Friday, February 12, 2010

எங்கள் அப்பாவும் அவர் கூறிய கதைகளும்

சின்ன வயதில் எனக்கும் மதுவுக்கும் கிடைத்த மிகச் சிறந்த பாக்கியம் எங்கள் அப்பாவிடம் கதை கேட்கும் பாக்கியம். எங்கள் அப்பாவிற்கு கதை சொல்லும் கலை மிகச் சிறப்பாக வாய்த்திருந்தது. எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது எங்களுக்கு ஆறு, ஏழு வயதாக இருந்தபோதே நாங்கள் எங்கள் அப்பாவிடம் கதை கேட்க தொடங்கியிருந்தோம். அப்பொழுது நாங்கள் தங்கியிருந்த வீட்டில் மிக நீளமான திண்ணை இருந்தது. அங்கு உட்கார்ந்து இருந்து தான் நாங்கள் கதை கேட்போம். மின்சாரம் துண்டிக்கப்படும் போதெல்லாம் நான், மது மற்றும் எங்கள் பக்கத்து வீட்டு பையன்கள் எல்லாம் அந்த திண்ணையில் எங்கள் அப்பாவைச் சுற்றி கூடிவிடுவோம். எனக்கும் மதுவுக்கும் இதில் பெருமை வேற, எல்லா பையன்களும் எங்கள் அப்பாவிடம் கதை கேட்க வருகிறாகள் என்று. Thanks to Tamilnadu EB dept. அப்பொழுதெல்லாம் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படும்.

எங்கள் அப்பா தென்னாலிராமன்,மரியாதை ராமன், விக்ரமாதித்தன் கதைகள்,அரபியக் கதைகள், ஆயிரத்தொரு இரவுக் கதைகள், அக்பர்-பீர்பால் கதைகள் எல்லாம் அவ்வளவு அருமையாக கூறுவாங்க. ஓவ்வொரு கதை சொல்லிமுடித்த பிறகும் அக்கதை சொல்லும் நீதி என்ன என்று கேட்ப்பாங்க . நாங்கள் எங்களுக்கு தோன்றியவரையில் கதையின் நீதியைச் சொல்லுவோம். இப்படியாக கேள்வி அறிவையும், ஒரு சம்பவத்தை புரிந்து கொள்ளும் திறமையையும் ஒரே சமயத்தில் எனக்கும் மதுவுக்கும் வளர்த்தார்கள்.

எங்கள் அப்பா அதிகமாகப் படிப்பார்கள். அவர்கள் கையில் எப்பொழுதும் ஒரு ஆங்கில நாவல் இருக்கும். எங்களுக்கு சிறிது வயது ஆனவுடன் எங்கள் அப்பா அவர்கள் படித்த ஆங்கில நாவல்களையும் மொழி பெயர்த்து கூற ஆரம்பித்தார்கள். இப்படியாக நானும் மதுவும் பெயர் தெரியாத பல ஆங்கில நாவல்களுக்கு சிறு வயதிலேயே அறிமுகம் ஆகியிருந்தோம். எங்கள் அப்பாவிடம் இருந்த திறமைகளில் முக்கியமானது, ஆங்கில நாவல்களை indianise பண்ணி கூறியது. அதாவது கதையின் ஓட்டத்தையும், ஏன் சில நேரம் கதையின் முடிவுகளையும் மிக அருமையாக மாற்றிக்கூறுவார்கள்.

எங்கள் அப்பா கூறும் கதைகளுக்கு சிறுவர்கள் மட்டும் அல்ல பெரியவர்களும் அடிமை ஆகியிருந்தார்கள். இன்றும் கூட எங்கள் மாமா, எங்கள் அப்பா கதை சொல்லும் திறமையைப் பற்றி சிலாகிப்பார்கள். எங்கள் அப்பா எங்களுக்கு வளர்த்த இந்த கேள்வி அறிவை நானும் மதுவும் எங்கள் பிள்ளைகளுக்கு வளர்க்கும் அளவிற்கு திறமை கொண்டிருக்கிறோமா என்பது சந்தேகமே.

we miss you dad. we miss you so much. we miss you in many ways.

எங்கள் அப்பா சிறு வயதில் எங்களுக்கு கூறிய பல கதைகளும் எங்களுக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது. சென்ற வாரம் எங்கள் சித்தப்பா வீட்டிற்குச் சென்ற போது "சோவியத் நாட்டுக் கதைகள்" என்ற புத்தகம் எடுத்து வந்தேன். அதில் எங்கள் அப்பா கூறிய பல கதைகள் இருந்தன. அதில் ஒன்று உங்களுக்காக இங்கே.

ஒரு காலத்தில் ஒருவருக்கு ஆறு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். ஒரு நாள் சகோதர்கள் ஆறுபேரும் நிலத்தை உழுகச் செல்வர். செல்லும்போது தம் தங்கையிடம் மதிய உணவை அனுப்புமாறு கூறிச் செல்வர். அப்பொழுது தங்கை நீங்கள் இருக்கும் இடத்தை எப்படி அறிவது என்று கேட்கும்போது, நாங்கள் செல்லும் வழியில் கோடு கிழித்துச் செல்கிறோம் அதைப் பார்த்து வா என்பர். அக்காலத்தில் அவர்களின் நிலத்துக்கு அருகில் ஒரு பூதம் வசித்து வந்தது. அது அந்த கோட்டை அழித்து விட்டு தன் வீட்டுக்கு கோட்டைப் போட்டுவிடும். அந்த கோட்டைப் பார்த்துச் சென்ற அவர்களின் சகோதரியைச் சிறை பிடித்துவிடும். சாயங்காலம் சகோதர்கள் ஆறு பேரும் தம் தங்கையைக் காணவில்லை என்று அந்த கோட்டு வழியே பார்த்துச் செல்லும்போது அவர்களை பாதாளச் சிறையில் அடைத்துவிடும்.

சிறிது காலத்திற்குப் பிறகு அந்த அப்பா அம்மாவிற்கு இன்னதொரு மகன் பிறப்பான். அவன் பெயர் பொக்கத்தி - கரோஷிக். அவன் மிகப் பெரிய பலசாலியாக வளர்ந்தான். பெரிய பெரிய பாறைகளை எல்லாம் அனாசயமாக தூக்கிவிடுவான். ஒரு நாள் அவன் தம் தாய் தந்தையரிடம், தமக்கு முன் ஏதேனும் சகோதர சகோதரிகள் பிறந்தனரா என்று கேட்பான். அப்பொழுது அவன் தாய் தந்தையர் நடந்த கதையைக் கூறுவர். உடனே பொக்கத்தி - கரோஷிக் தன் சகோதர சகோதரியை மீட்டு வருவேன் என்று கூறி, அதற்க்கு ஆயுதம் வேண்டும் என்று கூறி மிகப் பெரிய இரும்பு பாளத்தை கொல்லனிடம் கொண்டு பொய் கொடுப்பான். கொல்லனும் அவனுக்கு வேண்டி மிகப் பெரிய வாள் செய்து கொடுப்பான். பொக்கத்தி - கரோஷிக் அந்த வாளை எடுத்து வானில் வீசி, அது திரும்பி வரும் போது தன்னை எழுப்புமாறு கூறி தூங்கச் செல்வான் . இப்படியாக அவன் பன்னிரண்டு நாட்கள் தூங்கினான். பதிமூன்றாம் நாள் அந்த வாள் பெரிய சத்தத்துடன் திரும்பி வரும். அவன் தாய் தந்தையர் அவனை எழுப்புவர். அவன் துள்ளி எழுந்து முஷ்டியை நீட்டினான். அப்பொழுது வாள் அவன் முஷ்டியில் பட்டு இரண்டாக உடைந்தது. இந்த வாள் சரிப்படாது என்று கொல்லனிடம் சென்று புதிய வாள் செய்யச் சொன்னான். கொல்லனும் முன்னைக் காட்டிலும் பெரிய வாள் செய்து கொடுப்பான். பொக்கத்தி - கரோஷிக் அந்த வாளை வானில் தூக்கி எறிந்து விட்டு தூங்கச் செல்வான். பதிமூன்றாம் நாள் எழுந்து முஷ்டியை நீட்டுவான். அப்பொழுது அந்த வாள் அவன் முஷ்டியில் பட்டு சிறிது முனை மழுங்கும். இந்தவாள்தான் சரியானதென்று அதை எடுத்துக்கொள்வான். அந்த வாளை எடுத்துக்கொண்டு தன் சாகோதர சகோதரியை மீட்கச் செல்வான். அங்கு அந்த பூதத்துடன் மோதி தன் சகோதர சகோதரிகளை மீட்டு வருவான்.

ஆனால் இவன் சகோதரர்களுக்கு இவன் யாரென்று தெரியாது. அதனால் அவன் மீது பொறாமை கொண்டு அவன் தூங்கும் பொழுது அவனை ஓக் மரத்துடன் சேர்த்து கட்டி போட்டுவிட்டுச் செல்வார்கள். பொக்கத்தி - கரோஷிக் தூங்கி எழுந்ததும் தன்னை மரத்திலிருந்து அவிழ்த்துவிட்டு தன் சகோதரர்க ள் தனக்குச் செய்த துரோகத்தை எண்ணி வருந்தியபடி நடந்து செல்வான். அப்படி செல்லும் வழியில் அவனுக்கு மலை நகர்த்தி சிவெர்னி - கொராவுடன் நட்பு கிடைக்கும். சிவெர்னி - கொரா மலைகளை நகர்த்தும் திறமை கொண்டவன். இதே போன்று இவர்களுக்கு மரம் பெயர்க்கும் வெர்த்தி-தூபுவுடனும் மீசை முறுக்கி ஆற்றின் வெள்ளம் பிளக்கும் குருத்தி-யூசுவுடனும் நட்பு கிடைக்கும். இவ்வாறாக நால்வரும் சேர்ந்து செல்வார்கள். வழியில் ஒரு குடிசை காலியாக இருக்கும். நால்வரும் அதில் தங்க முடிவெடுப்பார்கள். பொழுது விடிந்ததும் சிவெர்னி - கொராவை சமைக்க சொல்லிவிட்டு மூவரும் வேட்டையாடச் செல்வார்கள். சிவெர்னி - கொரா சாப்பாடு செய்து முடித்ததும் கதவு தட்டப்படும். அப்பொழுது அந்த கதவைத்திறந்து ஒரு குரலிகிழவன் வந்தான். அவன் தாடி ஐந்து அடி நீளத்திற்கு அவன் பின்னால் தொங்கியது. அவன் சிவெர்னி - கொராவை பிடித்து தூக்கி ஆணியிலே தொங்கவிட்டான் . பிறகு அங்கு இருந்தவற்றை அனைத்தையும் சாப்பிட்டு விட்டுச் சென்றுவிடுவான். பிறகு சிவெர்னி - கொரா எப்படியோ ஆணியிலிருந்து இறங்கி சாப்பாடு செய்யும்பொழுது அவன் நண்பர்கள் வந்துவிடுவார்கள். என்ன நீ இன்னும் சாப்பாடு தயாரிக்கவில்லையா என்று கேட்பார்கள். அதற்க்கு சும்மா நேரமாகி விட்டது என்பான் சிவெர்னி - கொரா. இதற்க்கு அடுத்த நாட்களில் வெர்த்தி-தூபுவுக்கும் குருத்தி-யூசுவுக்கும் இதே போன்று நடக்கும்.

நான்காவது நாள் பொக்கத்தி - கரோஷிக் உணவு தயாரிப்பான். அன்றும் அந்த குரலிகிழவன் வருவான். வந்து பொக்கத்தி - கரோஷிக்கை பிடித்து ஆணியில் மாட்ட அவன் சிண்டைப் பிடிக்க முயல்வான். உடனே பொக்கத்தி - கரோஷிக் நீ அப்படிப்பட்டவனா என்று கூறி அவன் தாடியைப் பிடித்து இழுத்துச் சென்று ஓக் மரத்தை இரண்டாகப் பிழந்து அந்தப் பிழவில் கிழவனின் தாடி மாட்டிக்கொள்ளும் படி செய்வான். பின் தன் நண்பர்கள் வந்தவுடன் அவர்களிடம் நடந்ததைக் கூறுவான். அவன் நண்பர்களும் அவனிடம் மற்ற மூன்று நாட்களில் நடந்தவற்றைக் கூறுவார்கள். இப்படிப் பட்ட கிழவனை விடக் கூடாது என்று சொல்லி பொக்கத்தி - கரோஷிக் தன் நண்பர்களுடன் செல்வான். அந்த குரலிகிழவன் ஓக் மரத்தை தாடியுடன் இழுத்துக்கொண்டு தடம் விட்டுச் சென்றிருப்பான். அதைப் பார்த்து நால்வரும் செல்வர். அது ஒரு
குழியைச் சென்றடையும். அந்த குழிக்குள் பொக்கத்தி - கரோஷிக் இறங்குவான். அங்கு ஒரு அழகிய பெரிய மாளிகை இருக்கும். அங்கு ஒரு மிகச் சிறந்த அழகியாகிய ஒரு அரசிளங்குமரி இருப்பாள். அவளிடம் பொக்கத்தி - கரோஷிக் நீ எப்படி இங்கு வந்தாய் என்பான். அதற்க்கு அந்தப் பெண் தன்னை இந்த கிழவன் சிறை பிடித்திருக்கிறான் என்பாள். பொக்கத்தி - கரோஷிக் தான் அவளை மீட்பதாகக் கூறி கிழவனுடன் சண்டையிட்டு அவனைக் கொல்வான். பிறகு அந்த மாளிகையில் இருந்த செல்வங்களை எடுத்து மூட்டையாகக் கட்டி தான் இறங்கி வந்த கயிற்றில் கட்டி மேலே அனுப்புவான். கடைசியாக இளவரசியை அனுப்பிவிட்டு தான் ஏறக் காத்திருப்பான். அப்பொழுது அந்த மூவரும் எப்படியாவது பொக்கத்தி - கரோஷிக்கை கொன்று விட்டால் தாங்களே இளவரசியையும் செல்வங்களையும் அடையாலாம் என்றெண்ணிக் கொள்வார்கள். இதை எப்படியோ உணர்ந்த பொக்கத்தி - கரோஷிக் கடைசியாக ஒரு பெரிய பாறாங்கல்லை கட்டி அனுப்புவான். நண்பர்கள்பாதி தூரம் அதைத் தூக்கி விட்டுவிடுவார்கள். பாறாங்கல் கீழே விழுந்து நொறுங்கிவிடும். பொக்கத்தி - கரோஷிக் கீழேயே மாட்டிக்கொள்வான்.

பொக்கத்தி - கரோஷிக் அந்த குழிக்குள் நடந்து செல்லும்போது அங்கு ஒரு கழுகுக் கூட்டில் கழுகு குஞ்சுகள் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும். அவற்றிக்கு தன் சட்டையை போர்த்தி கதகதப்பு அளிப்பான். கொஞ்ச நேரத்தில் அங்கு வரும் பெரிய கழுகு இதைப் பார்த்து தான் பொக்கத்தி - கரோஷிக்கிற்கு என்ன உதவி செய்ய என்று கேட்கும். அதற்க்கு பொக்கத்தி - கரோஷிக் தன்னை மேலே கொண்டு சேர்க்குமாறு கூறுவான். கழுகும் அவ்வாறே செய்யும். பிறகு பொக்கத்தி - கரோஷிக் மூவரையும் தேடிச் செல்வான். அவர்கள் அரசிளங்குமரியின் அரண்மனையில் இருப்பார். பொக்கத்தி - கரோஷிக் அங்கு சென்றதும் அவர்கள் பொக்கத்தி - கரோஷிக் தங்களைக் கொன்று விடுவான் என்றே நினைத்தனர். ஆனால் பொக்கத்தி - கரோஷிக் தன் சகோதரர்களே தன்னை ஏமாற்றிய பிறகு நீங்கள் எம்மாத்திரம் என்று கூறி அவர்களை மன்னிப்பான். பிறகு அந்த அரசிளங்குமரியைக் கல்யாணம் செய்துகொண்டு நன்றாக வாழ்வான்.

Thursday, February 11, 2010

அக்னி - III ஏவுகணை வெற்றி

இந்த வாரம் இந்தியா அக்னி - III ஏவுகணையை தொடர்ந்து மூன்று முறையாக பரிசோதித்துப் பார்த்து வெற்றி கண்டுள்ளது. இது மிகப் பெரிய சாதனை. ஏனெனில் இந்த ஏவுகணை கிட்டத்தட்ட 80 முதல் 85% வரை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள ஏவுகணைகளில் அக்னி - III தான் அதிகதூரம் செல்லக் கூடியதும் அதிக எடையை தாங்கிச் செல்வதும் ஆகும். அக்னி - III, 3500 கி.மீ செல்லக்கூடியது. பரிசோதனையின் போது அக்னி - III தன்னுடைய முழு பரிசோதனை தூரமான 3500 கி.மீ தூரம் கடந்து இலக்கை சரியாகத் தாக்கியது. சோதனையின் போது அக்னி - III வளிமண்டலத்தில் 350 கி.மீ உயரம் சென்றது. தன்னுடைய பயண தூரத்தை 800 நொடிகளில் கடந்தது. அக்னி - III அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் ஆற்றல் கொண்டது. பரிசோதனையின் போது அணு ஆயுத simulator முழுவதுமாக பரிசோதனை செய்யப் பட்டு அதுவும் வெற்றி கண்டது. இந்தப் பரிசோதனையில் அணு ஆயுதங்களுக்குப் பதிலாக வேதியியல் ஆயுதங்களைத் தாங்கிச் சென்றது. அக்னி - III இன் வெற்றி இந்தியாவின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. இது இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி. இவ்வெற்றியின் மூலம் அக்னி - III ஐ ராணுவத்தில் சேர்க்கும் பணி ஆரம்பம் ஆகியுள்ளது. இந்தியா அடுத்து தன்னுடைய இலக்காக 5000 கி.மீ தூரம் தாக்கவல்ல அக்னி V ஏவுகணையை இந்த ஆண்டு இறுதியில் பரிசோதிக்க உள்ளது.

DRDO மற்றும் மற்ற பிற இந்திய விஞ்ஞானிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் .

Wednesday, February 10, 2010

உலகில் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!

சென்ற வாரம் நாங்கள் எங்கள் ஒன்ற விட்ட பாட்டிக்கு உடல் நிலை சரியில்லையென்று,அவரைப் பார்க்க எங்கள் சொந்த ஊருக்கு அருகிலிருக்கும் கிராமத்திற்குச் சென்றிருந்தோம். நாங்கள் பேருந்தில் போய் இறங்கிய இடம் அந்த ஊரின் விலக்கு. அந்த விலக்கிலிருந்து ஊருக்குள் செல்ல அந்த நேரத்தில் பேருந்து கிடையாது. 1.5 km நடந்துதான் செல்லவேண்டும். நாங்கள் ஒரு பத்து பேர் சென்றிருந்தோம். இந்த மட்ட மத்தியானத்தில் எப்படியடா வெயிலில் செல்வது என்று மலைத்திருந்த போது, அந்த இடத்திலிருந்த கிராமத்தாள் ஒருவர் வந்து எங்கு செல்ல வேண்டும் என்று விசாரித்தார். எங்கள் சித்தப்பா பெயரைச் சொன்னவுடன்,ஒ அவர் வீட்டுக்கா என்று சொல்லி வாங்க நான் கொண்டு போய் பைக்கில் கொண்டு போய் விடுகிறேன் என்றார். இன்னும் ஒருத்தர் இந்தாங்க பைக் சாவி, நீங்கள் ஊருக்குள் ஓட்டிச் செல்லுங்கள் என்றார். இன்னும் கொஞ்ச நேரத்தில் இன்னும் இரண்டு பேர் ஊர்க்குள்ளிருந்து பைக்கில், எங்களை அழைத்துச் செல்ல வந்தனர். இப்படியாக நாங்கள் அனைவரும் நடக்காமல் சொகுசாக பைக்கில் சென்றோம். அப்பொழுது ஏனோ, சென்னையில் எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருப்போரின் பெயர் என்னவென்று தோன்றியது. கடைசிவரை அவர் பெயர் தெரியவில்லை. எங்களை பைக்கில் அழைத்துச் சென்ற கிராமத்தார்கள் பெயரும் எனக்குத் தெரியாதுதான் . இருந்தாலும் இந்த இரண்டு தெரியாதுகளுக்கிடையே உள்ள இடைவெளி மிகப் பெரியது.

இன்னவொரு சம்பவம், நான், மது, எங்கள் அம்மா மற்றும் எங்கள் சித்தப்பா நால்வரும் எங்கள் குல சாமியைக் கும்பிட்டுவிட்டு பார்த்திபனூரில் பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தோம். காத்துக்கொண்டிருந்த இடைவெளியில் எங்கள் அம்மா டீக் கடையில் ஒரு காபி சொல்லச் சொன்னார். காபி சொல்லிவிட்டு காத்துக் கொண்டிருந்த போது எங்கள் ஊருக்குச் செல்லும் பேருந்து வந்துவிட்டது. எங்கள் அம்மா காபி குடிக்க நேரமில்லை, பேசாம காபிக்கு காசு கொடுத்துவிட்டு வா, பேருந்துக்குச் செல்வோம் என்றார். மது காபிக்கு காசு கொடுத்து விட்டு, பேருந்து வந்துவிட்டது அதனால் காபி வேண்டாம் என்று சொல்லியவுடன், அந்த கடைக்காரர் காசு வாங்கமறுத்துவிட்டு
நீங்கள் பேருந்து ஏறச் செல்லுங்கள் என்றார். அந்த பேருந்து நிறுத்தத்தில் இது போன்ற பல வேண்டாம்களை அவர் கேட்டிருப்பார். அவ்வளவு வேண்டாம்களுக்கும் அவர் காசு வேண்டாம் என்றால் அது அவருக்கு மிகப் பெரிய நட்டம்தான். இருந்தாலும் போட்ட காபிக்கு காசு வேண்டாம் என்று சொல்லுவது அவருடைய பெரிய மனதுதான்.

உலகில் இத்தகைய நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!

Tuesday, February 2, 2010

தமிழ்ப் படம் - விமர்சனம்

நான், மது மற்றும் கார்த்தி மூன்று பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தமிழ்ப்படம் பார்க்கப் போனோம். அது தமிழ்ப் படம் !.

தமிழ்ப் படம் - பல படங்களை கலாய்ப்பதற்க்கென்றே எடுக்கப்பட்ட படம். படத்தில் ஆரம்பமே கருத்தம்மா படத்தில் பெண் குழந்தைகளை கொல்வதற்காக கள்ளிப் பால் கொடுப்பதுபோல் கதாநாயகனுக்கும் P.R.S கள்ளிப் பால் கொடுக்கும்போதே தெரிந்துவிடும் இது கலாய்ப்பதற்க்கென்றே எடுக்கப்பட்ட படம் என்று. படத்தில் கதை என்பதே கிடையாது. பிறகு எப்படி கதாநாயகனுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் கதை சொல்லி இருப்பார்கள். எல்லாம் நம்ம சத்யராஜ் படத்துல வர்ற மாதிரி "சார், நீங்க கீழ விழுந்த துப்பட்டாவ எடுத்து மேலே வீசுறீங்க, அது துபாயில போய் விழுகுது. அங்க ஒரு பாட்டு, துப்பட்டா துப்பட்டா" ங்குற ரேஞ்சுல தான் சொல்லி இருப்பாங்க்ய .. நிஜாமாவே படத்துல கதையே கிடையாது. படத்தின் ஒரே குறிக்கோள், இதற்க்கு முன் வந்த பிரபல படங்களைக் கலாய்ப்பதுதான். குறைஞ்சது 20,30 படங்களைக் கலாய்த்திருப்பார்கள். இப்படத்தில் வரும் இரண்டு பாடல்கள் fm சேனல்களில் இடம்பிடித்துவிட்டன. அதில் ஒரு பாட்டான "பச்ச மஞ்ச கறுப்புத் தமிழனும் நான்தான்" என்ற பாடல் கேட்க நன்றாக உள்ளது. இன்னொரு பாடல் இது வரை வந்த தமிழ்ப் படங்களில் அமைந்த புரியாத சொற்களைக் (டாலாக்கு டோல் டப்பிமா, டயலாமோ டயலாமோ) கோர்த்து எழுதியிருக்கிறார்கள்.

முதல் பாதிவரை இந்த கலாய்ப்புகள் ரசிக்கத் தோன்றும் ஆனால் முழுப் படமுமே அப்படி அமையும்போது கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருந்தது. படத்தின் இடைவேளையின் போது "இனி சரவெடி" என்று கார்டு போட்ட போது நானும்ஏதோ இனி கதை சீரியஸ் ஆகப் போகப்போதுன்னு நினச்சேன். ஆனா படம் அதுக்கடுத்தும் கலாயப்பதாகவே போனது. கதாநாயகி இருந்தா பெரிசா கலாய்க்க முடியாதுன்னு நினச்சாய்ங்களோ என்னமோ தெரியல, எப்போதும் போல் இப்படத்திலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனா மொக்கையா கலாய்ப்பவர்களுக்கும் அந்த கலாய்ப்ப ரசிப்பவர்களுக்கும் இந்த தமிழ்ப் படம் புடிக்கும்.