Sunday, September 30, 2012

அகம்,புறம்,அந்தப்புரம் - விமர்சனம் - 1


அகம், புறம், அந்தப்புரம்

நான் அன்னைக்கு ஊரிலிருந்து வந்துகிட்டு இருந்தேன். எப்பயும் போல கைல ஒரு புக் வச்சு படிச்சுகிட்டு இருந்தேன். பக்கத்திலிருந்தவர் , சார் என்ன புக்கு சார் படிக்கிறீங்கன்னு கேட்டாரு. புத்தகத்தின் அட்டைய திருப்பிக் காட்டினேன்.  அட்டையில் கருப்பு வெள்ளை புகைப்படத்தில் ஒரு பெண் நிறைய நகைகளுடனும், அலங்காரத்துடனும் ஒரு ராஜா காலத்து கட்டிலில் ஒய்யாரமாக ஒருக்களித்துப் படுத்திருந்தாள். அட்டையில் 'அகம், புறம் , அந்தப்புரம்' என்றிருந்தது. படித்தவர் சிரித்துவிட்டு, நல்லாத்தான் இருக்கும் சார் என்றார். நான் சிரித்துவிட்டு சார், நீங்க நினைக்குற மாதிரிலாம் இருக்காது என்றேன்.

நம்மவர்க்கு எப்பொழுதுமே அந்தப்புரம் என்ற வார்த்தையில் ஒரு சிலிர்ப்பு இருக்கத்தான் செய்கிறது :) .  எப்பொழுதுமே பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தெரிந்து கொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. அவர்களும் எப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள் , வாழ்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதில் ஆர்வம்.


'அகம்,புறம், அந்தப்புரம்'  - குமுதம் ரிப்போட்டரில் இரண்டு வருடங்கள் தொடராக வந்தது. எழுதியவர் முகில் . நானும் இந்த புத்தகத்தை வாங்கி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டாலும் இப்பொழுதான் படிக்க நேரம் கிடைத்தது. நமக்கு எப்பொழுதுமே ராஜா கதைகள் என்றாலே ஒரு ஈர்ப்பு உண்டு. பாட்டி சொல்லும் ராஜா கதைகள் வீரதீர சாகச கதைகளாகவோ அல்லது நீதிக் கதைகளாகவோ இருக்கும். பத்தாம் வகுப்பு பாடத்தில் statistics ஆகவும், அசோகர்  மரம் நட்டார் , குளம் வெட்டினார் என்றும்  இருக்கும். அதையும் தாண்டி ராஜாக்களை பற்றி நாம் அறிய முடிந்ததில்லை. அவர்களுக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருந்தது அதில் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்று பெரும்பாலும் நாம் அறிய முடிந்ததில்லை. அதை இந்த புத்தகம் தீர்த்து வைக்கிறது. இந்த புத்தகம் ஒரு ராஜாவின் அரண்மனையின்  அடுப்படியிலிருந்து அனுமதி மறுக்கப்பட்ட அந்தப்புரம் வரை அனைத்துப் பகுதிகளுக்கும் நம்மை அழைத்துச் செல்கிறது.

இந்த புத்தகத்துக்கான தலைப்பை நான் நிச்சயம் பாராட்டுவேன். ஆயிரம் பக்கத்து புத்தகத்தின் உள்ளடக்கத்தை மூன்றே வார்த்தைகளில் சொல்லிவிடுகிறது 'அகம்,புறம்,அந்தப்புரம்'. அகத்துக்கும் அந்தப்புரத்துக்கும் 66% மும் புறத்துக்கு 33% மும் கச்சிதமாகக் கொண்டிருக்கிறது. புத்தகத்தின் நடை - எதார்த்தமான நடை. எளிய புரிதல் உண்டு. ரொம்பவே ஜனரஞ்சகமானது. ஆனால் சில நேரங்களில் அந்த ஜனரஞ்சகமே இது எந்த அளவிற்கு உண்மை, எவ்வளவு கற்பனை என்பதை புரிந்து கொள்வதற்கு கஷ்டமாகிறது. எனக்கு எந்த ஒரு வரலாற்றுத் தகவலும் உண்மைக்கு மிக அருகில் இருக்க வேண்டும். ஜனரஞ்சகம் என்பதற்காகக் கூட நான் அதை சமரசத்திற்கு உள்ளாக்கமாட்டேன். இந்த புத்தகத்தில் வரும் வசனங்கள் எந்த அளவிற்கு உண்மையாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. இருந்தாலும் வரலாற்றின் மீது சாமானியர்க்கும் ஈர்ப்பை ஏற்ப்படுத்த  இது எல்லாம் தேவைப்படுகிறது.

இந்த புத்தக்கத்தைப் பற்றிப் பார்பதற்கு முன் அது நடந்த காலகட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இந்த புத்தகம் சமஸ்தானத்து மகாராஜாக்களைப் பற்றியது. அதாவது பிரிட்டாஷிரின் ஆட்சியின் கீழ் சுமார் 1800 முதல் 1950 வரை இருந்த மகாராஜாக்களைப் பற்றியது. இந்தியாவில் அப்பொழுது மொத்தம் 536 சமஸ்தானங்கள்  இருந்தன. அவை அனைத்தும் பிரிட்டிசாருக்கு கட்டுப்பட்டே இருந்தன.

இனி புத்தகத்திலிருந்து -

நம்முடைய மகாராஜாக்களை காலையில் பள்ளி அறையிலிந்து எழுப்பி விட, அவர்களை குளிப்பாட்டி விட அவர்களுக்கு டிரஸ் மாட்டி விட இப்படி எல்லாத்திற்கும் பெண்கள். போனால் போகட்டும் என்று கால் கழுவிட மட்டும் ஆண்கள். அடுத்து சாப்பாடு, போரடித்தால் வேட்டை. இன்னும் போரடித்தால் போலோ, கிரிக்கெட்போன்ற விளையாட்டுக்கள். பிறகு மது. மாதுவிற்கு சொல்லவே வேண்டாம். சில மகாராஜாக்கள் பெண்களை கூட்டி வருவதற்கு என்றே தனி 'அமைச்சர்கள்' வைத்திருந்தார்களாம். பிறகு தூங்கச் செல்லுபோது ராகம் பாடி தூங்க வைக்க தனி ஆட்கள். நடுவில் என்றோ ஒருநாள் ஏதோ கொஞ்சம் மனசாட்சி இருந்து உறுத்தினால் மக்கள் பணி !.

இப்படித்தான் எல்லாம் மகாராஜாக்களும் வாழ்ந்திருக்கவில்லை. எல்லாரும் தனிப்பட்ட முறையில் அவர்களுடைய பழக்க வழக்கத்திற்கேற்ப வாழ்க்கை வாழ்ந்தார்கள் . மேற்சொன்ன பழக்க வழக்கத்தில் சில பேரின் பழக்க வழக்கங்கள் சில கூடும் குறையும் அல்லது அவை இல்லாமலேயே இருக்கும். ஆனால் மகாராஜாக்கள் என்றால் என்றால் மக்கள் நலன் கருதாத உல்லாச ஊதாரிகள் என்ற பொதுப் பிம்பம் மட்டும் உருவாகிவிட்டது. இந்த புத்தகத்தை படிக்கும்போது அந்த பிம்பம் ஒன்றும் தவறில்லை என்றே தோன்ற வைக்கிறது.
File:Baroda king on great sowari*.jpg
எல்லா மகாராஜாக்களுக்கும் முதல் திருமணம் நாடு போற்ற பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் நடக்கும். அடுத்த ராஜாவைப் பெற்றெடுக்கப் போகும் பெண்ணல்லவா அதனால் குலம் கோத்திரம் பார்த்தே பெண் பார்த்தார்கள். அதற்கடுத்து ராஜாவின் விருப்பதிற்கேற்ப பல பெண்கள். பெரும்பாலும் ஒரே மதத்தில் ஒரே குலத்தில்தான் எடுப்பார்கள். இவர்கள் அனைவரும் ராணி அந்தஸ்துப் பெரும் பெண்கள். ஆசைநாயகிகள் தனி. இதைத் தவிர ஐரோப்பிய பெண்கள். ஆம் அன்றைய நாளில் பல ராஜாக்கள் ஐரோப்பிய பித்து பிடித்து அலைந்தார்கள்.

பல இளவரசர்கள் படித்தது ஐரோப்பாவில், அதோட பலரும் மறக்காமல் வருடத்திற்கு ஒருமுறையாவது ஐரோப்பிய டூர் போனார்கள். அங்கு அழகான பெண்களைக் கண்டதும் காதல்தான். அடுத்து திருமணம். இவர்களை எந்த ஒரு ஐரோப்பிய இளவரசிகளும் கட்டிக் கொள்ளவில்லை. இவர்கள் கட்டிக் கொண்டதெல்லாம் சாதாரண பெண்கள் . பெரும்பாலும் பாரில் பார்த்த பெண்கள் , பாரில் நடனமாடிய பெண்கள் , நாடகத்தில் நடித்த பெண்கள் இப்படி அனைத்து ஐரோப்பிய பெண்களும் சாதாரணமானவர்கள்.
பெரும்பாலான ஐரோப்பிய பெண்கள் மகாராஜாக்ககளை பணத்திற்காக மட்டுமே திருமணம் செய்திருப்பதாக தெரிகிறது. அந்தப் பெண்களுக்கு 18 ,20 வயசு இருக்கும் . நம் மகாராஜாக்களுக்கோ 40 , 50 வயது இருக்கும் . கபுர்தலா மகாராஜா ஜெகத்சிங் தன்னுடைய ஐரோப்பிய காதலி Eugine மணந்து கொண்ட  போது அவருக்கு வயது 60.  அப்புறம் எப்படி இருக்கும். கபூர்தலா மகாராஜா ஜெகத் சிங் கட்டிய இரண்டு ஐரோப்பிய பெண்களும் அவருக்கு துரோகம் இழைத்தனர். ஆனால் எல்லா ஐரோப்பிய பெண்களும் அப்படி இல்லை. உண்மையாகவே மகாராஜாக்களை காதலித்து அவர்களுக்கு விசுவாசமாக இருந்த பெண்களும் இருந்திருக்கத்தான் செய்கிறார்கள். இந்தூர் மகாராஜா துகொஜி ராவ் கோல்கரின் ஐரோப்பிய மனைவி நான்சி அப்படிப்பட்ட பெண்தான். அவள்தான் மற்ற மகாராணிகளையும்  அவர்களின் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டாள். துகொஜியின் மரணப்படுக்கையில் அவருக்கு செவிலித்தாயாக இருந்து பார்த்துக்கொண்டாள். தன்னுடைய இறுதிக்காலத்திலும் தன் சொந்த நாட்டுக்குச் செல்லாமல் இந்தியாவிலேயே இருந்து 1998 இல் இறந்தார். இப்படிப்பட்ட ஐரோப்பிய பெண்களும் இருந்திற்குக்கத்தான் செய்தனர்.

மகாராஜாக்களுக்கு காதல் வந்தால் இந்தியப் பெண்ணாக இருந்தால் பெரும்பாலும் தூக்கி வந்து திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் சிலமகாராஜாக்கள் தான் விரும்பிய பெண்ணை அவள் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்று ஆசை. மாகாராஜாவாக இருந்தால் என்ன , அவர் காதலித்தால் உடனே அந்தப் பெண்ணும் காதலிக்க வேண்டுமா என்ன ? .  மகாராஜாக்களின் காதலை நிராகரித்த பெண்களும் உண்டு. நம்ம நபா சமஸ்தானத்தின் மகாராஜா ரிபுதாமன் சிங் அப்படிப்பட்டவர்தான். அவருக்கு ஒரு பெண்ணைப் பார்த்ததும் காதல் பீரிட்டு வந்துவிட்டது. ஆனால் அந்தப் பெண் மறுத்துவிட்டாள். நம் மகாராஜா எவ்வளவோ தூது விட்டப் பார்த்தார். அந்தப் பெண் மசியவில்லை. இவர் தொல்லை தாங்காமல் அந்தப் பெண் ஊரை விட்டு குடும்பத்துடன் ஓடப் பார்த்தபோது அவளைக் கைது செய்து சிறை வைத்துவிட்டார். பிறகு அந்த சிறைக்கு ஒரு அன்பான சிறை அதிகாரி வந்தார். அந்தப் பெண்ணை cover செய்து காதல் செய்து கல்யாணம் செய்து கொண்டார். பார்த்தால் அவர்தான் நம் நபா மகாராஜா. பெண்ணிற்கு ஆனந்த கண்ணீர். தன்னை ஒரு மகாராஜா இந்த அளவிற்கு காதலிக்கிறாரே என்று ஆனந்தம். ஆனால் மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்பது போல இது கொஞ்ச காலம்தான்.  ஆனால்  இந்த காதல் எல்லாம் சில காலம்தான். அடுத்து வேறு பெண். வேறு வேடம். வேறு நடிப்பு.

பொதுவாக இளவரசர்களின் முதல் திருமணத்திற்கு முன்பு 'அந்த' விசயத்தில் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். ஆமாம் வருகிற பெண் காறித் துப்பிவிட்டாள் அவமானம் அல்லவா :). இதற்கு என்று அதற்கான சிறப்புப் பெண்கள் நியமிக்கப்பட்டார்கள். கபுர்தலா பட்டத்து இளவரசர் ஜெகத்சிங். ஜெகத்சிங் படு குண்டு. அவருடைய எடையைக் குறைக்க பலரும் படாதபாடுபட்டார்கள். கல்யாணத்திற்குப் பிறகு அந்த விசயத்தில் அவர் சிரமப்படுவார் என்று பல பெண்களை வைத்து சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டது :).

தொடரும் ...