப்பார்கள். இதிலும் என்னை அதிகமாக ஈர்த்தது யவன ராணியே.

பொதுவாக சரித்திர நாவல்களைச் சிறப்பாக ஆக்குவது ஒற்றாடலும், பின் வருவனவற்றை முன்பே யூகித்து அதற்க்கேற்ப்ப வியூகம் அமைப்பதே ஆகும். பொன்னியின் செல்வனில் ஒற்றாடலை ஆழ்வார்க்கடியான் மிகச் சிறப்பாகச் செய்திருப்பார். வியூகம் அமைப்பதின் மிகச் சிறப்பான பகுதிகளை நந்தினியும், அமைச்சர் அநிருத்ர பிரம்மராயரும, பொன்னியின் செல்வனும் பகிர்ந்து கொள்வார்கள். பொன்னியின் செல்வனில் கதாப்பாத்திரங்களின் எண்ணிக்கையும், ஒவ்வொரு கதாப்பாத்திரங்களுக்கான முக்கியத்துவமும், யவன ராணியைவிட அதிகமாக இருக்கும் .
இப்படி பொன்னியின் செல்வனில் பலரும் பெரும் பங்குவகிப்பார்கள். அதுவே அதன் பலமும், பலவீனமும் ஆகும்.

யவன ராணி மிகச் சிறப்பாக அமைந்ததற்கு மற்றொரு காரணம், போர்!. பொன்னியின் செல்வனில் போர் கடைசி நிமிடம், பொன்னியின் செல்வனின் தியாகத்தால் தவிர்க்கப்படும். ஆக அங்கு heroism ஐ வெளிப்படுத்த வழி இல்லாமல் போய்விட்டது.

யவன ராணியில், எதிரிப் படை நாக வீயுகம் அமைக்கும் என்று யூகித்து, அதை எதிர்கொள்ள கருட வீயுகம் அமைக்கும் சமயோசிதமும், அதை விளக்கியுள்ள முறையும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும். இக்கட்டத்தில் இளஞ்செழியனின் விவேகமும், தீரமும் நன்கு வெளிப்படும்.

பொதுவாக நான் சரித்திர நாவல்கள் படிக்கும் போது, அதில் இருக்கும் வரைபடங்களைப் பார்க்கமாட்டேன். ஏனெனில், அவை நம் கற்பனையை ஈடு செய்யும் அளவிற்கும் இருக்காது. அதையும் தாண்டி என்னை மிகவும் கவர்ந்த அட்டைப்படம் யவன ராணியே. அதிலும் குறிப்பாக யவன ராணியின் படம் மிகச் சிறப்பாக இருக்கும். அதுவே இந்நாவல், பொன்னியின் செல்வனை விட என்னை அதிகம் கவர்ந்ததிர்க்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம் ;) .

பொன்னியின் செல்வனில் அவிழ்க்கப்படாத முடிச்சுகளும் ஏராளம் உண்டு. நந்தினியின் உண்மையான காதலன் யார்? வீர பாண்டியனா? அல்லது ஆதித்ய கரிகார்ச்சோழனா?. நந்தினியின் தந்தை யார்?. வீர பாண்டியனின் மகனின் உண்மையான தாய் யார்? இப்படி பல உண்டு. இப்படி பொன்னியின் செல்வன் நாவலில் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் பல இருப்பதற்குக் காரணம், இந்நாவல் வரலாற்றின் ஊடே அதிகமாக பயணித்தது் ஒரு காரணம் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. உண்மையில் ஆதித்ய கரிகார்ச் சோழன் இறந்ததற்கான காரணங்களும், அதற்குக் காரணமானவர்களையும் இன்றுவரை யாருக்கும் தெரியாது. பொன்னியின் செல்வனை, வரலாறு என்பதனைத் தவிர்த்து நாவல் என்று பார்க்கும் போது , இப்படி அவிழாத முடிச்சுகள் பல கொண்டு நிறைவடைந்த்திருப்பது எனக்கு நிறைவைத் தரவில்லை!.

சாண்டில்யன் கற்பனையை அதிகம் உபயோகப்படித்தி இருப்பார் என்பதும், அதற்கான களம் அவருக்கு அமைந்திருந்தது என்பதும், கல்கி வரலாற்றின் ஊடேயே அதிகம் பயணித்திருப்பார் என்பதால் அவருக்கான கற்பனைக் களம் குறைவாக அமைந்திருந்தது என்பதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. இருந்தபோதிலும் எனக்கு யவன ராணியே மிகவும் பிடித்திருந்தது. அதற்க்கு வாலிப பருவத்தின் வாயிலில் இருந்தபோது எனக்கு யவன ராணியின் மீது ஏற்ப்பட்டக் கவர்ச்சியும், போர்த் தந்திரங்களின் மீதும் ஏற்ப்பட்ட ஈர்ப்பும் காரணங்களாக இருக்கலாம் ;) .

பின் குறிப்பு :
1. பொன்னியின் செல்வனை நான் இந்தாண்டுதான் படித்தேன் ;) .
2. பொன்னியின் செல்வன் ராஜராஜசோழன், அரசனாவதற்கு முற்பட்ட காலகட்டத்தைப் பற்றியது. அதனால் இதில் ராஜராஜசோழனின் போர்த் திறமைகளைப் பற்றியோ அல்லது அவனது நிர்வாகத்திறனைப் பற்றியோ பெரிதாக குறிப்பு் ஒன்றும் இருக்காது. சொல்லப் போனால் ராஜராஜ சோழனுக்கு பெரும் வெற்றிகளை ஈட்டித் தந்தது அவனுடைய தளபதியாக இருந்த அவனுடைய மகன் ராஜேந்திரச்சோழனே. அதனாலயே ராஜராஜசோழனால் நிர்வாகத்திலும், தஞ்சைப் பெரிய கோவில் உள்ளிட்ட கோவில்கள் கட்டுவதிலும் கவனம் கொள்ள முடிந்தது. இந்த விசயத்தில் பொன்னியின் செல்வனை ஹிட்லரின் Mein Kampf உடன் ஒப்பிடலாம். Mein Kampf ஐ ஹிட்லரின் உலகப் போரை மனதில் கொண்டு படித்தால் ஏமாந்துதான் போவோம். ஏனென்றால் Mein Kampf, ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எழுதப்பட்டது.

3 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமையான அலசல்

பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்!

sivarani said...

May be becoz u read yavanarani at a very young age u liked it very much.. Now you would have lost your innocence and ignorance to some extent.. when u read PSelvan as a grown up.. it seems to fail to fascinate you as the other book did..

In my personal opinion.. if you read sandilyan first you might not like the kalki.. and you cant compare them coz its like comparing apple and orange.. like comparing ilayaraja and ARR.. they are great in their own way..

I have read PS when i was young and was mesmerized ve not read YR yet but read kadal pura its not even close it failed miserably in impressing me..

Good write up.. Keep up the gud work

Haripandi Rengasamy said...

வினி , உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. யவன ராணி படிக்கும் போது நான் விடலைப் பருவத்தில் இருந்ததும் நான் அதை விரும்பியதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் .

நானும் கடல் புறா படித்திருக்கிறேன் . நிச்சயம் கடல் புறாவையும் யவன ராணியையும் compare பண்ண முடியாது . யவன ராணி கடல் புறாவைவிட மிக நன்றாக இருக்கும் .

கல்கியும் சாண்டில்யனும் வெவ்வேறு நடையும் , உள்ளடக்கம் கொண்டும் எழுதியவர்கள் . நான் அவர்தான் best , இவர்தான் பெஸ்ட் என்று கூறவில்லை . இது just என்னை பாதித்த அல்லது எனக்கு பிடித்த முறையைப் பற்றிதான் கூறியுள்ளேன் . அவ்வளவுதான் :)