Tuesday, July 27, 2010

கடல் புறா - 4


இப்பதிவு இதற்க்கு முந்திய பதிவான கடல் புறா -3 இன் தொடர்ச்சியே ஆகும்.

நம் தலைவன் இளைய பல்லவன் அக்ஷய முனையில் இருக்கும் காலத்தில் இணையற்ற மரக்கலமான கடல் புறாவை நிர்மாணிக்கிறான். இந்த இடத்தில் சாண்டில்யன் மரக்கலம் குறித்த பல அரிய தகவல்களை அளிக்கிறார். கடல் புறா வடிவத்தில் ஒரு புறாவின் வடிவத்தை ஒத்திருக்கிறது. இதனை இளைய பல்லவனின் உபதலைவனும் பாலூர்ப் பெருந்துறை சுங்க அதிகாரியுமான கண்டியத்தேவன் , இளைய பல்லவனின் அறிவுரைப்படி நிர்மாணிக்கிறான்.இப்படியாக கடல் புறா ஒரு இணையற்ற போர்கலமாக உதயமாகிறது. அதன் இரண்டு இறக்கைகளின் அடியில் பல போர்க்கருவிகள் மறைந்திருக்கின்றன. நம் இளைய பல்லவன் பாலூர்ப் பெருந்துறையில் சந்தித்த வீட்டுப் புறாவின் (காஞ்சனா தேவி) நினைவாக இதற்க்கு கடல் புறா என்று பெயரிடுகிறான்.

அக்ஷய முனையை நீங்கும் படைத்தலைவன், பல வர்மனுடன் கடல் மோகினி என்னும் மாநக்காவரத்தை நோக்கிச் செல்கிறான். இந்த மாநக்காவரம் இன்றைய greater Nicobar Island என்று நான் நினைக்கிறேன். அப்படிச் செல்லும் வழியில் இரண்டு கலிங்க போர்க்கலங்களுடன் போர் ஏற்படுகிறது. அப்போரில் நம் படைத்தலைவன் சிறப்பாகச் செயல்பட்டு அந்த இரண்டு மரக்கலங்களையும் சிறை பிடிக்கிறான். இங்கு எதிர்பாராத திருப்பமாக காஞ்சனா தேவியும் அவளுடைய தந்தை குணவர்மனும் அந்த மரக் காலங்களில் இருக்கிறார்கள். காஞ்சனா தேவியும் குணவர்மனும் வந்த சோழ மரக்கலங்களை இந்த கலிங்க மரக்கலங்கள் முறியடித்து காஞ்சனா தேவியையும் குண வர்மனையும் கைது செய்திருக்கும். இப்படியாக காஞ்சனா தேவியும் குண வர்மனும் இளைய பல்லவனால் மீட்கப்படுவார்கள். அவர்களுடன் சேர்ந்தே இளைய பல்லவன் மாநக்காவரத்தை நோக்கிச் செல்லுவான்.

மாநக்காவரத்தில் படைத் தலைவனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருக்கும். மாநக்காவரம் சோழர்கள் கையில் இருப்பதாகவே நினைத்து இளைய பல்லவன் செல்லுவான் . ஆனால் அதனை கலிங்க நாட்டைச் சேர்ந்த கலிங்க கடற் படைத் தளபதி ஒருவன் கைப்பற்றி இருப்பான். அவன் பெயர் கங்க தேவன். இந்த கலிங்க படைத் தளபதி ஒரு கயவன், அவனும் கொள்ளைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பான். ஆகவே நம் படைத்தலைவன் அவனிடம் தான் கடாரத்தை கொள்ளையடிக்க உதவுதாக ஆசை வார்த்தை கூறி அவனிடம் உறவு கொள்வான். அந்த கயவன் காஞ்சனா தேவி மீது காமம் கொள்வான். கடைசியில் நம் படைத்தலைவன் அவனைக் கொன்று மாநக்காவரத்தைக் கைப்பற்றுவான்.

இதில் சில புரியாத அம்சங்கள் உண்டு . கங்க தேவனிடம் சுமார் ஆயிரம் வீரர்கள் இருப்பார். ஆனால் இளைய பல்லவனிடம் ஐநூறு வீரகளே இருப்பர். ஆரம்பத்தில் இளைய பல்லவன் கங்க தேவனின் ஆட்களை கொன்று விடுவதாக மிரட்டுவான், பிறகு தன் நல்ல உள்ளத்தைக் காட்டி தான் அவர்கள் யாரையும் கொல்ல விரும்பவில்லை என்றும், வேண்டுவோர் அவனுடன் படையில் சேரலாம் என்றும் வேண்டாதோர் கலிங்கம் செல்லலாம் என்றும் கூறுவான். இப்படியாக சுமார் ஐநூறு கங்கதேவனின் ஆட்கள் இளைய பல்லவனுடன் சேருவார்கள் . இதுவரை சரி. இந்த ஆட்களில் பெரும் பகுதியினர் கலிங்க வீரர்கள் . இவர்களைக் கொண்டு கலிங்கத்தை எதிர்க்க இளைய பல்லவன் முடிவு செய்வதுதான் ஆச்சரியமாக இருக்கும் . இவர்கள் ஏன் இளைய பல்லவனுக்கு எதிராக புரட்சி செய்யவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கும்.

இந்த காலகட்டத்தில் இளைய பல்லவனுக்கு காஞ்சனா தேவியுடன் காதல் அதிகரிக்கும் . அத்தகைய சமயங்களில் நமக்கு மஞ்சளழகி மீது அனுதாபமே பிறக்கும்.

மீதி கதை அடுத்து .

photo courtesy : http://artzone.daz3d.com/azfiles/gallery/45/sd/jh7tp8kswlifz0br66tsdqqg2lagre-full.jpg

No comments: