Sunday, August 29, 2010

இனிது இனிது


இன்று Express Avenue Mall இல் சத்யமின் புது தியேட்டரான Escape இல் இனிது இனிது படம் பார்த்தேன். அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாததால் மது வரவில்லை. நான், கார்த்திக் மற்றும் பிரசாத் அண்ணன் போயிருந்தோம். Mall ரொம்ப பெரிதாக இருந்தது. டாய்லெட் யூரினல் எல்லாம் பார்க்க நல்லா இருந்தது ;-). சீட் எல்லாம் நல்ல அகலமாக வசதியாக இருந்தது. Mall இன் basement இல் பார்கிங். இன்னும் mall இன் நிறைய இடங்கள் காலியாக உள்ளன. என்ன ஸ்நாக்ஸ் விலையும் பார்க்கிங் கட்டணுமும் ரொம்ப ஜாஸ்தி ஆக இருந்தது. கோக் ஒரு டம்பளர் 80 ரூபா. பாப்கார்ன் 100 ரூபா. பார்கிங் 3 மணிநேரத்துக்கு 40 ரூபா. படத்து டிக்கெட் விலையைவிட ஸ்நாக்ஸ்க்குத்தான் அதிகம் செலவாச்சு.

படம் தெலுகில் சூப்பர் டூப்பர் கிட் ஆன Happy Days இன் மறு உருவாக்கம். கதை கல்லூரி வாழ்க்கையைப் பற்றியது. ஒரு பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டிலிருந்து கடைசி ஆண்டு வரையிலான நிகழ்ச்சிகளைக் கொண்டது.


இந்த கல்லூரியின் முதலாம் ஆண்டில் சேரும் ஓர் மாணவனின் பார்வையிலிருந்து இக்கதை சொல்லப்படுகிறது. படத்தில் சீனியர் ஜூனியர் பிரச்சினை, ராகிங், காதல், நட்பு என்று எல்லாம் உண்டு. படத்தில் நாலு பசங்க மூணு பொண்ணுங்க. இவர்களுக்கிடையே நட்பு காதல் எல்லாம் ஏற்ப்படுகிறது. இவர்களின் காதல் ஜெயித்ததா, அவர்களின் கல்லூரி வாழ்க்கை எப்படி முடிந்தது என்பதே கதை .

படத்தில் கல்லூரி லூட்டியையும் காதலையும் ஆதாரமாக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. சின்ன சின்ன லூட்டிகள் பார்க்க நன்றாக உள்ளது. அந்தப் பொண்ணு மது பார்க்க நன்றாக இருக்கா. படத்தின் பாடல்கள் இன்னும் கிட் ஆயிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். படத்தில் முகம் சுழிக்கக் கூடிய காட்ச்சிகள் எதுவும் இல்லை. மேலும் படம் பார்ப்பவர்களை நாம் இந்த மாதிரி கல்லூரி வாழ்க்கையை இழந்துவிட்டோமே என்று உணர வைப்பதே அதன் வெற்றிதான் .

படத்தில் சித்தார்த்துக்கும், மதுவுக்கும் நட்பிலிருந்து காதல் பூப்பதும், பிறருடன் பேசுவதால் ஏற்ப்படும் பொறாமையும் நன்றாக உள்ளது. படத்தில் விமலாகவும், அப்புவாகவும் நடித்திருப்பவர்களால் நகைச்சுவை நன்றாக வந்துள்ளது. படத்தில் அர்ஜூனாக வரும் அந்த சீனியர் மாணவன் நன்றாக உள்ளார். இன்னும் முயன்றால் நல்ல திரைப்படம் பெறலாம்.

மற்றபடி படம் பார்க்கக்கூடிய படம்தான்

தாத்தா பாட்டி

எனக்கு சில நாட்களாக ஒரு மாதிரி குற்ற உணர்ச்சியாக இருந்ததது. கடந்த சில நாட்களாக நான் என் பாட்டியை சென்று பார்க்கவில்லை. நான் அவரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி அனுப்பியும், நான் சென்று பார்க்கவில்லை . பொதுவாக தலைமுறை இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கிடையேயான அன்பும் அதிகரிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. ஒரு பாட்டியோ அல்லது ஒரு தாத்தாவோ தன் பேரனிடமோ அல்லது பேத்தியிடமோ கொண்டிருக்கும் அன்பு அவர்களின் மகனோ அல்லது மகளிடமோ கொண்டிருக்கும் அன்பை விட அதிகம் என்பதே என் எண்ணம். அதுபோலவே எதிர்பாலரிடமான அன்பும் இங்கு அதிகம் என்றே எண்ணுகிறேன். அதாவது ஒரு பாட்டிக்கு தன் பேரனிடமும் ஒரு தாத்தாவுக்கு தன் பேத்தியிடமும் பாசம் அதிகமாக இருக்கும். இங்கு வேறுபட்ட இரண்டு தலைமுறைகள் தங்களுக்கிடையே கூட்டணி அமைக்கின்றன. அது ஒத்த கூட்டணியாகவும் அமைகிறது.

இப்படி வேறுபட்ட இரண்டு தலைமுறைகளுக்கிடையே அன்பு அதிகரிக்க காரணம் என்ன?. ஒரு குடும்பத்தில் அப்பாவோ அல்லது அம்மாவோ தன் பிள்ளைகளைக் கண்டிக்கும் போது, வீட்டில் உள்ள எல்லாரும் கண்டிக்கமாட்டார்கள். யாராவது ஒரு சிலர் கண்டிக்காமல் பிள்ளைகளுக்கு ஆதரவாகவோ அல்லது கண்டிகப்படுவதிலிருந்து காப்பாற்றுவதகவோ இருப்பார்கள். அந்த ஒரு சிலர் பெரும்பாலும் தாத்தா பாட்டியாகத்தான் இருப்பார்கள். அதேபோல் அப்பா அம்மா, தாத்தா பாட்டியின் மீது கோவப்படும்போது அங்கு தாத்தா பாட்டிக்கு ஆதரவாக வருவது பேரன் பேத்திகள்தான். இவ்வாறாக இரண்டு வேறுபட்ட தலைமுறைகள் நெருங்கி வருவதில் பாசம் அதிகரிக்கிறது.

இதானாலயே யாரேனும் வயதானவர்களைப் பார்க்கும்போது நமக்கு தாத்தா பாட்டி ஞாபகம் வருகிறது. எனக்கு என் தாய் வழி பாட்டியின் மீது பாசம் அதிகம்.அவரை நான் அம்மாச்சி என்றே அழைப்பேன். அதனாலயே சாலையில் எவரேனும் வயதான பாட்டியை பார்க்கும் போது எனக்கு என் பாட்டி ஞாபகம் வரும். அதனாலயே நான் ஏதேனும் பிட்ச்சை இட்டால் வயதான பாட்டிகளுகே இடுவேன்.

நான் அதிகம் சண்டையிடுவதும் என் அம்மாச்சியிடம்தான். எனக்கு என்னவோ தெரியவில்லை சண்டையானாலும் பாசமானாலும் அவரிடம்தான் காட்டுவேன். என்ன சண்டையானாலும் என்னால் அவரைப் பார்க்காமல் இருக்க முடியாது. எப்படியும் இரண்டொரு நாட்களில் சென்று பார்த்து விடுவேன். அவருக்கு மருந்தும், பிஸ்கட்டும் வாங்கி கொடுப்பது என்னுடைய பணிகளில் ஒன்று. எங்கள் அம்மா எதாவது வாங்க வேண்டும் என்று சொன்னால் அதை தட்டிக் கழிக்கும் நான் என் அம்மாச்சி எதாவது ஒரு மருந்தோ அல்லது பிஸ்கட்டோ வாங்க வேண்டும் என்று சொன்னால் எந்த வேலையின் நடுவிலும் வாங்கி கொடுத்து விடுவேன்.

தாத்தா பாட்டியுடனான பிணைப்பு மிகவும் முக்கியமானது. அது இரண்டு தலைமுறைக்கும் உண்டான பிணைப்பு. ஒரு தலைமுறையின் கலாச்சாரமும்,பண்பாடும் தாய் தந்தையரை விட தாத்தா பாட்டி மூலமாகவே அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது. ஓய்வு நேரத்தில் தாத்தா பாட்டி சொல்லும் கதைகள், அவர்கள் காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் மூலம் அவை கடத்தப் படுகின்றன. இது எந்த ஒரு முயற்ச்சியும் இன்றி தானாக நடைபெறுகிறது. தாத்தா பாட்டிகள் தங்கள் அடுத்த தலைமுறையுடன் ஒத்துப் போவதை விட அதற்கும் அடுத்த தலைமுறையுடன் எளிதாக ஒத்துப் போகிறார்கள் . அவர்களால் தாய் தந்தையரால் ஏற்க முடியாத பிள்ளைகளின் செயல்களைக்கூட தாத்தா பாட்டியினரால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. நான் எங்கள் வீட்டில் அதிக முற்போக்கு சிந்தனை கொண்டவர் என்று கருதுவது எங்கள் அம்மாச்சியைத்தான். எங்கள் தாய் தந்தையரால் ஏற்க முடியாத செயல்களைக்கூட அவரால் ஏற்க முடிகிறது. அது வயது தந்த முதிர்ச்சியா அல்லது தங்கள் பேரன் பேத்தி தலைமுறைகளை நன்கு புரிந்து கொண்ட செயலா என்று தெரியவில்லை.

எப்படியானாலும் தாத்தா பாட்டி மற்றும் பேரன் பேத்திகளுக்கு இடையேயான பிணைப்பு போற்றப்படவேண்டியது.

Thursday, August 26, 2010

இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும் ...


எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு வீரர்கள் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் சச்சின் டெண்டுல்கர். இருவருமே இந்தியாவை பல வகையிலும் பெருமைப்பட வைத்தவர்கள். இருவருடைய சாதனைகளுமே பிரமிக்கப்பட வைப்பவை. எனக்கு ஒருவரை பிடிக்க வேண்டும் என்றால் அவர் இந்தியராக இருக்க வேண்டும் . அவர்கள் இந்தியாவை முற்றிலும் முழுதாக நேசிக்க வேண்டும். ஆனந்த் மற்றும் டெண்டுல்கர் இருவருமே அப்படிப்பட்டவர்கள் தான் . இருவருமே தங்களை இந்தியன் என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமைப்படுபவர்கள்.

இதில் விஸ்வநாதன் ஆனந்த் நான்கு முறை உலக சாம்பியன் ஆனவர். இந்திய அரசு அவருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும், பத்ம விருதும் அளித்து தன்னை பெருமைபடுத்திக் கொண்டது.

இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் சில நாட்களுக்கு முன் ஹைதராபாத் பல்கலைகழகம் ஆனந்திற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க எண்ணியது. அதற்க்கு இந்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். அதற்காக விண்ணப்பத்தை அனுப்பிய போது தான் பிரச்சினை ஆரம்பித்தது. இந்திய மனிதவளத்துறை அமைச்சகத்தின் இயக்குனரான சஹாய் , ஆனந்த் இந்திய குடிமகன் அல்ல என்று பிரச்சினையை ஆரம்பித்தார்.

ஆனந்த் கடந்த சில ஆண்டுகளாக ஸ்பெயினில் குடியிருந்து வருகிறார். அவர் அதிக அளவு ஐரோப்பியன் நாடுகளில் நடந்து வரும் செஸ் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால் ஸ்பெயினில் குடி இருப்பது அவருக்கு சவுகரியமாக உள்ளது. அதானலயே அவர் அங்கு குடி இருக்கிறார். இருந்தபோதிலும் அவர் இந்திய குடிமகனாகவே உள்ளார். இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருக்கிறார். எல்லாவற்றிர்க்கும் மேலாக அவர் பங்கு பெரும் எல்லா போட்டிகளில் இந்திய மூவர்ணக்கொடியைத் தாங்கி இந்தியாவின் சார்பாகவே விளையாடுகிறார்.

இந்த நிலையில் சஹாய்க்கு , ஆனந்த் இந்தியரா இல்லையா என்ற சந்தேகம் இப்பொழுது வந்திருக்கிறது. இது வெறும் சந்தேகமா இல்லை இதற்க்கு பின்னணியில் வேறு ஏதானும் உள் நோக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை . எனக்கு தமிழன், தெலுங்கன், வட இந்தியன் என்று பேதம் பிரித்துப் பார்ப்பது என்னை அதிகம் கோபமூட்டும் செயல் . நான் எப்பொழுதும் அனைவரையும் இந்தியன் என்றே எண்ணி வந்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது நடைபெறும் நிகழ்ச்சிகளை கண்டால் ஆனந்த் தமிழன் என்பதால் தான் இத்தனை வேறுபாடா, துவேசமா என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆனந்த் எப்பொழுதும் தன்னை இந்தியன் அல்லாதவனாக காட்டிக்கொண்டதே இல்லை. அவரை தாங்கி வரவேற்று தங்கள் நாட்டுக் குடியுரிமையைத் தர எவ்வளவோ பணக்கார நாடுகள் தயாராய் உள்ளன . இருந்தாலும் ஆனந்த் இந்தியாவே கதி என்றிருக்கிறார். அவரின் தேசப் பற்று குறித்து எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனந்த் போன்றவர்களுக்கே இத்தகைய கதி என்றால் சாதாரணமானவர்களை என்ன சொல்லுவது.

இவ்வளவும் நடந்த பிறகு இந்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் இப்பொழுது வந்து மன்னிப்பு கேட்கிறார். ஆனால் ஆனந்த் அந்த கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்க மறுத்துவிட்டார். எனக்குத் தெரிந்து ஆனந்த் செய்தது மிகச் சரி. கபில் சிபல் இந்திய சிவப்பு நாடாத்தன்மையை இதற்க்கு குற்றம் சாட்டுகிறார்.

இந்தியாவில் பிறந்த போதும் அமெரிக்காவில் குடியேறி அமெரிக்கராகவே மாறி விட்ட கல்பனா சாவ்லா இறந்த போது இந்த நாடே துக்கம் கொண்டாடியது , அவர் பெயரில் விருது எல்லாம் அறிவித்தது. அதே போன்று அமெரிக்கராக மாறி விட்ட சுனித வில்லியம்ஸ் குறித்து இந்த நாடே பெருமைப்படுகிறது. இதே போன்று சிறிது காலத்திற்கு முன் நோபெல் பரிசு வென்ற வெங்கி ராமகிருஷ்ணன் குறித்து அதிகம் பேசினார்கள் . இத்தனைக்கும் வெங்கி, நம் மக்களெல்லாம் அவருக்கு பாராட்டு மெயில்களா அனுப்பியபோது , இவர்கள் என் இன்பாக்ஸ் ஐ தேவை இல்லாமல் ரொப்புகிறார்கள் என்று கவலைப்பட்டார். நாம் ஒன்றை மறந்து விடுகிறோம் இவர்கள் இந்தியா வேண்டாம் என்று சென்று வேறு நாட்டு குடியுரிமை பெற்றவர்கள். அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை, வரவேற்ப்பில் ஒரு சிறு பகுதியாவது இந்தியாவே கதி என்று இந்தியாவிற்காக பங்கேற்ப்பவர்களுக்கு நாம் கொடுக்கிறோமா என்று கேட்டால் அது இல்லை .

இதிலும் பெரும் கேடு என்னவென்றால் இதுவரை இந்த பிரச்சினையில் தமிழக தலைவர்கள் எவரும் வாய் திறக்காததுதான். நம் முதல்வர் இன்னும் வாய் திறக்கவில்லை . இது போன்ற பிரச்சினை இந்நேரம் ஏதேனும் மராட்டியருக்கு ஏற்ப்பட்டிருந்தால் இந்நேரம் பாராளுமன்றமே கதி கலங்கி இருக்கும். கருணாநிதிக்கு ஜாதி பாத்து ஆதரவு கொடுத்து ஒட்டு வாங்குவதுதான் குறி. அவர் சூத்திரர் , சூத்திரர் அல்லாதோர் என்று எப்போதும் பிரித்து பார்த்து தான் ஆதரவு கொடுப்பர் . என்ன பண்ணுவது ஆனந்த் மேட்டுக் குடி இளைஞராய் போய் விட்டாரே பின் எப்படி ஆதரவு கிடைக்கும் . இன்னமும் நாம் எத்தனை காலத்திற்குதான் இந்த ஜாதி, இன,வர்க்க வேறுபாடுகள் பார்க்கப் போகிறோமோ தெரியவில்லை.


இந்தியாவைப் பற்றிப் பெருமிதமும் , இந்திய ஒற்றுமையில் அதிக ஈடுபாடும் கொண்ட என்னைப் போன்றவர்களையே இப்படி பாகுபாடு குறித்து சிந்திக்கவைத்தால் இந்த நாடு உருப்படாது. ஆனந்த் போன்ற உண்மையான இந்திய குடிமகனுக்கு இந்த கதி என்றால் , பின் இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்.

photo courtesy : The Hindu
http://www.thehindu.com/news/national/article591737.ece
http://www.thehindu.com/news/article593969.ece
http://www.thehindu.com/news/national/article591764.ece

http://www.thehindu.com/news/national/article592239.ece

http://www.thehindu.com/news/national/article590162.ece

Friday, August 20, 2010

மீண்டும் ஜீனோ - ஒரு பார்வை


மது சில நாட்களுக்கு முன் சுஜாதாவின் "மீண்டும் ஜீனோ" புத்தகத்த வாங்கி வந்திருந்தான் . எனக்கு பெரிய ஆசிரியர்கள் எழுதிய புத்தகத்தைபடிக்க வேண்டும் என்று பெரிதாக ஆர்வம் கிடையாது. கிடைக்குற புத்தகத்த எடுத்துப் படிப்பேன். பெரும்பாலும் வரலாற்று புத்தகங்களை அதிக ஈடுபாட்டுடன் படிப்பேன். அதனாலையே வரலாற்று நாவல்களும் ரொம்ப பிடிக்கும். பெரும்பாலும் நவீனத்துவ நாவல்களை அதிகம் விரும்புவதில்லை. என் நண்பர்கள் கூட என்னை, "இவன் இன்னைக்கு பேப்பர கூட இருபது வருஷம் கழித்துதான் எடுத்து படிப்பான்டா" என்று கேலி பண்ணுவார்கள்.

கொஞ்ச நாட்களுக்கு முன்னாள் எடுத்து படித்த "கடல் புறா" முடிந்துவிட்டபடியால் சில நாட்கள் வெறுமையாக இருந்தது. அப்பொழுதுதான் "மீண்டும் ஜீனோ" என் கண்ணில் பட்டது. அந்த புத்ததகத்தை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எடுத்து படிக்க ஆரம்பித்தேன். இது சுஜாதா எழுதி விகடனில் பிரசுரமான "என் இனிய எந்திரா"வின் அடுத்த பகுதி. இது என் இனிய எந்திராவின் அடுத்த பகுதி என்று தெரிந்த உடன் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. நான் ஐந்தாவதோ, ஆறாவதோ படிக்கும்போது என்று நினைக்கிறேன், அப்பொழுது தூர்தர்சனில் சிவரஞ்சனி நடித்து என் இனிய எந்திரா தொடராக வந்தது. அப்பொழுது அந்த இயந்திர நாயைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கும். அது மிகச் சின்ன வயதில் பார்த்ததால் அதன் கதை எதுவும் ஞாபகம் இல்லை.


இக்கதை 2020 இல் நடைபெறுகிறது. என்னால் அவ்வளவு சீக்கிரம் இந்த கதையில் வருகிறபடி நடந்துவிடுமா என்று சந்தேகம் உள்ளது. ஏனென்றால் அந்த அளவு முன்னேறிய தொழில்நுட்பங்கள் இக்கதையில் இடம்பெறும். 2020 க்கு இன்னும் பத்து வருடங்களே உள்ளன அதற்குள் ரோபோட்கள் இத்தனை சீக்கிரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிடுமா என்று தோன்றவில்லை. இக்கதையில் கூறியுள்ள அளவிற்கு முன்னேற்றம் சாத்தியமா என்பது சந்தேகமே. ஆனாலும் ஆசிரியரைப் பாராட்டனும். இந்த அளவிற்கு சிந்தித்து கண் முன் இல்லாத ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.

இக்கதை என் இனிய இந்திராவின் முன்னோட்டத்துடன் தொடங்கும். என் இனிய இந்திராவில் ஜீவாவின் ஆட்சியை முறியடித்து புரட்சி செய்து நிலா, ரவி, மனோ இவர்கள் மூவரும் ஆட்சி அமைப்பார்கள். கடைசியில் இப்புரட்சியே ஒரு நாடகம் என்றும் மனோவும் , ரவியும் திட்டமிட்டே சதிச் செயல் புரிந்து நிலாவை ஒரு பொம்மை மாதிரி பாவித்து ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று கூறப்படும் . என் இனிய எந்திராவின் இறுதியில் ரவி, ஜீனோ என்னும் இயந்திர நாய் சிந்திக்கத் தொடங்கிவிட்டது என்று கூறி அதை அக்கக்காக பிரித்து அழித்து விடுவதுடன் முடிவடையும் .

மீண்டும் ஜீனோவில் ஜீனோ , தான் சாகவில்லை என்றும் தன்னை அழித்துவிடுவார்கள் என்று தான் முன்னமே யூகித்ததால் தான், தன்னைப் போல் ஒரு இயந்திர நாயை கொண்டு கடைசி நிமிடத்தில் தப்பித்ததாகவும் கூறுவதிலிருந்து தொடங்கும் . ஜீனோ, அரசியாகிய நிலாவிற்கு மட்டும், தான் ஜீனோ என்றும் , ரவிக்கும் மனோவிற்கும் ஒரு சாதாரண இயந்திர நாயாகவும் காட்டிக்கொள்ளும். நிலாவை ஒரு பொம்மை அரசியாக வைத்து ரவியும் , மனோவும் நாட்டை ஆளுவார்கள். அரசியாக இருந்த போதிலும் நிலாவிற்கு எந்த ஒரு சுதந்திரமும் இருக்காது. ஜீனோ, நிலாவிற்கு நாட்டை ஆளுவதற்கு பல வகையிலும் யோசனை சொல்லும். இதனால் ரவிக்கும் ,மனோவிற்கும் சந்தேகம் வந்துவிடும். அவர்கள் ஜீனோவை கண்டு பிடித்து அழித்து விடுவார்கள் . இருந்த போதிலும் ஜீனோ ஒரு விஞ்ஞானியின் உதவி கொண்டு திரும்பவும் பிழைத்து வேறு ஒரு உருவம் கொண்டு நிலாவை வந்தடையும்.

இதில் மனோவும் ரவியும் நிலாவிற்கும், தாங்கள் ஏற்ப்பாடு பண்ணிய லேபில் உருவாக்கப்பட்ட ஒரு இளைஞனுக்கும் estrogen, androgen நும் கொடுத்து நிலாவை ஒரு காமப் பெண்ணாக மாற்றிவிடுவார்கள். இதன் மூலம் அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோவை விவியில் ஒளிபரப்பி நிலாவின் செல்வாக்கை மக்களிடையே குறைப்பது அவர்கள் திட்டமாக இருக்கும் . கடைசியில் அவர்கள் தங்கள் நோக்கத்தில் வெற்றி பெற்றார்களா , ஜீனோ , ரவியையும் மனோவையும் அழித்து நாட்டில் மாறுதலைக் கொண்டுவந்ததா , கதையின் முடிவில் ஜீனோ என்ன ஆகும் என்பதே மீதி கதையாக இருக்கும் .

இக்கதையானது ஜீனோவைச் சுற்றியே நடைபெறும் . நமக்கும் ஜீனோ என்னவோ ஒரு ஹீரோ போன்றே எண்ணத்தோன்றும், கதையின் முடிவில் ஜீனோவிற்கு எதுவும் ஆகிவிடுமோ என்று நமக்கும் பயமாக இருக்கும் . இதுவே ஆசிரியரின் வெற்றி. இக்கதை ஒரு விறுவிறுப்பான திரில்லர் கதைக்கு இணையாக இருக்கும். வெளி உலகிற்கு அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருப்பதாக தோன்றும் , மேலும் மக்களிடையே பெரும் ஆதரவு கொண்ட நிலாவினால் ரவியையும், மனோவையும் அழிக்கவோ அல்லது கைது செய்யவோ முடியவில்லை என்பது கொஞ்சம் நம்ப முடியாததாக உள்ளது. ஏனெனில் நிலாவிற்கு அந்த அளவிற்கு மக்களிடம் செல்வாக்கு இருக்கும். மேலும் ஆசிரியர் கதையில் இன்னும் நிறைய அறிவியல் அற்புதங்களை கூறி இருக்கலாமோ என்று தோன்றுவதை மறுக்க முடியவில்லை. கடைசிவரை விவியையும், லேசர் துப்பாக்கிகளையும், காந்த கார்களையும் கொண்டு கதையை ஓட்டி இருப்பார்.

கதையின் இறுதியில் ரவி மற்றும் மனோவின் மறைமுக ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற இளைஞர்கள் குடித்து விட்டு அனைத்தையும் போட்டு உடைப்பதாகவும், எரிப்பதாகவும் கூறும் போது சுஜாதாவிற்கு இன்றைய இளைஞர்கள் மீது உள்ள கோபம் புரிகிறது. மேலும் மக்களாட்சியில் கோர்ட்டில் சண்டையும், நிறைய கட்சிகள் இருப்பதாகவும் இன்னும் பலவற்றையும் கூறும்பொழுது சுஜாதாவிற்கு மக்களாட்சியின் மீது உள்ள கோவமும் தெரிகிறது . கதையின் முடிவு எனக்கு என்னவோ மேலும் மீண்டும் மற்றொரு ஜீனோ கதை எழுதுவதற்கு அடி போடுவதாகத் தோன்றியது . என்ன அப்படி மீண்டும் இன்னொரு ஜீனோ கதையை எழுதுவதற்கு சுஜாதாதான் நம்மிடம் இல்லை .

மீண்டும் ஜீனோவைப் பற்றி google இல் தேடிய பொழுது இந்த ebook கிடைத்தது. அது உங்கள் பார்வைக்கு

www.thiruvarunai.com/eBooks/Sujatha/Meendum%20Jeeno.pdf

photo courtesy : http://crazy-frankenstein.com/free-wallpapers-files/dog-wallpaper-files/cute-puppy-dog-wallpapers.jpg

Wednesday, August 18, 2010

உன்னால் முடியும் தம்பி - ஓர் அலசல்


எனக்கு கமல் படங்கள் பார்க்கும் போது ஒரு ஈர்ப்பு வரும், அது கமல் மேல் உள்ள ஈர்ப்பின் காரணமாக கூட இருக்கலாம். எனக்கு கமல் மேல் வந்த மதிப்பிக்கு காரணம் கமலின் நடிப்பு, பேச்சு இப்படி பல சொல்லலாம். இவற்றில் முக்கியமானது சமுதாயத்தின் மீது கமலின் பார்வை. எனக்குத் தெரிந்து கமல் அளவிற்கு சமுதாயத்தின் மீது அழுத்தமான பார்வை கொண்டவர்கள் சிலரே. அர்ஜுன், விஜயகாந்த் போன்றவர்கள் தேச பக்தி படங்களில் நடித்திருந்தாலும் கமல் அளவிற்கு படத்தின் மூலம் சமுதாயத்தின் மீது தாக்கத்தை ஏற்ப்படுதியவர்கள் இல்லை என்று சொல்லலாம். சமுதாயத்தின் மீது அவருடைய பார்வை தீவிரத்தன்மை கொண்டது. ஏதாவது ஒரு extreme ல தான் அது இருக்கும். எடுத்துக்காட்டாக திருமணம் பற்றிய அவர் பார்வை. திருமணம் பற்றிய அவருடைய பார்வையில் பல பேருக்கு மிகத் தீவிர மாற்றுக் கருத்து உண்டு. இருந்த போதிலும் அவர் தன்னுடைய நிலைபாட்டைச் சொல்லத் தயங்கியதில்லை. கமல் நடித்து வெளிவந்த சமுதாயப் படங்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக அன்பே சிவம், உன்னைப் போல் ஒருவன், உன்னால் முடியும் தம்பி . இந்த மூன்று படங்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றாலும் என்னை அதிகமாக பாதித்த திரைப்படம் உன்னால் முடியும் தம்பி . இது தெலுகு படமான ருத்ர வீணாவின் மறு உருவாக்கம் என்றபோதிலும் , இந்த படத்தை எடுக்க காரணமாக இருந்தது பாலசந்தரோ இல்லை கமலாகவோ இருந்தாலும் எனக்கு இப்படம் சமுதாயத்தின் மீது கமலுக்கு உள்ள கோபமாகவே தோன்றுகிறது.

இப்படத்தின் அடிநாதம் சங்கீதத்தை விட ஏன் கடவுளை விட மனிதாபிமானமே பெரியது என்பதாகும். இந்த கருத்தில் கமலுக்கு இரண்டாம் கருத்தே இல்லை என்பதால் இந்த படத்தில் நடிப்பது கமலின் dream project ஆக கூட இருந்திருக்கலாம். இந்த படத்தை அலசும் போது இப்படத்தின் முழுக் கதையையே சொன்னாலும் தவறில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் இருபது வருடங்களுக்கு முன் வந்த இப்படம் திரும்ப திரும்ப பலராலும் பார்க்கப்பட்டு தெளிந்த ஒன்றாகும்.

சங்கீத குடும்பத்தில் பிறந்த, சங்கீதமே தன்னுடைய மூச்சு அதைத் தவிர வேறொன்றும் இல்லை என்னும் பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை எனும் ஜெமினி கணேசனின் மகனாக உதய மூர்த்தி என்ற பாத்திரத்தில் கமல் நடித்திருப்பார். சங்கீதத்தை விட சமுதாய சீக்குகளை களைவதே முக்கியம் என்பது உதய மூர்த்தியின் பார்வையாக இருக்கும். ஒரு ராப்பிச்சைக்காரியின் பசி அலறலை விட தனக்கு சங்கீதம் முக்கியமில்லை என்பார் உதயமூர்த்தி.


இப்படத்தில் கமலின் பாத்திரம் நான்கு நிலைகளில் இருக்கும். முதலில் எதைப்பற்றியும் கவலைப் படாத மேட்டுக்குடி இளைஞனாகவும், பின்னர் சமையல்கார கிழவரால் பாதிக்கப்பட்டு சமுதாய சீர்கேடுகள் மீது கோபம் கொண்ட இளைஞனாகவும் , அடுத்து ஒரு சமுதாய நோக்கு கொண்ட ஒரு பெண்ணின் மீது காதல் வயப்படும் இளைஞனாகவும், அடுத்து சமுதாயத்தை சீர்திருத்த முடியாத, அப்பாவின் மீது கோபம் கொண்ட கையாலாகாத இளைஞனிலிரிந்து வீட்டை விட்டு வெளியேறி சமுதாயத்தை திருத்தும் இளைஞன். இப்படி நாலு நிலைகளில் அவருடைய பாத்திரம் படைக்கப்பட்டிருக்கும்.

மின்கம்பத்திலிருந்து கீழே விழுந்து அடிபட்ட அந்த லைன் மேனை காப்பாற்றமுடியாமல் கையாலாகாத்தனமான தன் நிலையை எண்ணி வருந்தும் போதும், தான் அந்த லைன் மேனை காப்பாற்ற முடியாததற்காக தன் தந்தையுடன் சண்டை போடும் போதும், அப்படி சண்டை போட்டது சரிதான் என்று வாதிடும் போதும், தனக்குப் போட்டியாக வந்த விட்ட சாருகேசி என்னும் ரமேஷ் அரவிந்தை எண்ணி தன் தந்தையிடம் சண்டையிடும்போதும், குடிகாரர்கள் திருந்துவதற்க்காக தன் கல்யாணத்தையே நிறுத்துவதற்காக லலிதா கமலா என்னும் சீதாவிடம் பேசும் போதும் கமலின் நடிப்பு பிரம்மிக்கத்தக்க வகையில் இருக்கும்.

சீதா மற்றும் கமலுக்கிடையே ஆன காதல் காட்ச்சிகளும் இயல்பாக இருக்கும். இப்படத்தில் சீதாவிற்கு கமலுக்கு துணையான நல்ல கதாப்பாத்திரம் அமைந்திருக்கும். பொதுவாக கதாலை மையைப் படுத்தாத படங்களில் கதாநாயகிக்கு பெரும்பாலும் நல்ல கதாப்பாத்திரங்கள் அமைவதில்லை. மேலும் அப்படங்களில் காதலும் இரண்டு மூன்று காட்சிகளுடன் முடிந்து போயிருக்கும். அப்படி இல்லாமல் இப்படத்தில் கதாநாயகிக்கும் ஒரு நல்ல கதாப்பாத்திரம் அமைந்திருக்கும் . காதலும் படத்தின் ஊடே இழையோடிருக்கும்.

படத்தில் ஜெமினி கணேசனுக்கும் அருமையான பாத்திரம் அமைந்திருக்கும். சங்கீதத்தை தவிர வேறு ஒன்றைப் பற்றியும் அக்கரைப் படைத்தவராக மிக அருமையாக நடித்திருப்பார் . ஜெமினி கணேஷன் நடிப்பில் எனக்கு மிக பிடித்த பாத்திரம் இது.

படத்தில் சின்ன சின்ன இடங்களும் அருமையாக இருக்கும் . சீதா டாலரை சுண்டி போட்டு ஒருத்தனை கன்னத்தில் அடிப்பார், அடித்தவுடன் அந்த வரிசையே நகர்ந்து நிற்கும். அதேபோல் கமல், சீதாவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சீதா திரும்பவும் டாலரை சுண்டுவார் அப்பொழுது கமல் சற்று நகர்ந்து நிற்பது சிரிப்பாக இருக்கும். அதே போல் மீசை முருகேசனும், கமலும் முதல் முதல் சந்திக்கும் இடமும் நன்றாக இருக்கும்.


படத்தின் திரைக்கதையும் மிக இயல்பாக அமைந்திருக்கும். எந்த ஒரு இடத்திலும் ஒரு இடரோ சிணுங்கலோ இல்லாமல் படத்தின் ஆரம்பத்திலிருந்து மிகச் சரியாக தன்னுடைய பாதையில் சென்றிருக்கும். நான் முன்பே சொன்ன மாதிரி காதலையும், சமுதாயத்தை திருத்தும் இளைஞன் கதையையும் மிக இயல்பாக கோர்த்திருப்பார் கே.பாலச்சந்தர்.

படமே ஒரு சங்கீதப் பரம்பரைப் பற்றியது என்பதால் இதில் இசைக்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும். இளையராஜா இதில் புகுந்து விளையாடியிருப்பார். கர்நாடக சங்கீத கீர்த்தனைகளும், அதையே மாற்றி அமைத்த ஜனரஞ்சக பாடல்களும் அருமையாக இருக்கும். S.P.B யும், யேசுதாசும் மிக அருமையாக பாடியிருப்பார்கள்.

படத்தின் பாடல் வரிகளும் இப்படத்தின் அடிநாதத்திற்க்கு மிக இயல்பாக பொருந்தி போயிருக்கும். இப்படத்தின் அனைத்து பாடல்களும் எனக்கு பிடிக்கும் என்பதால் எதை எழுதாமல் விடுவது என்று தெரியவில்லை. வேண்டுமென்றால் வரிசைப்படுத்திக் கூறலாம்.

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு என்ற பாடலின் இசையும் பாடல் வரிகளும் மிக அருமையாக இருக்கும். இப்பாடலை எழுதியவர் புலமைபித்தன். இப்பாடலின் அனைத்து வரிகளும் அருமையாக இருக்கும் . அப்பாடலின் முழுவதையும் இங்கே கூற முடியாது . வேண்டுமென்றால் சில வரிகள்

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல
எங்க பாரததில் சொத்து சண்டை தீரவில்ல
வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கே நாதி இல்ல
சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல
இது நாடா இல்ல வெரும் காடா
இத கேட்க யாரும் இல்ல தோழா

அதே போன்று எனக்கு பிடித்த மற்றொரு பாடல் "உன்னால் முடியும் தம்பி தம்பி" . மிக அருமையான தத்துவப் பாடல் . இதைக்கேட்டால் தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும்.

அடுத்த பாடல் "அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா" . சமுதாயத்தின் பாராமுகங்களுக்கு ஒரு சவுக்கடியாக இருக்கும்.

படத்தின் கிளைமாக்சில் அந்த சண்டை காட்ச்சியை தவிர்த்திருக்கலாம். அது ஒன்றுதான் படத்தில் தேவை இல்லாத ஒன்றாக இருக்கும். படத்தின் ஒரே கமெர்சியல் அயிட்டமும் அதுதான். கிளைமாக்சிர்க்கு ஏதாவது ஒரு காரணி தேவை என்று எண்ணி இருக்கலாம்.

அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு அருமையான திரைப்படம்.

பின் குறிப்பு: நேற்று மறுபடியும் இப்படத்தை ராஜ் டிஜிடல் பிளஸ் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

photo courtesies :
http://img230.imageshack.us/i/vlcsnap2009100809h55m26.png/
http://i.ytimg.com/vi/n7p1Gl6JNJI/0.jpg
http://tamilmovies.orutube.com/wp-content/uploads/2010/06/dxlo4x.png

Tuesday, August 17, 2010

களவாணி - விமர்சனம்


விமல், ஓவியா நடிச்ச களவாணி படத்த இந்த சனிக்கிழமைதான் பார்க்க நேரம் கிடைச்சது. நானும் மதுவும் ஒரே நாளுல திரை அரங்கத்துல ரெண்டு படம் பாத்ததில்ல. அது இப்பதான் வாச்சது . இந்த சனிகிழமை 2.30 க்கு மினி உதயம்ல களவாணியும், 7 மணிக்கு INOX ல வம்சமும் பார்த்தோம். சரி களவாணியை மாயாஜால்ல பாக்கலாம்னு பாத்தா டிக்கெட் கிடைக்கல. படம் வந்து இவ்வளவு நாள் ஆகியும் டிக்கெட் கிடைக்கலனா படம் எந்த அளவிற்கு நல்ல படம்னு தெரிஞ்சுக்கலாம். கடைசியா நானும் மதுவும் உதயம் போய்தான் படம் பாத்தோம். படம் நல்லவேள சோட போகல. காமெடி, காதல், விருவிருப்புன்னு நல்லா போச்சு.

படத்துல விமல் , அரிக்கி என்கிற அறிவழகனா நடிச்சுருக்கார். ஓவியா , மகேஷ்வரியா நடிச்சிருக்காங்க.படத்துல விமல் , 12 வது கூட பாஸ் பண்ணாம எந்த வேலை வெட்டியும் செய்யாம ஊர் சுத்துற இளைஞரா வர்றார். வீட்டுல இருக்குற பொருள் எல்லாத்தையும் ஒடச்சு அம்மாவ மிரட்டி காசு வாங்கிட்டு ஊர் சுத்துறார் . பாக்குற எல்லா பொண்ணுங்களையும் கட்டிகிறியானு கேட்குறாரு . படத்துல சின்ன சின்ன இடங்களையும் இயக்குனர் பாத்து பாத்து செய்துருக்கார். ஓவியாவ ஏன் நெல்லு திருடுனன்னு மிரட்டிட்டு நண்பன் கிட்ட அந்த பொண்ணு பேனாவ தொலச்சுருச்சுனு சொல்றதும் , சிகரெட் கேட்குறவருக்கு முன்னாடி சிகரெட் இருக்குற பாக்கெட்ட தூக்கி வீசிட்டு அப்புறம் அவர் போன பின்னாடி இவனுக்குலாம் எவன் சிகரெட்டு கொடுப்பான்னு சொல்லிட்டு கீழ போட்ட சிகரெட்ட எடுக்குற இடமும் , இப்படி சின்ன சின்ன இடங்களும் நல்லா இருக்கு. விமல் ஒரு அலட்சியமான இளைஞருக்கு நல்லா பொருந்துராறு. விமலுக்கு செமையா body language வருது. செம அலட்சியமா நடிக்கிறாரு.


கஞ்சா கருப்பு வர்ற இடம்லாம் சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகுது. கஞ்சா கருப்ப குடிக்காத
பாலிடாய்ல குடிச்சதா சொல்லி ஆஸ்பத்திரியில சேக்குற இடமும் அதுக்கு கஞ்சா கருப்பு பொண்டாட்டியிட்ட அவ மேல சந்தேகப்பட்டு பாலிடாய்ல குடிச்சதா சொல்லற இடமும் , கரகாட்ட காரிக்கு இரநூறு ரூபா கொடுத்து அத பஞ்சாயத்து என்கிற கஞ்சா கருப்பு கொடுத்ததா சொல்லற இடமும் , கஞ்சா கருப்பு இறந்து போயிட்டதா announce பண்ற இடமும் செம சூப்பெர்ப்.


படத்தின் கிளைமாக்சில் என்ன நடக்கப் போதுன்னு ஒரே பரபரப்பா இருந்தாலும் கடைசி வரை காமெடி இருக்கு . அதுவே இந்த படத்தின் ஒரு பலம்னு சொல்லலாம். இன்னொன்று நடிகர்கள் தேர்வு . படத்தின் அனைத்து நடிகர்களும் தங்களுடைய பணியை சிறப்பாகச் செய்துள்ளனர். சரண்யா வரும் இடங்களிலெல்லாம் தன் மகன் ஆவணி வந்தா டாப்பா வந்துருவானு சொல்ற இடமும் , இளவரசு தன் மகனை நம்பாமல் கமெண்ட் அடிக்கும் இடங்களும் நல்லா இருக்கு.

இந்த படத்தில் ஏற்கனே இரண்டு பாடல்கள் ஹிட் ஆகிடுச்சு படத்தின் பெரிய பிளஸ் பாயிண்ட் விமலும் திரைக்கதையும்தான். படத்தின் ஒரு நாயகியைத்தாண்டி எனக்கு படத்தின் கதாநாயகனை பிடித்த படங்கள் மிகச் சிலவே ;-) . அதில் இந்த படமும் ஒன்று.

பெரிய ஹீரோக்களைக் கொண்டு டப்பா கதையையும் , திரைக்கதையையும் நம்பி கோடிகளை கொட்டி எடுத்து ஓடாத டப்பா படங்களுக்கு மத்தியில் இந்த படம் ஒரு சம்மட்டி அடி . நல்ல படங்கள் வந்தால் மக்கள் ஹீரோக்களையும் , ஹீரோய்ன்களையும் பர்றி கவலைப்படாமல் நல்ல படங்களை ஓட வைப்பார்கள் என்பதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் இந்த படம்.

இந்த வருஷத்தின் ஹிட் படம் . குடும்பத்துடன் சென்று பார்க்க மிகச் சிறந்த படம் .

Monday, August 16, 2010

வம்சம் - திரை விமர்சனம்


வம்சம், 'பசங்க' புகழ் பாண்டிராஜின் இரண்டாவது படம். படத்தின் கதாநாயகன் நம் முதல்வரின் பேரன் அருள்நிதி. படம் அருள்நிதி அவர்கள் ஊரின் படிக்கும் பிள்ளைகளுக்கு படிக்க நிதி திரட்டி தருவதிலிருந்து ஆரம்பிக்கிறது. படம் இப்படியே பில்ட் அப் கொடுக்குறதுலயே போயிருமோ என்று பயந்தால் நல்ல வேளை இல்லை.

புலிவதனம், சிங்கம்பிடாரி என்னும் இரண்டு ஊர்கள் உள்ளன. சிங்கம்பிடாரியில் தேவர் இனத்தைச் சார்ந்த பதினோரு வம்சங்கள் உள்ளன. அவ்வூரின் திருவிழாவில் ஒவ்வொரு வம்சத்தைச் சார்ந்தவர்களுக்கும் மரியாதை செய்யப்படுகின்றன. ஊர் திருவிழாவின் போது யாரேனும் இறக்க நேரிட்டால் அவருக்கு எந்த மரியாதையும் செய்யாமல் ஊர் கூடாமல் சொந்தகாரங்களாக சேர்ந்து எரித்துவிடுவர். இப்படி மரியாதை இல்லாமல் அடக்கம் செய்வதாலயே அக்காலங்களில் பகை தீர்க்கும் கொலைகள் நடக்கின்றன. இப்படி நடக்கும் கொலைகள் போலீசிற்கு தெரிவிக்கப்படுவதில்லை .

இந்த பதினோரு வம்சங்களில் நம் கதாநாயகனின் வம்சம், எப்பாடு பட்டாலும் பிற்பாடு கொடாதவர். இந்த வம்சத்திற்கு ஒரே வாரிசு நம் கதாநாயகன்தான். இன்னொரு வம்சம், நஞ்சுண்ட மா ஒ சி . இது கதாநாயகனின் எதிரியான சீனி கண்ணுத் தேவருடயது. படத்தில் அருள்நிதி திருவிழாவில் மரியாதையை ஏற்கும் போது சீனி கண்ணுத் தேவர் , அன்பரசனான நம் கதாநாயகனை வஞ்சம் தீர்த்து கொல்ல வேண்டும் என்று கூறுவதிலிருந்து பிளாஷ் பேக் ஆரம்பிக்கிறது.


பிளாஷ் பேக்கின் ஆரம்பத்திலேயே நம் கதாநாயகனின் கையை வெட்ட அவரின் இறந்து போன அப்பாவின் எதிரிகள் வருகிறார்கள். படத்த எடுத்த உடனயே நம்ம முதல்வரின் பேரனின் ஹீரோயிசம் காட்ட சண்டையா என்று நினைக்கையில் , அவர் எதிரிகளுடன் சண்டை போடாமல் தப்பித்து ஓடுவதிலிருந்து படம் நிமிர ஆரம்பிக்கிறது. அப்படி ஓடுபவர் தன்னுடைய மாமாவிடம் ஓடுகிறார். அவர் அந்த ஊரின் பெரிய தலையான சீனி கண்ணு தேவரிடம் கூட்டிச் செல்லுகிறார். சீனி கண்ணுத் தேவரின் உதவியால் நம்முடைய கதாநாயகன் தப்பிக்கிறார். இப்படியாக அன்பரசன் யார் வம்புக்கும் செல்லாமல் நல்லவராக இருக்கிறார்.


இந்த படத்தில் சுனைனாவிற்கு செம ரோல். சுனைனா செம தைரியமான ஆள் . சுனைனாவின் ஆரம்ப காட்சியிலேயே அன்பரசனுடன் சண்டைக்கு செல்கிறார். படத்தில் மாட்டிற்கு அசின்னு பேர் வச்சு அத காதலுக்கு தோது செலுத்துறதும், மரத்து மேல செல்போன கட்டி பேசுறதும் நல்ல காமெடி.சுனைனா, தன்னுடைய அப்பாவைக் கொன்ற சீனி கண்ணுத் தேவர் மேல சாணிய கரைச்சு வீசுரப்பவும், எதிரிகள் சுனைனாவையும், அருள் நிதியையும் சூழும் போது , அருள்நிதி ஓடக் கூப்பிட்டபொழுதும் , மறுத்து இடுப்பிலிருந்து சைக்கிள் செயன எடுத்து சுழற்றும் போதும் செம ஸ்கோர் பண்ணுகிறார். சீனி கண்ணுத் தேவரை அவமானப்படுத்துனதால சுனைனா அவரின் கோபத்திற்கு ஆளாகிறார். அருள்நிதியும் சுனைனாவிற்கு சப்போர்ட்டாக இருப்பதால் அவரும் சீனி கண்ணுத்தேவரின் கோபத்திற்கு ஆளாகிறார்.

அருள்நிதி , தன் அம்மாவின் மூலம் தன்னுடைய அப்பாவைக் கொன்றதும் சீனிகண்ணுத் தேவர் என்று அறிகிறார். இப்படியாக சீனி கண்ணுத்தேவர்க்கும் அருள்நிதிக்கும் பகை வளர்கிறது. கடைசியில் அருள்நிதி , சீனி கண்ணுதேவரை வென்று சுனைனாவை கைபிடிக்கிறாரா இல்லையா என்பது தான் கதை.

இது பாண்டிராஜின் இரண்டாவது படமாக இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது. அருள்நிதி முதல் படத்திலேயே ஸ்கோர் பண்ணுகிறார். படத்தில் எந்த ஒரு ஹீரோயிசமும் இல்லை . அதுவே அருள்நிதி மீது மதிப்பைக் கூட்டுகிறது. அருள்நிதி வெகு இயல்பாக நடிக்கிறார். இதேபோன்று தான் முதல்வரின் பேரன் என்ற எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் கதைகளை தேர்ந்தெடுப்பதிலும், நடிப்பிலும் ஹீரோயிசம் காட்டாமல் இருந்தால் ஒரு நல்ல நடிகர் ரெடி. சுனைனாவிற்கு இந்த படத்தில் அருமையான வேடம். சீனி கண்ணுத்தேவர் அவர் சாணிய கரைத்து வீசும்போதும், அருள்நிதி தன்னை கட்டிகாவிட்டால் ,அருள்நிதியை கொன்றுவிடுவதாக மிரட்டும்போதும் செம ஸ்கோர் பண்ணுகிறார் . படத்தில் சண்டைகாட்ச்சிகள் அனைத்தும் இயல்பாக அமைந்துள்ளன. மருதாணிப் பூவே பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.

குடும்பத்துடன் சென்று பார்க்க ஒரு நல்ல படம் .

Thursday, August 12, 2010

டாக்டர் சீட் வாங்கலியோ டாக்டர் சீட்



காட்சி 1:

அப்பொழுது நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த சமயம். என்னுடன் மகேஷும் படித்து கொண்டிருந்தான். பையன் ஒன்னும் படிக்கமாட்டான். அவங்க அப்பா அந்த ஊருல தமிழ்நாட்டின் ஒரு முக்கிய கட்சியின் ஒன்றிய செயலாளராக இருந்தார். அடிதடிக்கு ஒன்றும் பயப்படுற ஆள் கிடையாது. அதனால் பையனும் அப்படியே இருந்தான். நாங்க ரெண்டு பெரும் ஒரே வகுப்பில்தான் படித்து கொண்டிருந்தோம். அவனுக்கு வகுப்பில் பார்த்து எழுதி பாஸ் பண்ண ஆள் தேவைப்பட்டது. அதற்க்கு கிடைத்த ஆள் நான்தான் . அதற்க்கு பிரதி உபகாரமாக அவன் சில செயல்கள் செய்து தருவதாய் வாக்கு அளித்திருந்தான். ஒன்று, நாங்கள் எங்கள் வீட்டில் கிளி வளர்த்து கொண்டிருந்தோம். அதற்க்கு ஒரு மரக்கூண்டு செய்ய வேண்டும் என்பது வெகு நாளைய ஆசை. அதற்க்கு ஒரு கிளிக்கூண்டு செய்து தருவதாய் வாக்கு அளித்திருந்தான். ஒரு நாள் பேசி வைத்து அவன் எங்கள் வீட்டுக்கு மரத்துடன் வருவதாக ஏற்ப்பாடு. கடைசி வரை அவன் வராமல் ஏமாற்றியதுதான் மிச்சம். அப்போழுதுனாவது நான் சுதாரித்திருக்க வேண்டும். நமக்கு எங்க அறிவு இருந்துச்சு.

அப்போழுதுலாம் பொன்வண்டு என்று ஒரு வண்டு இருக்கும். அதை பிடித்து வீட்டில் வளர்ப்பது என்பது ஒரு பொழுபோக்கு. இன்னொருநாள் என்னிடம் பார்த்து காப்பி அடிப்பத்தற்க்கு பிரதி உபகாரமாக பொன் வண்டு பிடித்து தருவதாக உறுதி அளித்தான். அதை நம்பி நானும் அவனுடன் அவங்க காட்டுக்குச் சென்றேன். அங்கு பார்த்தால் ஒரே காட்டுச் செடியாகவும் ஒரே பூச்சிக்களுமாகவும் இருந்தது. அவற்றில் ஏதோ ஒரு பூச்சியைப் பிடித்து அதுதான் பொன்வண்டு என்று கொடுத்தான்.பின்புதான் அது வேற எதோ பூச்சி என்று தெரிந்தது . அதற்க்கு வீட்டில் திட்டு வாங்கியதுதான் மிச்சம். இப்படி ஏமாந்த தருணங்கள் பல பல. பிறகு அந்த ஊரை விட்டு விட்டு வந்துவிட்டோம் . பிறகு ஒரு நாள் டிவியில் மகேஷின் அப்பா அந்த ஊர் M.L.A ஆகிவிட்டதாக தெரிந்தது. மகேஷும் எதோ படித்து பத்தாவதில் 230 மதிப்பெண் பெற்று ஏதோ தேறியதாக கேள்விப்பட்டேன்.

over to 2010

அன்று நான் படித்த பள்ளிகூட நண்பன் போன் பண்ணியிருந்தான்.அவன் "உனக்கு விஷயம் தெரியுமா மகேஷ் டாக்டர் ஆகிட்டாண்டா" என்றான் . நான் : "என்னது டாக்டரா!!!" . ஆமாம் டா , அவங்க அப்பா 25 லட்சம் கொடுத்து டாக்டர் சீட் வாங்கிட்டாருடா என்றான் . எனக்கோ பொறி பறந்தது. என்னடா நம்மள பாத்து காப்பி அடிச்சவன் டாக்டரா அதுவும் பத்தாவதுல வெறும் 230 வாங்கியவன் டாக்டரா என்று தோன்றியது. நாம இன்னும் சாதாரண மென்பொருள் பொறியாளராக இருக்கிறோமே என்றும் தோன்றியது . அதுக்கும் மேல என் நண்பன் "டாய் , மகேஷோட மனைவியும் டாக்டர்டா" என்றான். எனக்கு தலை சுற்றியது. காதுக்குள் "டாக்டர் சீட் வாங்கலியோ டாக்டர் சீட் " என்று யாரோ கூவுவது கேட்டுக் கொண்டிருந்தது.

காட்சி 2:

அதே பள்ளிக் கூட நாட்கள் . அப்பொழுது எங்கள் வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டில் விக்னேஷ் குடி இருந்தான் .விக்னேஷிற்கு என்னை விட மூன்று நான்கு வயது கூட இருக்கும். இருந்தாலும் பள்ளி நாட்களில் நாங்கள் அனைவரும் ஒன்றாக விளையாடுவோம். அப்பொழுது நாங்கள் கிரிக்கெட்டிற்கு அடுத்து அதிகம் விளையாடுவது ஒத்தையா ரெட்டையா. அதாவது கையில் நிறைய புளியங் கொட்டைகள் இருக்கும். கையில் இருப்பது ஒத்தப் படை முத்துக்களா அல்லது ரெட்டைப் படை முத்துக்களா என்று கூறவேண்டும் . சரியாக கூறி விட்டால் கூறியவருக்கு கையில் இருக்கும் அத்தனை முத்துக்களையும் கொடுத்து விட வேண்டும் . தவறாக கூறினால் அதே அளவு எண்ணிக்கை முத்துக்களை நாம் கொடுக்கவேண்டும் . இந்த விளையாட்டில் விக்னேஷ் கை தேர்ந்தவன். செம கள்ளாட்டம் விளையாடுவான். அவனை ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம். அவனை ஏமாத்துறதும் கஷ்டம் . அவ்ளோ அருமையாக கள்ளாட்டம் விளையாடுவான்.

over to 2010

மகேஷ பத்தி சொன்ன அதே நண்பன் , "டாய் உனக்கு விஷயம் தெரியுமா . உங்க வீட்டிற்கு பக்கத்து வீட்டு விக்னேஷ் இப்ப IAS" . எனக்கு இன்னும் கொஞ்சம் தலை சுற்றியது . அவ்ளோ கள்ளாட்டம் விளையாண்டவன் இப்ப நேர்மை தவறாத கடமை இருக்க வேண்டிய IAS அதிகாரியா ஆ என்று தோன்றியது .

வாழ்க பாரதம்.

photo courtesy :http://info.ncnelink.com/Portals/55055/images//stethoscope%20dollar%20sign%20iStock_000009672949Large-resized-600.jpg

Wednesday, August 11, 2010

பதின் வயது நினைவுகள் ...

என்னுடைய மற்றும் மதுவுடைய பதின் வயது நினைவுகள் பல ஊர்களைத் தாண்டியது. அதற்க்கு என்னுடைய அப்பாவும் அம்மாவும் அரசாங்க உத்தியோகத்தில் இருந்ததால் நாங்கள் பல ஊர்களில் குடி இருந்ததே காரணமாகும். இப்படியாக எங்கள் வாழ்க்கையும் பல ஊர்களில் அமைந்தது. எங்கள் பதின் வயது நினைவுகளில் மறுக்க முடியாத இடத்தில் எங்கள் மாமா குடியிருந்த மதுரை தல்லாகுளமும் எங்கள் பெரியம்மா இருந்த மதுரை கே.கே.நகரும் இருக்கின்றன. அவை எங்களுடைய இரண்டாவது வீடாக இருந்தன . எங்களுடைய பள்ளி நாட்களின் விடுமுறை காலங்கள் மதுரை வெயிலிலேயே அலைந்து திரிந்தது.

பனையபட்டி சிவன் கோவில்

photo courtesy: http://upload.wikimedia.org/wikipedia/en/9/95/Ppt_Sivan_temple.jpg

எங்களுடைய பதின் வயது நினைவுகள் நான்கு ஊர்களில் ஐந்து பள்ளிகளில் ஏழு வீடுகளில் சுற்றி திரிந்தது. எனக்கு நினைவு தெரிந்து ஆரம்ப காலங்களில் நாங்கள் இருந்த மதுரை அம்மாச்சி வீட்டில் அம்மா அலுவலகம் விட்டு வீடு திரும்பும் நேரத்தை எதிர்பார்த்தே கழிந்தது. பின்னர் நாங்கள் புதுக்கோட்டை மாவட்டம் பனையபட்டிக்கு குடி பெயர்ந்தோம். அந்த வீட்டில் இரண்டு நந்தியாவட்டை மரங்கள் இருந்தன. அந்த காம்பவுண்டில் எங்களுடன் இன்னொரு வீடு இருந்தது. அதில் எங்கள் வயதை ஒத்த அண்ணன் தங்கை இரண்டு பேர் குடியிருந்தனர். விடுமுறை காலங்களில் அந்த நந்தியாவட்டை மரங்களில் ஏறி யார் அதிகம் நந்தியாவட்டை பூக்களைப் பறிப்பது என்ற போட்டியிலேயே கழிந்தது. அப்படி பறித்த பூக்களை மாலையாக தொகுத்து அந்த ஊரில் இருந்த மிக அருமையான சிவன் கோவிலில் உள்ள சிவனுக்கு சாத்துவோம் . அந்த கோவில் ஐயரும் நாங்கள் சிறுவர்களாய் இருந்துகொண்டு பக்தியோடு அளிக்கும் அந்த மாலையை அனைவருக்கும் முந்தி எங்கள் கண் முன்னேயே சிவனுக்கு சாத்துவார். இப்படியாக எங்கள் பக்தியை வளர்த்த இடம் பனையபட்டி. அங்கு இருந்த பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் நான் ஒரு பாட்டிற்கு நடனம் ஆடினேன். அதன் நினைவாக ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லை என்ற குறை இன்று வரை எங்கள் அம்மாவிற்கு உண்டு.

தல்லாகுளம் பிரசன்னா வெங்கடாசலபதி திருக்கோவில்

photo courtesy : http://farm1.static.flickr.com/59/152960994_faafb50fdd.jpg

நாங்கள் பனையபட்டியில் இருந்த காலங்களில் நானும் மதுவும் பள்ளி முடிந்து அம்மா அலுவலகம் விட்டு வீடு வரும் வரை தங்கியிருந்த சரஸ்வதி அத்தை வீட்டை மறக்க முடியாது. எங்கள் அம்மா அலுவலகம் விட்டு வர நேரம் ஆகும் என்பதால் நாங்கள் இருவரும் அதுவரை பள்ளியின் அருகில் இருந்த எங்கள் அம்மாவுடன் வேலை பார்த்த சரஸ்வதி அத்தை வீட்டில் தங்கி இருப்போம். இன்றும் என்னால் அந்த வீட்டை மறக்க முடியாது . அவர்களின் வீட்டில் ஆடு மாடு கோழி எல்லாம் இருக்கும். அவற்றுடன் பொழுதைப் போக்கி நேரம் கழிப்பதே எனக்கும் மதுவிற்கும் வேலை. இப்படியாக பிற உயிர்களிடத்தில் அன்பை போதித்தது அந்த வீடுதான்.

இரவு நேரங்கள் எல்லாம் அப்பாவிடம் கதை கேட்பதிலேயே கழிந்தது. இப்படியாக எங்கள் கேள்வி ஞானத்தை வளர்த்தது அந்த ஊர்தான் .

கள்ளழகர் குதிரை பவனி
photo courtesy : http://hindia.in/tamilnews/wp-content/uploads/2010/04/Madurai-festivel.jpg

பிறகு நாங்கள் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு எங்கள் அம்மாவின் பணி நிமித்தமாக மாறிச் சென்றோம். அங்கு இருந்த பெரிய பள்ளிவாசல் பள்ளியில்தான் படித்தோம். அது ஒரு முஸ்லிம் பள்ளி என்பதால் அங்கு வியாழன் வெள்ளிதான் விடுமுறை. அம்மா அப்பா வீட்டில் இல்லாத அந்த நாட்களில் தெருச் சிறுவர்களுடன் பொழுதைக் கழிப்பதே வேலை. அந்த நாட்களில் அந்த ஊரின் மொட்டை வெயில் எல்லாம் எங்கள் தலையில்தான் வீழ்ந்தது. கிரிக்கெட் விளையாட அங்குதான் கற்றுக்கொண்டேன்.

அங்கு எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் என்னுடன் படித்த கண்ணதாசன் குடியிருந்தான். எப்பொழுதும் எனக்கும் அவனுக்கும் இடையில் பெரிய போட்டா போட்டியே நடக்கும். நாங்கள் இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் வெவ்வேறு பிரிவுகளில் படித்ததால் எனக்கும் அவனுக்கும் இடையே படிப்பு உட்பட அனைத்திலும் போட்டி நடக்கும். படுபாவி அவனும் நல்லா படிப்பான் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும். அந்த நாட்களில் அவன் எனக்கு மிகப் பெரிய எதிரி என்றே சொல்லலாம்.அவ்வூரை விட்டுச் சென்றவுடன் அவனுடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது . இப்படியாக இருக்கும் பொழுது சென்ற வருடம் மது ஒரு orkut profile அனுப்பி இதைப் பாருடா என்றான். பார்த்தால் அதே கண்ணதாசன். பார்த்தால் மிக சந்தோசமாக இருந்தது . தலைவர் இப்பொழுது நோக்கியா டென்மார்க்கில் வேலை பார்க்கிறார்.

பள்ளியின் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை காலங்களில் மதுரையில் இருக்கும் எங்கள் மாமா பெரியம்மா வீடுகளுக்குச் சென்று விடுவோம். அதே போன்று சித்திரை திருவிழாவும் மே மாதத்தில் வருவதால் அதற்கும் சென்ற மாதிரி ஆகிவிடும். சித்திரைத் திருவிழா பொழுது அழகர் தல்லாகுளம் பிரசன்னா வெங்கடசலபதி கோவிலில்தான் தங்குவார் என்பதால் அக்கோவிலுக்கு மிக அருகிலிருந்த எங்கள் மாமா வீட்டிலிருந்து அந்த விழாவில் கலந்து கொள்வோம். அந்நாட்களில் ஒவ்வொரு மண்டகப்படியாக அழகர் பின் அழைந்து அழகரை தரிசிப்பதே வழக்கம்.

எங்கள் பெரியம்மா வீட்டில் இருந்துதான் நான் மிதிவண்டி ஓட்டக் கற்றுக் கொண்டேன். அப்படி ஓட்டக் கற்றுக் கொண்ட தருணங்களை இப்பொழுதும் நினைத்தாலும் சிரிப்பாக வரும். மிதிவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட ஆரம்ப நாட்களில் வண்டி ஓட்ட மட்டும்தான் தெரியும் வண்டியில் ஏறவோ இறங்கவோ தெரியாது . அதற்க்கு ஒருவர் வேண்டும். எங்கள் பெரியம்மா வீட்டில் தான் அப்பொழுது கலர் டிவி இருக்கும், மேலும் அவர்கள் டெக் வைத்திருந்தார்கள். ஆகையால் எங்கள் அம்மா அங்கு வரும் போதெல்லாம் நாங்கள் புதுப் படமாக கேசெட் எடுத்து பார்ப்போம். அப்படி பார்த்ததுதான் புதுப் புது அர்த்தங்கள்,புதிய பாதை போன்ற திரைப்படங்கள். இன்றும் அந்த படங்களைப் பார்த்தால் அந்த வீட்டு ஞாபகம்தான் வரும். இப்பொழுது அவர்கள் அந்த வீட்டை விற்று விட்டு சென்னையே கதி என்று வந்துவிட்டார்கள்.

அதற்கடுத்த நாட்கள் ராமநாதபுரத்தில் கழிந்தன. ராமநாதபுரத்தில் மட்டும் நாங்கள் மூன்று வீடுகளில் குடியிருந்தோம். அந்த நாட்களில் தான் நாங்கள் எங்கள் மாமா பெரியம்மா வீடுகளுக்குச் செல்லாமல் அங்கேயே கழித்தோம். எனக்கு அந்த ஊரில் நாங்கள் தங்கியிருந்த வீடுகளிலேயே மிகவும் பிடித்தது வீட்டு வசதித் துறை வீடுதான் . அது புது வீடாக, விசாலமாக, காற்றோடத்துடன் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்தது. அதைச் சுற்றிலும் மழைக்காலங்களில் நீர் தேங்கி விடும் . அந்நாட்களில் அதை நாடி வரும் நீர்ப் பறவைகளைப் பார்ப்பதற்கே மிக சந்தோசமாக இருக்கும். அந்நாட்களில் அந்த ஒதுக்குப்புறமான சாலைகளில் யாருமற்ற நேரங்களில் பள்ளி முடிந்து திரும்பி வரும் வேளையில் மிதி வண்டியில் கை விட்டு ஒட்டி வருவது எனக்குப் பிடித்தமான செயல்களில் ஒன்று.

இப்படியாக என் பதின் வயது நினைவுகள் என் நெஞ்சில் நீங்காமல் உள்ளன.