Friday, February 24, 2012

மறக்கப்பட்ட மாபெரும் சாம்ராஜ்ஜியம்

உலகின் மாபெரும் சாம்ராஜ்ஜியங்கள் இந்த உலகையே மாற்றி அமைத்திருக்கின்றன. அது வரலாற்றின் பக்கங்களின் நினைவு தெரிந்து கி.மு 1850களில்  அமைந்த உலகின் முதல் மாபெரும்  பேரரசான எகிப்து பேரரசு முதல் கடைசியாக அமைந்த பிரிட்டிஷ் பேரரசு வரை வரலாற்றையே மாற்றி அமைத்தன. கி.மு 1850 முதல் இன்று வரை கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட மாபெரும் பேரரசுகள் இந்த உலகை ஆண்டன. ஆனால் அவற்றில் பெரிதும் நினைவில் நிற்பவை எகிப்து,ரோம்,அசோகர் தலைமையிலான மௌரிய, முகலாய, சீனாவின்  மிங், ஸ்பானிய, பிரிட்டிஷ் என மிகச் சில சாம்ராஜ்ஜியங்களே . இதில் பெரிதும் மறக்கப்பட்ட சாம்ராஜ்ஜியம் என்றால் அது மங்கோல் சாம்ராஜ்ஜியமாகும். இந்த சாம்ராஜ்ஜியம் உலகில் இதுவரை அமைந்த சாம்ராஜ்ஜியங்களில் பிரிட்டிஷிற்கு அடுத்து உலகின் மிக அதிக நிலப்பரப்பை ஆண்ட சாம்ராஜ்ஜியம் ஆகும். அதன் உச்சபட்ச காலகட்டத்தில் அது 2.4 கோடி சகிமீ ஆண்டது . அதாவது உலகின் நிலப்பரப்பில் 16% ஆகும். பிரிட்டிஷ்ஷார் ஆண்டது 3.3  கோடி சகிமீ அதாவது  உலகின் நிலப்பரப்பில் 22% ஆகும். அதிலும் மங்கோல் சாம்ராஜ்ஜியம் ஆண்டது உலகின் தொடர்ச்சியான நிலப்பரப்பாகும். அந்த வகையில் அதுவே உலகின் மிகப் பெரியது. இதிலும் பிரிட்டிஷ்ஷார் ஆண்டது பழைய உலகம் மற்றும் புதிய உலகம் எனப்படும் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவையும் சேர்த்து. ஆனால் மங்கோல் ஆண்டது அவர்கள் காலத்தில் அறியப்பட்டஒரே உலகமான  பழைய உலகம் எனப்படும் ஆசியா,ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவில் ஆகும். அதாவது அன்றைய உலகில் 35% ஆகும்.  இந்த வகையில் பார்த்தால் அது எவ்வளவு பெரியது என்பது தெரிய வரும். ஆனால் அந்த மாபெரும் சாம்ராஜ்ஜியம் முற்றிலும் மறக்கப்பட்டது. அதற்கு ஒரே காரணம் செங்கிஸ்கான். ஆமாம் அந்த மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை அமைத்தது செங்கிஸ்கான்தான். 

இந்த உலகின் வரலாற்றில் அதிகம் நினைவு கூறப்படும் தலைவர்களில் மிக முக்கியமானவர்கள் என்றால் அது அலெக்சாண்டரும் , செங்கிஸ்கானும் ஆவர். ஆனால் அலேக்சாண்டரால் அதிகம் நினைவு கூறப்படும் ரோம் சாம்ராஜ்ஜியம் அளவிற்கு செங்கிஸ்கானின் மங்கோல் சாம்ராஜ்ஜியம் நினைவு கூறப்படுவதில்லை. அதற்கும் முக்கிய காரணம் செங்கிஸ்கான்தான். ஆமாம் இந்த உலகம் அலெக்சாண்டரை மாபெரும் பேரரசர் என்று எண்ணும் அதே சமயம் அது  செங்கிஸ்கானை வெறும் காட்டுமிராண்டித்தனமான ஒரு மாபெரும் கொள்ளைகூட்டத் தலைவன் போன்றே எண்ணுகிறது. 

 ஏனென்றால் அலெக்சாண்டர் நாடு பிடிக்கும் வெறி கொண்ட ஒரு நாட்டின் அரசராக பார்க்கப்படவில்லை. அதற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டு தன்னிடம் தோற்ற இந்திய மன்னனான போரஸை அவர் நடத்திய விதம். போரில் தோற்ற போரஸ் தன்னை ஒரு மன்னனுக்குரிய அந்தஸ்துடன் நடத்த வேண்டும் என்று அலெக்சாண்டரிடம் கூறிய பொழுது அவர் அவனின் வீரத்தைப் பாராட்டி அவனை தன்னுடன் இணைத்துக் கொண்டார். ஆனால் செங்கிஸ்கான் பெயரைக் கேட்டாலே இந்த உலகம் நடுங்கியது. பெர்சிய(இன்றைய ஈரான்)*1  படையெடுப்பின் போது செங்கிஸ்கானின் 50,000 வீரர்கள் இணைந்து கொன்ற மக்களின் எண்ணிக்கை 12 லட்சம். அதாவது ஈரான் சமவெளியில் இருந்த மக்களில் 3/4 பங்கு. இப்படி எங்கு படையெடுத்தாலும் பேரழிவு. மங்கோல் பேரரசு தான் ஆண்ட 270 வருடங்களில் கொன்ற மக்களின் மொத்த எண்ணிக்கை 3 லிருந்து 6 கோடி. அதாவது அன்றைய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 7 லிலிருந்து 17 % ஆகும். 

இப்படி செங்கிஸ்கான், வெறி கொண்ட காட்டுமிராண்டித்தனமான ஒரு தலைவனாகவே பார்கப்பட்டான். ஏன் செங்கிஸ்கானின் வழி வந்த முகலாயர்களே தங்களை செங்கிஸ்கானின் வழித் தோன்றலாக கூறிக் கொள்ளாமல் , தங்களை துருக்கிய தலைவனான தைமூரின்*2 வழித் தோன்றலாக கூறிக் கொண்டனர் 

  மங்கோலியர்களின் வாழ்க்கை கிட்டத்தட்ட குதிரையிலேயே பிறந்து , குதிரையிலேயே வளர்ந்து , குதிரையிலேயே முடிந்தது. அவர்கள் அளவிற்கு சிறந்த குதிரை வீரர்கள் கிடையாது. அங்கு சிறுவர்களை 4 , 5 வயதிலேயே குதிரையில் ஏற்றிவிடுவார்கள். மங்கோலியாவின் கடினமான காலநிலை அவர்களை முரடர்களாக ஆக்கியது. அந்த முரட்டுத்தனத்தின் மீதான பயம்தான் சீனாவை மங்கோலியாவிலிருந்து பிரிக்க மிகப் பெரிய சீனப் பெரும் சுவரை கட்ட வைத்தது . 

செங்கிஸ்கானிற்கு முன் மங்கோலியர்கள் பல இனக் குழுக்களாக பிரிந்து தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொண்டார்கள். செங்கிஸ்கான்தான் அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து அவர்களின் தலைவனாகி மாபெரும் மங்கோல் பேரரசை அமைத்தான்.அப்பொழுதுதான், அதிகபட்சம் சீனா வரை அறியப்பட்ட அவர்கள், உலகம் முழுவதும் தெரிந்தார்கள்.

 கான் என்று முடிவதாலேயே அதிகம் பேர் செங்கிஸ்கானை ஒரு முஸ்லிம் என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் அவன் முஸ்லிம் இல்லை . சொல்லப் போனால் செங்கிஸ்கான் , இஸ்லாமின் பொற்காலம் எனப்படும் காலிபாக்களின் ஆட்சியை  முடிவுக்குக் கொண்டு வந்தவன். அவன்  மங்கோலியாவைச் சார்ந்த ஒரு உள்ளூர் மதத்தைச் சார்ந்தவன். அவன் அதிக சமய சகிப்புத் தன்மை கொண்டவனாக இருந்தான். அதனாலையே அவன்  இந்த நாடு அந்த நாடு என்றில்லாமல் அனைத்து நாடுகளின் மீதும் படையெடுத்தான்.

மங்கோல் சாம்ராஜ்ஜியம் மேற்கே போலந்திலிருந்து கிழக்கே பசிபிக் பெருங்கல்டல் வரையிலும் , வடக்கே சைபீரியாவிலிருந்து தென் கிழக்கே தாய்லாந்த் வரையிலும் , தென் மேற்கே மத்திய கிழக்கு நாடுகள் வரையிலும் பரவியிருந்தது.  செங்கிஸ்கானிற்கு பின் மங்கோல் சாம்ராஜ்ஜியம் 4  சாம்ரஜ்ஜியங்களாக  பிரிந்தது. 

 உலகம் செங்கிஸ்கானை ஒரு கொடூரக் கொலைகாரனாக பார்த்த போது, மங்கோலியா அவனை தங்களின் இணையற்ற தலைவனாக பார்த்தது. அதற்கு அவர்கள் கூறும் காரணம், இந்த வரலாற்றை எல்லாம் எழுதுபவர்கள் எல்லாம் மேற்கு உலகத்தவர்கள். அதனால் அவர்கள் அலெக்சாண்டரை மாபெரும் பேரரசராகக் காட்ட செங்கிஸ்கானை ஒரு கொடூரக் கொலைகாரனாக சித்தரிக்கிறார்கள், மேலும் இந்த உலகமே மேன்மை அடைந்த பிறகு நடந்த முக்கியமாக மேற்கு  உலக நாடுகளிடையே  நடந்த உலகப் போர்களில்தான் இது வரை இல்லாத பேரழிவாக வெறும் 11 ஆண்டுகளில் 5.5 கோடி முதல் 13.5 கோடி மக்கள் இறந்தார்கள். அப்படி எனும் போது செங்கிஸ்கானை மட்டும் கொலைகாரனாக சித்தரிப்பது தவறு என்பது ஆகும்.  

1. பெர்சிய படையெடுப்பிற்கு முன் செங்கிஸ்கானின் எண்ணத்தில் இருந்தது பெர்சியா மற்றும் இந்தியா. நல்லவேளையாக அவன் தேர்ந்தெடுத்தது பெர்சியா. தப்பியது இந்தியா !
2. செங்கிஸ்கானுக்கு தைமூர் ஒன்றும் குறைந்தவனில்லை, அவனுடைய படையெடுப்பில் டெல்லி மாநகரமே அழிந்தது

Sunday, February 19, 2012

இந்தியாவும் அதன் அயலுறவுக் கொள்கைகளும்

சென்ற வாரம் நம்மளுக்கு மிக அருகில் இருக்கும் மாலத்தீவில் பல போராட்டங்களுக்குப் பிறகு அதிபர் பதவி விலகினார் . அதுக்கப்புறம் அவர், என்னைய துப்பாக்கி முனையில்தான் பதவி விலக வைத்தார்கள் என்று சொல்ல, பெரிய பிரச்சினை. இவ்வளவு போராட்டங்களையும் எப்பயும் போல இந்தியா ரொம்ப மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தது. அதுக்கு அப்புறம் அமேரிக்கா இந்த விசயத்துல தலையிட ஆரம்பிச்சதும்தான் இந்தியா கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு தன்னுடைய வெளியுறவுத்துறை செயலாளரை அங்கு அனுப்பி வைத்தது.

பொதுவாக இந்தியா தன்னுடைய ராஜதந்திர ரீதியிலான வெளியுறவுக் கொள்கையில் பெரிதாக எதுவும் சாதித்ததில்லை. அதற்கு என்று பெரிதாக சிறந்த நட்பு நாடுகள் எதுவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அதனுடைய அண்டை வீட்டுக்காரர்களுடனேயே பெரிதாக அதற்கு நல்ல உறவு இல்லை. இதைதான் சீனா " இந்தியா தூரம் இருப்பவர்களுடன் நட்பாகவும் அருகில் இருப்பவர்களுடன் விரோதத்துடனும் உள்ளது " என்று கூறுகிறது. இப்படி பக்கத்தில் உள்ளவர்களுடன் விரோதத்தையும் தூரத்தில் உள்ளவர்களுடன் நட்பையும் கொண்டிருப்பது , இந்தியாவே தேடிக்கொண்டதா இல்லை அதற்கு அப்படி இயல்பாக அமைந்ததா என்பது விவாதத்திற்குரியது. ஆனால் இப்படி ஆனது அதன் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த தோல்வியே ஆகும். சில நேரங்களில் எனக்கு இது நம் மக்கள் எப்பொழுதும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் விரோதத்துடன் இருக்கும் மனோநிலையின் பிரதிபலிப்பாகவே தெரிகிறது ;). ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்தியா தூரத்தில் உள்ளவர்களுடனும் பெரிதாக நட்பு கொண்டிருக்கவில்லை.

இப்படி அமைவதற்கு முக்கிய காரணம் இந்தியா எந்த ஒரு விசயங்களிலும் பெரிதாக ஆக்டிவாக இருந்ததில்லை. எப்படி அடுத்த நாடுகளின் விசயங்களில் அதிகமாக மூக்கை நுழைப்பது தவறோ அதே போல் பக்கத்து நாடு பிரச்சினையில் இருக்கும் போது அதை கண்டும் காணாமல் இருப்பதும் தவறு. சில விசயங்களில் இந்தியா ஆக்டிவாக இருந்திருக்கிறது, இல்லை என்று சொல்ல வில்லை . எடுத்துக்காட்டாக பங்களாதேஷ் பிரிவினையை சொல்லலாம். அந்த பிரிவினையின் போது இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டது ஆனால் அதற்கடுத்து அது பங்களாதேஷுடன் மிகச் சிறப்பான நல்லுறவை மேற்கொள்ளவில்லை. இன்று பங்களாதேஷில் பல பேர் இந்தியாவை எதிரியாகப் பார்க்கிறார்கள். சில நேரங்களில் அது முன்னெடுத்த பல செயல்கள் அதற்கு எதிராகவும் அமைந்திருக்கிறது. எடுத்துக்காட்டு இலங்கைக்கு இந்தியா அனுப்பிய அமைதிப் படை நடவடிக்கை. இந்தியா எந்த நோக்கத்திற்காக அங்கு அமைதிப் படையை அனுப்பியதோ அது நிறைவேறவில்லை. அந்த அமைதிப் படை இந்தியா திரும்பிய போது அது இலங்கை , இலங்கைத் தமிழர்கள் என்ற இரு தரப்பாலும் வெறுக்கப்பட்டே அனுப்பப்பட்டது.

தெற்காசிய நாடுகளுக்கிடையே நட்புறவை ஏற்படுத்த இந்தியா முன்னின்று அமைத்த SAARC கூட்டமைப்பு பெரிதாக எதையுமே சாதிக்கவில்லை. அது யூரோப்பியன் யூனியன் (EU) போலவோ, இல்ல தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டணியான ASEAN போலவோ , இல்லை வர்த்தகத்துக்காக அமைந்த OPEC போலவோ, இல்லை ராணுவ கூட்டணியாக அமைந்த NATO போலவோ வெற்றி பெறவில்லை. இப்படி SAARC பெரிதாக சாதிக்காமல் இருப்பதற்கு அதில் இருக்கும் பெரிய, வலுவான நாடு என்ற முறையில் இந்தியாவிற்குதான் பொறுப்பு அதிகம். இந்திய - பாகிஸ்தான் போர்களின் போதோ, இல்லை இந்திய சீன போரின்போதோ, இல்லை பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தின் போது நடந்த படுகொலைகளின் போதோ , இல்லை இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனப் படுகொலைகளை தடுப்பதற்கோ SAARC பெரிதாக எதையும் சாதிக்கவில்லை . சரி நம்மளுக்குள் சண்டை போடும்போதுதான் SAARC எதையும் செய்யவில்லை , குறைந்தபட்சம் சம்பந்தம் இல்லாத வெளிநாடுகளில் நடக்கும் பிரச்சினைகளிலாவது அது ஏதாவது சாதித்தா என்றால், இல்லை.

இந்தியா தன்னுடைய அண்டை வீட்டுக்காரர்களுடன் ஒழுங்கான உறவு பேணாததாலேயே இன்றும் , இனி வரும் காலங்களிலும் அது பெரிய பிரச்சனைகளை சந்திக்கிறது/ சந்திக்கப் போகிறது. இன்று நம்மைச் சுற்றி இருக்கும் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மாலத்தீவு , மியான்மர் இப்படி அனைத்து நாடுகளும் இந்தியாவை விட சீனாவிற்கே நட்பு நாடுகள். Pearl Necklace என்ற பதத்தின் பேரில் சீனா, இந்தியாவை சுற்றி வளைக்கிறது. இன்று சீனா, பங்களாதேஷ், இலங்கை, மாலத்தீவு , பாகிஸ்தான், மியான்மர் இப்படி நம்மை சுற்றி இருக்கும் அனைத்து நாடுகளிலும் அது ஒரு துறைமுகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்த துறைமுகங்களில் சிலவற்றில் தன்னுடைய கடற்படையை நிறுத்துமோ என்ற கவலையையும் தருகிறது . இங்கு கவனிக்கவும் அமெரிக்கா, ரஷ்யாவை விட ரஷ்யாவிற்கு ஏவுகணை தளம் அமைக்க இடம் கொடுத்த தன் அண்டை நாடான கியூபாவைக் கண்டே அதிகம் பயப்பட்டது.

எப்பொழுதும் நம் பக்கத்து நாட்டிற்குள் அடுத்த நாடு நுழைஞ்சா நம்மளுக்குத்தான் பிரச்சினை. இந்த விசயத்தில் அமெரிக்காவும் சீனாவும் அதற்கு இடம் கொடுத்ததில்லை. சமீபத்தில் இந்தியா , வியட்நாமுடன் எண்ணெய் எடுக்க ஒப்பந்தம் செய்த போதே சீனா அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் நம் நாட்டிற்குள் நாம் எங்கோ இருக்கும் அமெரிக்காவையும், சீனாவையும் விடுகிறோம்.

சரி அண்டை நாடுகளுடந்தான் இப்படி, தூர தேசங்குளுடனாவது இந்தியா உறவுகளை மேற்கொள்கிறதா என்றால், இல்லை. இன்று அமெரிக்காவை விட சீனாவே அதிக உறவுகளை மேற்கொள்கிறது. இன்று சீனா நுழையாத நாடே கிடையாது. அது பக்கத்திலுள்ள ASEAN னிலிருந்து அயல்தூரத்தில் இருக்கும் ஆப்ரிக்கா, தென் அமேரிக்கா வரை அனைத்து நாடுகளுடனும் உறவை மேற்கொள்கிறது. அது ஆப்ரிக்காவில் இருக்கும் கனிம வளங்களுக்காகட்டும், இல்லை தென் அமெரிக்காவில் இருக்கும் இயற்கை வளங்களுக்காகட்டும் அது தற்பொழுது இந்தியாவை விட நிறைய உறவுகளைக் கொண்டுள்ளது.

இந்த விசயங்களில் எனக்கு அமெரிக்காவையும் , சீனாவையும் ரொம்ப பிடிக்கும். அவை தங்களுக்கு வேண்டிய நாடுகளை அணி சேர்த்துக் கொண்டும் , வேண்டாத நாடுகளை அண்ட விடாமலும் இருக்கும்.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது அமேரிக்கா, ரஷ்யா என்ற எந்த ஒரு அணியுடன் சேராமல் இருக்க அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பை அமைத்தது. அது அமெரிக்க, ரஷ்ய அணிகளுக்கு சிறந்த மாற்றாக இருந்திருக்க வேண்டும் . ஆனால் அது நம்ம ஊர் அ.தி.மு.க, தி.மு.க அணிகளுக்கு எதிரான மூன்றாவது அணி போலவே இருந்தது. பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. அந்த அணியில் முக்கிய உறுப்பு நாடாக இருந்த இந்தியாவே கிட்டத்தட்ட ரஷ்ய அணியில்தான் இருந்தது.

இப்படி நம் வெளியுறவுக் கொள்கை நமக்கு பெரிய பலன்களை எதுவும் கொடுக்கவில்லை . சொல்லப் போனால் இந்தியா , தனக்கு உலக அரங்கில் கிடைத்த பல வாய்ப்புகளை வீணடித்துள்ளது. இன்னும் சில நேரங்களில் இந்தியாவின் அயலுறவுக் கொள்கை இந்தியாவிற்கே வினையாகவும் அமைந்துள்ளது.

பிரச்சினை என்னவென்றால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் இன்னும் நேரு காலத்திலேயே இருக்கிறது. அது எதனால் என்றுதான் தெரியவில்லை. நேருவின் கொள்கைகள் சாகா வரம் பெற்றவை, அவை என்றும் வெற்றி பெற்றவை என்று காட்டுவதற்கான அடமா என்று தெரியவில்லை . அதனால் தான் அணியே இல்லாத உலகில் அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பு இன்றும் உள்ளது என்றார் பிரணாப் முகர்ஜி. யாருமே இல்லாத கடைல யாருக்குத்தான் டீ ஆத்துராங்களோ தெரியல :(

இப்படி வெற்றியடையாத வெளியுறவுக் கொள்கையுடன் நாம் Global Power என்ற அடைமொழிக்கும், ஐநாவில் Veto அதிகாரத்துடன் கூடிய நிரந்தர அந்தஸ்துக்கும் ஆசைப்படுகிறோம்.

சாணக்கியர் வாழ்ந்த நாடு ஆனால் சுதந்திர இந்தியாவிற்குத்தான் வெளியுறவுக் கொள்கைகளில் ராஜதந்திரி என்னும் நபர் இன்னும் கிடைக்கவில்லை :( .