Tuesday, September 14, 2010

ஜின்னா - வரமா? சாபமா ?

முஹம்மத் அலி ஜின்னா - பாகிஸ்தான் இந்திய மக்களால் என்றும் மறக்க முடியாத பெயர். ஒவ்வொருவராலும் ஒவ்வொரு காரணத்திற்காக மறக்க முடியாத பெயர். பாகிஸ்தானியர்களால் Quaid-e-Azam என்றும் Baba-e-Quam என்றும் அழைக்கப்பட்டவர். பாகிஸ்தானியருக்கு பாகிஸ்தானை உருவாக்கிய தந்தை. இந்தியருக்கு இந்தியாவை இரண்டாகப் பிரித்து , பிரிவினையின் போது பல லட்சக்கணக்கானவர்கள் இறக்கக் காரணமானவர்.

முஹம்மத் அலி ஜின்னா ஒரு முஸ்லிமாக இருந்தபோதிலும் அவருடைய மூதாதையர்கள் ஹிந்துக்கள் என்பது ஒரு சுவாரசியமான விஷயம் . அவருடைய தாத்தா ஒரு ஹிந்து ராஜபுத்திரர். ஜின்னாவின் வம்சம் ஹிந்துவிலிருந்து முஸ்லிமாக மத மாறிய வம்சம். அவருடைய இரண்டாவது மனைவி பார்சி இனத்தவர் . அது ஒரு காதல் திருமணம் . இருவருக்கும் இடையே 25 வருட இடைவெளி. அவருடைய ஒரே மகளான டினா ஜின்னா ஒரு பார்சி இனத்தவரை திருமணம் செய்து கொண்டார். அதுவும் காதல் திருமணம் . எப்படி ஜின்னாவின் திருமணம் பெண் வீட்டாரால் எதிர்க்கப்பட்டதோ அதே போன்று ஜின்னா தன மகளின் திருமணத்தை எதிர்த்தார். டினா ஜின்னாவின் கணவர் வேறு யாரும் அல்ல Bombay-dying முதலாளிதான் அவர். இப்படி ஒரு முஸ்லிம் தேசத்தை உருவாக்க வேண்டும் என்று கனவு கொண்ட ஜின்னைவைச் சுற்றி அவர் அறிந்தோ அறியாமலோ இருந்தவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களே.


பாகிஸ்தானை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஒன்றும் ஜின்னாவிற்கு மத உணர்வால் ஒன்றும் ஏற்ப்படவில்லை. அவர் ஒரு பெரிய மதவாதி எல்லாம் அல்ல. அவர் மது குடிப்பார், மேற்கத்திய பாணிய உடைகளையே அணிவார். அவர் மேற்கத்திய கலாச்சாரங்களையே பின் பற்றினார். அவருக்கு ஆங்கிலம் தெரிந்த அளவிற்கு உருது தெரியாது. உண்மையில் அவர் முதலில் சேர்ந்த இயக்கம் முஸ்லிம்-லீக் அல்ல . ஏனெனில் அது அதிக முஸ்லிம் தன்மையோடு இருந்ததே காரணம். அவர் முதலில் சேர்ந்த இயக்கம் காங்கிரஸ்தான். இப்படிப்பட்ட ஜின்னாவை ஒரு தனி முஸ்லிம் நாடு கேட்கத்தூண்டியது காங்கிரஸ்தான்.


ஜின்னாவும் நேருவும் பல விதங்களில் ஒரே மாதிரியானவர்கள். இருவருமே மிகப் பெரிய பணக்காரர்கள். இருவருமே லண்டனில் படித்தவர்கள் . இருவருமே வக்கீல்கள். இருவருமே மேற்கத்திய பாணியை அதிகம் விரும்பியவர்கள் . அதனாலையே இருவருக்கும் தங்கள் மதங்களின் மீது அதிகம் பிடித்தம் கிடையாது. அப்படிப்பட்ட இருவருக்குமே காங்கிரசில் தங்களுக்கே அதிக முக்கியத்துவம் இருக்கவேண்டும் , தாங்களே இந்தியாவை ஆள வேண்டும் என்ற எண்ணமும் இருந்ததுதான் துரதிஷ்டவசமானது.

காங்கிரசில் நேரு அதிக முக்கியத்துவம் பெற்றதால் ஜின்னா முஸ்லிம் லீக்கில் சேர்ந்தார். தான் ஆள பாகிஸ்தான் என்ற நாட்டைக் கேட்டார். இப்படியே பாகிஸ்தான் என்ற நாடு உருப்பெற்றது. ஜின்னா, தான் முக்கியத்துவம் பெற எந்த அளவிற்கும் செல்வார் என்பது அவர் "நேரடி நடவடிக்கை நாள்" -ஐ அறிவித்ததிலிருந்து அறியலாம். அதாவது தான் ஆள ,பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்க அவர் அறிவித்தே நேரடி நடவடிக்கை நாள். அப்போது நடைபெற்ற கலவரத்தில் கல்கத்தா மிக மோசமாக பாதிக்கப்பட்டது. நேரடி நடவடிக்கை நாளான 16, ஆகஸ்டு 1946 நாளிலிருந்து சரியாக ஒரு வருடம் கழித்து பாகிஸ்தான் விடுதலை பெற்றது.


பிரிவினைக்கு ஜின்னாவை மட்டும் குற்றம் சாட்டுவோர் மட்டும் இல்லாமல் நேருவை குற்றம் சாட்டுவோரும் உள்ளனர். இந்தியா பிரிவதை ஆரம்பத்திலிருந்து எதிர்த்தார் காந்தி. இந்திய பிரிவினையை தடுக்க ஒரு கட்டத்தில் காந்தி, இந்தியாவை ஆளும் உரிமையை ஜின்னாவிற்கு அளித்தார். ஆனால் இதை நேரு மிகத் தீவிரமாக எதிர்த்தார். நேரு சிறிது விட்டுக் கொடுத்துப் போய் இருந்தால் இந்தியப் பிரிவினையையும் அதனைத் தொடர்ந்து நடந்த பிரிவினை கலவரத்தில் நிகழ்ந்த பத்து லட்சம் படுகொலைகளையும் தடுத்திருக்கலாம். இருவருடைய ஈகோவும் சேர்ந்து 10 லட்சம் படுகொலைகள் நடக்க காரணமாயிற்று.

ஜின்னாவிற்கு காசநோய் இருந்தது. ஆனால் அது துரதிஷ்டவசமாக தெரிய வந்தது பாகிஸ்தானிய விடுதலைக்கப்புறம்தான். இதை ஏன் துரதிஷ்டவசம் என்கிறேன் என்றால் அது முன் கூடியே தெரிய வந்திருந்தால் இந்த துணைக் கண்டத்தின் விதியே மாறி இருக்கலாம். ஏனெனில் அது முற்றிய நிலையில் இருந்தது. அது மட்டும் விடுதலைக்கு முன்பே தெரிந்திருந்தால் ஒரு வேளை ஜின்னா பிரிவினையை விரும்பாதிருந்திருக்கலாம், இல்லை பிரிட்டிசார் பிரிவினையை ஜின்னா இறப்பு வரை தள்ளி போட்டிருக்கலாம், இல்லை ஒருவேளை நேரு இன்னும் சிறிது காலம் தானே என்று ஜின்னாவிற்கு நாட்டை ஆள விட்டுக் கொடுத்திருக்கலாம், இல்லை ஒரு வேளை ஜின்னா ஒரு சிறந்த கட்டமைப்பு பெற்ற பாகிஸ்தானை உருவாக்க பாடுபட்டிருக்கலாம். ஜின்னா பாகிஸ்தான் உருவாகிய ஓராண்டிலயே இறந்துவிட்டார்.

இன்று பாகிஸ்தான் ஜின்னா விரும்பிய வகையில் இன்று இல்லை. ஜின்னா ஜனநாயகத்தில் அதிக நம்பிக்கை கொண்ட ஒரு பாகிஸ்தானை உருவாக்க எண்ணினார். ஆனால் இன்றைய பாகிஸ்தானோ தான் உருவாகிய 63 ஆண்டுகளில் பாதி நாட்களை ராணுவ ஆட்சியிலயே கழிந்தது. இதற்க்குக் காரணம் பாகிஸ்தான் ஜின்னாவிர்க்குப் பிறகு நாடு போற்றிய தலைவரை உருவாக்கவில்லை . ஆனால் அதன் சகோதரியான இந்தியாவோ அதே போன்று தன் நாடு போற்றும் தலைவரான காந்தியையும் சுதந்திரம் பெற்ற ஒரே ஆண்டில் இழந்தாலும் நாட்டை காக்க நேரு, படேல்,ராஜேந்திர பிரசாத் போன்ற எண்ணற்ற தலைவர்களைக் கொண்டிருந்ததது. அதானலையே அது ஒரு சிறந்த அரசியலமைப்பு கொண்ட குடியரசாக மூன்று ஆண்டுகளையே எடுத்துக் கொண்டது . பாகிஸ்தானிற்க்கோ அதற்க்கு ஒன்பது ஆண்டுகள் ஆனது .அவருடைய பாகிஸ்தான் மதச் சார்பற்றதா இல்லையா என்று சரியாகத் தெரியவில்லை. பாகிஸ்தான் உருவான காலகட்டத்தில் அவருடைய பார்வை ஒரு மதச் சார்பற்ற நாட்டை உருவாக்குவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தானிய பொருளாதாரம் ஒரு இஸ்லாமிய பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்றும் எண்ணினார். ஆனால் நிச்சயம் பாகிஸ்தானிய அரசியலமைப்பு ஜின்னா எண்ணிய வகையில் இன்று இல்லை. அது குடியரசின் மேல் நம்பிக்கை வைக்க எடுத்துக்கொண்ட காலமும் அதிகம் . இந்தியா விடுதலையான மூன்றே ஆண்டுகளில் குடியரசான போது பாகிஸ்தான் குடியரசாக ஒன்பது ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.

இன்றைய காஷ்மீர் பிரச்சினைக்கும் முழு முதற்காரணம் ஜின்னாவும், நேருவுமே. சுதந்திரம் அடைந்தவுடன் அந்த கோடை காலத்தை கழிப்பதற்க்காக ஜின்னா தான் காஷ்மீர் வந்து ஓய்வு எடுப்பதாக காஷ்மீர் மன்னர் ஹரிசிங்கிடம் சொன்னார் . அந்த சமயம் ஹரிசிங் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ சேராமல் காஷ்மீர் தனித்த சுதந்திரம் பெற்ற நாடாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். அதனால் ஜின்னா காஷ்மீர் வருவதை அனுமதித்தால் தான் பாகிஸ்தான் பக்கம் சாய்ந்து விட்டதான ஒரு தோற்றத்தை ஏற்ப்படுத்திவிடும் என்று எண்ணினார். அதனால் ஜின்னா காஷ்மீர் வர அனுமதி மறுத்தார். இது காஷ்மீர் எப்படியும் பாகிஸ்தானுடன் சேர்ந்துவிடும் என்று எண்ணிய ஜின்னாவிற்கு மிகப் பெரிய அடி. அதனால் ஜின்னா பாகிஸ்தானிய பழங்குடியினரான பதான்களைத் தூண்டிவிட்டு காஷ்மீரில் கலவரத்தை ஏற்ப்படுத்தினார். பிறகு ஹரிசிங் காஷ்மீர் இந்தியாவுடன் சேர சம்மதித்தார். பின்னர் இரு நாட்டுப் படைகளும் காஷ்மீரை ஆக்கிரமித்தன. இந்த சமயத்தில் நேரு இந்த விவகாரத்தை வல்லபாய் படேலின் வார்த்தையையும் மீறி ஐநாவிடம் கொண்டு சென்றார். ஐநா உடனே எந்த எந்த படைகள் எங்கெங்கு இருக்கின்றனவோ அந்தப் பகுதிகள் அவரவர்க்கு சொந்தம் என்று அறிவித்துவிட்டது. நேரு மட்டும் இந்த விவகாரத்தை ஐநாவிடம் கொண்டு சென்றிருக்காவிட்டால் இந்தியப் படைகள் முழு காஷ்மீரையும் கைப்பற்றி இருக்கும் . இப்பொழுது காஷ்மீரின் மொத்தப் பரப்பளவான 2,20,000 sqkm இல் 1,00,000 sqkm இந்தியாவுடனும், 80,000 sqkm பாகிஸ்தானுடனும் மீதி 40,000 sqkm சீனாவிடமும் உள்ளது.

இப்படியாக ஜின்னா இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களின் வாழ்வில் பிரிக்க முடியாதவர்.

பின் குறிப்பு :1. செப்டெம்பர் 11 ஜின்னாவின் இறந்த தினம். ஜின்னா 1948 இல் இறந்தார்.
2. A nice blog post about Jinnah and his secular Pakistan(in his own news paper ;-) ) http://blog.dawn.com/2010/09/11/with-us-or-against-us/


Photo Courtesies : wikimedia.org , pakteahouse.files.wordpress.com, greathindu.com,thehindu.com

8 comments:

JDK said...
This comment has been removed by the author.
JDK said...

Super machi..very good analysis !!

இந்த காங்கிரஸ் காரங்க ஒவ்வொருத்தனுக்கும் இது தான் பிரச்சனையே அவன் தான் தலைவன்'நு நெனச்சுக்க வேண்டியது ...இந்த நாதாரிகளால நாடு நாசமா போச்சு :(((

Congress = No Progress !!

Devaraj Rajagopalan said...

Very informative and interesting !!

Haripandi Rengasamy said...

நன்றி jdk ..
நன்றி தேவராஜ் ...

Haripandi Rengasamy said...

@ jdk எனக்கும் காங்கிரஸ் மேல் பெரிதாக எந்த அபிப்பிராயமும் கிடையாது ... நான் அவர்களை நம்பவில்லை ...

madu said...

நேருவும், ஜின்னாவும் பிரிவினை இவ்வளவு மோசமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. வர போகும் விளைவுகளை சரியாக புரிந்து கொண்ட ஒரே மனிதர் காந்தி மட்டும்தான். பிற்காலத்தில் நேரு குறிப்பிடவும் செய்தார். ஜின்னா அனைத்து மதங்களுக்கும் பாகிஸ்தானில் சம இடம் கொடுக்கவே விரும்பினார்.

Haripandi Rengasamy said...

காந்தியின் பேச்சை யாரும் கேட்காமல் போனது துரதிஷ்டவசமானது. நேரடி நடவடிக்கை நாளான ஆகஸ்ட் 16,1946 இல் தொடங்கிய கலவரம் அடுத்த 72 மணி நேரத்தில் மட்டும் 4000 - 10000 மக்களை கல்கட்டாவில் பழிவாங்கியது. காயமடைந்தவர்கள் எண்ணிக்கை லட்ச்சத்திற்க்கும் மேல். இதை வைத்தே பிரிவினை எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை ஊகித்திருக்கலாம். துரதிஷ்டவசமாக நேரடி நடவடிக்கை நாளில் நடந்த நிகழ்ச்சிகளை வைத்ததே இனி ஹிந்துக்களும், முஸ்லீம்களும் சேர்ந்து வாழ முடியாது என்ற முடிவுக்கு அனைவரும் வந்தனர். ஆனால் பிரிவினை இவ்வளவு மோசமாக அமைந்தது மிக துரதிஷ்டவசமானது.

ஜின்னாவின் சுதந்திர தின உரை அவர் மதச்சார்பற்ற பாகிஸ்தானை உருவாக்க வேண்டும் என்று கூறினாலும், State Bank of Pakistan ஐ தொடங்கியபோது அவர் பேசிய பேச்சு அவ்வாறு நம்மை அந்த முடிவுக்கு வரவிடவில்லை. ஆனாலும் அவருடைய பாகிஸ்தான் நிச்சயம் இப்போதிருக்கும் இவ்வளவு முஸ்லிம் பேராதிக்கம் கொண்ட பாகிஸ்தானாக இருந்திருக்காது.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.