Monday, September 30, 2013

உயிரினங்களுக்கான உலகம் - 2

அன்று பத்திரிகை படித்துக் கொண்டு இருந்தேன். அப்பொழுது அதில் பிரிட்டிஷ் தேனீக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. கிட்டத்தட்ட அவை அழிவின் விளிம்பில் உள்ளன என்று எழுதி இருந்தார்கள். மேலும் அதில் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்தால் அவற்றால் நடக்கும் மகரந்த சேர்க்கை குறைந்துவிடும், பின் விவசாயிகள் மகரந்த சேர்க்கைக்கு இதை விட அதிக செலவாகும் மாற்று முறைகளை நாட வேண்டி வரும், அதற்கு இத்தனை கோடி செலவாகும் என்று எழுதி இருந்தனர். இந்த உலகம் எதிர்கொள்ளும் பல இயற்கை பேரழிவுக்களுக்கு என்ன காரணம் என்று பல நேரங்களில் யோசிப்பேன். தேனீக்கள் அழிந்தால், தான் உண்ணும் உணவு உற்பத்திக்குத் தேவையான மகரந்த சேர்க்கை பாதிக்கப்பட்டுவிடும், அதனால் அதை ஈடு செய்ய செய்யப்படும் மற்ற மகரந்த சேர்க்கை முறைகளுக்கு அதிகம் செலவாகும் என்று தன்னை மட்டுமே எண்ணி வாழ்கிறான் மனிதன். இப்படி அனைத்தையுமே பணம் மற்றும் மனிதன் என்று தன்னை மட்டுமே எண்ணி இருப்பதுதான் இந்த பூமியின் இந்த நிலைக்குக் காரணம் என்று தோன்றுகிறது. எப்படி இவர்களால் இந்த உலகில் அனைத்தையும் அளவிட்டுவிட/மதிப்பிட்டுவிட முடியும் என்று எண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. மனிதன் அறிந்ததே மிகக் குறைவுதான். அதை வைத்துக் கொண்டு அவன் அனைத்தையும் அளவிட, மதிப்பிட முயல்கிறான்.

தேனீ, வண்ணத்துப் பூச்சி போன்ற பூச்சி இனங்கள் அழிந்தால் உண்மையில் மனிதன் நினைத்துப் பார்க்கவே முடியாத பேரழிவு ஏற்படும். இந்த உலகில் நடக்கும் மகரந்த சேர்க்கையில் கிட்டத்தட்ட 35 விழுக்காடு தேனீ மற்றும் வண்ணத்துப் பூச்சி போன்ற உயிரினங்களால் நடக்கிறது. அதில் பெரும் பகுதி தேனீக்களால்தான் நடக்கிறது. இப்படிப்பட்ட தேனீக்கள் அழிந்தால் எப்படிப்பட்ட பேரழிவு ஏற்படும்  என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஐன்ஸ்டீன் ஒரு தடவை , இந்த உலகில் தேனீக்கள் அழிந்த நான்காவது ஆண்டில் மனிதன் இந்த உலகிலிருந்து அழிந்து விடுவான் என்று கூறி இருந்தார். ஏற்கனவே சீனா தேனீக்களின் அழிவின் உக்கிரத்தை உணர ஆரம்பித்துவிட்டது. சீனாவின் சிச்சுவான் பகுதியிலிருந்து தேனீக்கள் அழிந்துவிட்டன. இப்பொழுது அங்கு விவசாயிகள் கைகளால் செய்யும் மகரந்த சேர்க்கை முறையைத் தான் நாடுகிறார்கள். ஓவ்வொரு செடியில், மரத்தில், கொடியில் இருக்கும் பூக்களை கைகளால் பிடித்து ஒன்றை ஒன்று உரசவைத்து மகரந்த சேர்க்கை செய்வதை நினைத்துப் பாருங்கள். கொடுமை .

சரி, இப்படி ஏதோ ஒரு வகையில் தன்னுடைய உணவு உற்பத்திக்கு மாற்று வழிகளை கண்டுபிடித்துவிட்டாலும் மற்ற உயிரினங்களின் வாழ்விற்கு என்ன செய்வது?. இந்த உலகம் இயங்குவதே இனவிருத்தியினால்தான். அதிலும் தாவரங்களே அனைத்து உயிரினங்களின் உணவிற்கும் அடிப்படை என்பதால் அவற்றின் இனவிருத்தியான மகரந்த சேர்க்கை இந்த உலகின் இயக்கத்திற்கு அடிப்படை. ஆனால் மனிதனோ தன்னுடைய உணவு உற்பத்திக்கு தேவையான மகரந்த சேர்க்கை மட்டும் நடந்துவிட்டால் போதும் என்று நினைக்கிறான். மனிதன் ஒன்றை முற்றிலும் மறந்துவிடுகிறான், உணவுச் சங்கிலியில் எந்த ஒரு இடத்திலும் ஒரு தொடர்பு அறுந்துவிட்டாலும் ஒட்டுமொத்த உணவுச் சங்கிலியின் சமநிலையும் பாதிக்கப்படும். மனிதன் தன்னுடைய உணவை தானே உற்பத்தி செய்துவிட்டாலும், அவனால் நிச்சயம் தனித்து வாழ முடியாது. அவனின் இயல்பான வாழ்விற்கு யார் யார், எந்த எந்த இயக்கம் வழி செய்கிறது என்பதே அவனுக்குத் தெரியாது.

உணவுச்சங்கிலியின் உச்சியில் இருக்கும் புலி முதல் உணவுச்சங்கிலியின் அடியில் இருக்கும் தாவரம் வரை அனைத்து உயிரினங்களுக்கும் இந்த உலகின் இயக்கத்தில் பங்கிருக்கு, மனிதன் உட்பட. உணவுச் சங்கிலி அறுபடாமல் இருக்க ஓவ்வொரு உயிரினமும் இந்த உலகில் தேவை. இந்த உலகம் மனிதனுக்கானது மட்டுமே அல்ல. இந்த உலகில் நமக்குத் தெரிந்து இருக்கும் 87 லட்சம் வகை உயரினங்களில் மனிதன் ஒரு வகை உயிரினம் தான். இந்த உலகில் இருக்கும் லட்சக்கணக்கான கோடி உயிரினங்களில் 700 கோடி மனிதர்கள் என்பது மிகச் சிறு எண்ணிக்கை. ஆனால் அந்த சிறு எண்ணிக்கைக்கு, ஏதோ இந்த பூமி தனக்கே தனக்காக மட்டுமே படைக்கப்பட்டதாக நினைப்பு.

இந்த தேனீக்கள் அழிவதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இதற்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்று என்று கருதப்படுகிறது. இதனாலையே பல ஐரோப்பிய நாடுகள் இன்று பல பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தடை செய்துவிட்டன. தேனீக்களின் உணவான தேனீ மற்றும் மகரந்தத்திற்காக பல காட்டுச் செடிகளை வளர்க்க ஊக்குவிக்க ஆரம்பித்துள்ளன. இந்தியா உட்பட மற்ற நாடுகளும் சீக்கிரமே விழித்துக் கொண்டால் நல்லது, இல்லையேல் இன்று சீனாவிற்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்ப்பட்ட நிலையே, நாளை அவர்களுக்கும் ஏற்படும்.

மனிதன் இந்த பூமிக்கு மாற்று தேடி அவ்வளவு சிரம்மப்பட்டு இந்த ஆண்ட சராசரம் முழுவதும் பிற கோள்களைத் தேடும் செய்திகளைப் படிக்கும் போது எனக்குப் சில நேரங்களில் சிரிப்பாகவும் பல நேரங்களில் எரிச்சலாகவும் கோவமாகவும் இருக்கும். இந்த பூமிக்கு மாற்று எதுவும் கிடையாது. பிற கோள்களில் இருக்க இடம் தேடி அலைவதில் இவர்கள் காட்டும் சிரமத்தில் சிறு அளவேனும் இந்த பூமியை காக்க காட்டினால் இந்த பூமியை விட சொர்க்கம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால் அதை மனிதன் இந்த பூமியை அழித்துவிட்டுத்தான் உணருவான் என்று தோன்றுகிறது :(.

Image Courtesy : http://www.benzruizphotography.com/2013/05/07/flower-and-bee-in-dahilayan/flower-and-bee-in-dahilayan/

Saturday, September 21, 2013

London Titbits - 2

  • புதிதாக லண்டன் வருபவர்களுக்கு லண்டன் நிச்சயம் ஆச்சரியம் கொடுக்கும். சில பேருக்கு அதிர்ச்சியே கொடுக்கும் . NewYork போன்ற நகரத்தை எதிபார்த்து வந்தால் லண்டன்  நிச்சயம் அதிர்ச்சிதான். ஏனெனில் இங்கு நீங்கள் மிக உயர்ந்த கட்டிடங்களை அதிகம் காண முடியாது. சிறிது காலத்திற்கு முன்பிருந்துதான் உயரமான கட்டிடங்கள் வர ஆரம்பித்துள்ளன. அதேபோல பல முக்கிய சாலைகள் கூட two lane சாலைகள்தான். இரண்டு பஸ்கள் எதிரெதிரே வரும்போது மிக நெருக்கமாகச் செல்லும். நம்ம ஊரில் கூட நீங்கள் இங்கு இருப்பதை விட பெரிய சாலைகளைக் காண முடியும். அதே போல பல வீடுகளில் கார் பார்க்கிங் இருக்காது. அவர்களின் கார்களை சாலையின் இருபுறங்களில்தான் நிறுத்தியிருப்பார்கள். அது அவர்களுக்கு என அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட இடம் தான் . அவற்றிற்கிடையே இருக்கும் அந்த ஒரு லேனில் பஸ்ஸு செல்வதே ஆச்சரியமாக இருக்கும். 
  • இங்கிலாந்துகாரர்கள் பழமையை போற்றுபவர்கள் . பாரில் கூட ரொம்ப பழமையான பாரில்தான் அதிக கூட்டம் இருக்கும் . எங்க அலுவலகத்துக்கு முன்னாடி இருக்கும் ஒரு பார் 1615 இல் கட்டப்பட்டது. அந்த பாரில் அவ்வளவு கூட்டம் இருக்கும் . அதே போல் பல வீடுகளில் பெருமையாக 1600, 1700 ,1800 களில் கட்டப்பட்டது என்று குறிப்பிட்டுருப்பார்கள். இங்கு கவுன்சில் அலுவலகங்களில் நீங்கள் குடி இருக்கும் வீட்டில் இதுவரை யார், யார்  குடி இருந்தார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.   இங்கிலாந்துகாரர்கள் எந்த அளவிற்கு பழமை விரும்பிகள் என்றால் , அந்த காலங்களில் பஸ்ஸில் போகும்போது ஒரு இடத்தில் இறங்க வேண்டும் என்றால் , அந்த பஸ்ஸில் கட்டி இருக்கும் ஒரு மணியைப் பிடித்து இழுப்பார்கள் , டிரைவர் பஸ்ஸை நிறுத்துவார். அதே போல் இப்பொழுதும் பஸ்ஸை நிறுத்த அழுத்தும் சுவிட்ச்சில் இருந்து மணியோசைதான் வரும் :).  இங்கிலாந்தின் பழமையைப் பாதுகாக்க அதிக முனைப்பு காட்டுவார்கள் . அதனால் ஒரு வீடு கட்டும்போது அந்த வீட்டின் செங்கலின் நிறத்தைக்கூட அந்தந்த பகுதி கவுன்சில்கள்தான் தீர்மானிக்கும். எனவே ஒரு வீடு மற்றொரு வீட்டிலிருந்து வெளிப்புற தோற்றத்தில் பெரிதாக மாறுபடாது.
  • எனக்கு இவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் ரொம்ப பிடிக்கும் . நிச்சயம் சரிவிகித உணவுகளை உண்ணுகிறார்கள். காலையில் காய்கறி அல்லது பழ சாலடையும் , சூப்பும் அதிகம் சாப்பிடுகிறார்கள். உணவிற்குப் பின் நிச்சயம் ஒரு பழம் எடுக்கிறார்கள். அதேபோல் உடற்பயிற்சியில் இவர்களின் ஈடுபாடும் ஆச்சரியம்  அளிக்கிறது.   காலையும் மாலையும் ஜாக்கிங் செல்பவர்களை அதிகம் பார்க்க முடியும் . முடிந்த அளவு சைக்கிளில் அதிகம் செல்ல நினைக்கிறார்கள் . வெயில் காலம் ஆரம்பித்துவிட்டாலே நீங்கள் அதிகம் சைக்கிளைப் பார்க்கலாம். இத்தகைய பழக்க வழக்கங்கள் நிச்சயம் மற்ற மேற்கு உலக நாடுகளிலும் இருக்கலாம் ஆனால் நேரில் பார்க்கும்போது நன்றாக இருக்கிறது. இங்கு உடற்பயிற்சி எடுக்க அரசாங்கம் அதிகம் ஊக்குவிக்கிறது. ஊரின்  ஒவ்வொரு மூலையிலும் பூங்காவை நீங்கள் அதிகம் காண முடியும். அது சிட்டியின் மிக மத்தியப் பகுதிகளாக இருந்தாலும் அவ்வளவு பெரிய பூங்காவை நீங்கள் காண முடியும். இப்படி  மூலைக்கு மூலை பூங்கா இருந்தால் ஏன்தான் எந்த நாடும் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் பெறாது. இதைப் பார்க்கும்போது சைக்கிள் கற்றுக் கொள்வதற்குக் கூட பூங்கா இல்லாமல் தெருவில் ஓட்டி மற்றவர்களின் மீது மோதி திட்டு வாங்கும் நம் ஊர் சிறுவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
  • இங்கிலாந்தின் மீது இவர்கள் காட்டும் ஈடுபாடு நிச்சயம் ஆச்சரியம் . இந்த வருட ஆ ஷஸ் போட்டியின் போது எங்கும் எப்படி இங்கிலாந்து கிரிக்கெட் fever இருந்ததோ அதேபோன்று விம்பிள்டனில் ஆன்டி முர்ரே ஜெயித்த போது எங்கும் முர்ரே fever தான் . இந்த தடவை final இல் ஆண்டி முர்ரே விளையாடியாதால் , டிக்கெட்டின் விலை 83,000 GBP. அதாவது நம்ம ஊர் மதிப்பில் 83 லட்சம் ரூபாய்!.  இது அதன் முகமதிப்பான 260 GBP ஐ விட 322 மடங்கு அதிகம் . அதேபோன்று supermarket லாம் போனால் British meat, British Milk , British Potato என்று பிரிட்டிஷ் பொருட்களுக்கு என்று தனி விளம்பரமும் மதிப்பும் கொடுப்பார்கள். அதே போன்று பிரிட்டிஷ் கார்களுக்கு என்று எப்பொழுதுமே தனி மதிப்பு கொடுப்பார்கள். இந்த உணர்வு அனைத்து நாடுகளுக்குமே பொருந்தும் என்றாலும் இதை மற்றொரு நாட்டில் நேரில் பார்க்கும் போது ஏதோ இனம் புரியாத ஆச்சரியம் ஏற்படுகிறது .
  • அதே போன்று இங்கிலாந்து அரச குடும்பத்தின் மீது இவர்களின் பற்றும் இவர்கள் காட்டும் மதிப்பும் ஆச்சரியம் . இங்கிலாந்து அரச குடும்பம் பற்றி ஒரு செய்தி அல்லது புகைப்படமாவது இல்லாமல் ஒரு நாளும் இங்கு உள்ள பத்திரிகைகள் வராது . வில்லியமிற்கு அரச வாரிசு ஜார்ஜ் பிறந்தபோது பத்திரிகைகள் எங்கும் அதே செய்தி. ஊரே குதூகலமாக இருந்தது.
  • பல நாட்டவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இங்கிலாந்து முக்கிய இடம் வகிக்கிறது. அமெரிக்காவிற்கும் இதில் முக்கிய இடம் இருந்தாலும் சதவிகித அடிப்படையில் பார்த்தால் நிச்சயம் இங்கிலாந்து அமெரிக்காவை விட முன்னில் இருக்கும் என்று தோன்றுகிறது. நான் மற்றயதொரு பதிவில் சொன்னமாதிரி லண்டனில் இருக்கும் 33 borough க்களில், 30 borough க்களில் குறைந்தது 100 மொழி பேசுகிறார்கள் . இத்தகைய காரணங்களினால்தான் ICC எப்பொழுதும் இங்கிலாந்திலேயே உலக கோப்பை கிரிக்கெட் நடத்த விரும்பும் . அப்போழுதுதான் அனைத்து நாடுகளின் போட்டிகளுக்கும்  கூட்டம் வரும் என்பதற்காக. ICC இத்தகைய காரணத்தை விரும்பும்போது அதை வெறுப்பவர்களும் இருக்கிறார்கள். இங்கிலாந்து இந்தியாவிற்கு இடையே நடைபெற்ற Champions Trophy கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து அணியைவிட இந்திய அணிக்கே அதிக கூட்டம் சேர்ந்தது. பல நேரங்களில் போட்டி மும்பையில் நடக்கிறதா இல்லை லண்டனில் நடக்கிறதா என்றே தெரியாதது மாதிரி இருந்தது . இதனாலையே அதை வெறுத்து , மற்ற நாடுகளில் இருந்து குடியேறிய முதல் தலைமுறையினர், தான் பிறந்த நாட்டின் அணியை ஆதரிக்கட்டும் ஆனால் அவர்களின் தலைமுறையினர் இங்கிலாந்து அணியையே ஆதரிக்க வேண்டும் என்று எழுதியவர்களும் உண்டு. 
  • நம்ம நாட்டை விட இங்கு அதிகம் இரட்டைக் குழந்தைகளைக் காணுவதாக எனக்குத் தோன்றுகிறது. அதிலும் ஒரே trolly யில் இரண்டு அடுக்கு வைத்துக் கொண்டு இரட்டைக் குழந்தைகளை அழைத்துச் செல்பவர்களை அதிகம் காண முடியும்.
Photo Courtesy : http://www.coachcalorie.com/benefits-of-outdoor-exercise/

Saturday, September 7, 2013

உலகமயமாக்கலிலிருந்து உள்ளூர்மயமாக்கல்


சற்று நாட்களுக்கு முன்பு Isle of Wight டூர் போயிருந்தோம் . அங்கு போனபிறகு, சாப்பாட்டிற்கு என்ன வழி என்று திணறியபொழுது கண்ணில் McDee பட்டபிறகுதான் அனைவருக்கும் நிம்மதி. எப்படியும் ரெண்டு நாட்களை McDee யை வைத்து ஓட்டிவிடலாம் என்று தோன்றியது. அப்புறம் சுற்றிப் பார்த்தால் எங்கும் Costa, StarBucks, McDee, Dominoz என்று எங்கும் தெரிந்த உணவுக் கடைகள். உலகமயமாக்களின் (Globalization) னின் ஆகச் சிறந்த மாற்றம் இதுதான். இன்று இந்த உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் நிச்சயம் உங்கள் ஊரில் இருக்கும் அதே கடைகளை, பொருட்களை, உணவுகளை அங்கே நீங்கள் பார்க்க முடியும். அதனால் உங்களை பெரிதாக மாற்றிக்கொள்ளாமல் அல்லது மாற்றுவதற்கு அதிக கஷ்டப்படாமல் அங்கு நீங்கள் வாழ முடியும். ஆனால் எனக்கோ இதுதான் globalization னின் மிகப் மோசமான மாற்றமாகத் தோன்றுகிறது.

முன்பெல்லாம் நம்ம ஊரில் , நம்ம அம்மா அப்பா வெளியூருக்குப் போய் வந்தால் அந்த ஊரில் என்ன ஸ்பெசலோ அது நிச்சயம் வாங்கி வருவார்கள். திருநெல்வேலி அல்வா , மதுரை கலர் பூந்தி இப்படி பல. ஆனால் இப்பொழுது நீங்கள் திருநெல்வேலி போகாமலையே உங்க ஊரிலேயே திருநெல்வேலி அல்வா வாங்கிவிட முடியும். இதுதான் உலகமயமாக்கலின் மாற்றம்.

அன்னைக்கு என் friend கிட்ட பேசிகிட்டு இருக்கும்போது , நீ எனக்கு என்ன வாங்கிட்டு வருவன்னு கேட்டா, அதுக்கு நான் , 'என்ன வேணும்னு சொல்லுனு' சொன்னேன். அதுக்கு அவ 'அங்க என்ன special லோ அத வாங்கிட்டு வா' னு சொன்னா. எனக்கு என்ன வாங்கணும்னே தோணல . லண்டன்ல என்ன ஸ்பெசல்னு யோசிச்சுப் பாத்தா எனக்கு எதுவுமே தோணல . இங்க கிடைக்குற எல்லாமே அங்க கிடைக்குது . அப்புறம் என்ன ஸ்பெசல். உலகம் முழுசா கிடைக்குற திருநெல்வேலி அல்வால என்ன ஸ்பெசல் இருக்கப் போகுது.

இந்த உலகமயமாக்கலினால் அனைத்து ஊர்களும்  தங்களோட அடையாளத்தை இழந்துவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. இப்படி திருநெல்வேலி போன்ற ஊர்கள் தங்களுடைய அடையாளங்களை ஏற்றுமதி செய்து அடையாளங்களை இழக்கும் பொழுது உலகமயமாக்கலால் இறக்குமதி செய்யப்பட்ட வெளியூர் அடையாளங்களினால் தங்களின் உள்ளூர் அடையாளங்களை தொலைத்துவிட்டு இருக்கும் ஊர்கள் ஏராளம். இந்த கலாச்சார மறத்தல் உலக அளவில் நடக்கிறது ஆனால் அது உள்ளூர் அளவில்தான் தொடங்குகிறது. என் பாட்டி காலத்தில் இருந்த பருத்திப்பாலும், பதனியும் எங்க அம்மா காலத்தில் வந்த காப்பியால் மறக்கடிக்கப்பட்டது. அந்த காப்பி இப்பொழுது என் காலத்தில் உள்ள coke ஆல் மறக்கடிக்கப்படுகிறது.

இந்த உலகில் இருந்த நூற்றுக்கணக்கான மொழிகள் ஆங்கிலம், பிரஞ்சு , ஸ்பானிஷ் , ஹிந்தி போன்ற மிக பிரபலமான மொழிகளாலும் பிரதியீடப்படுகின்றன(replace). அந்தந்த வட்டார மொழிகள் மாநில மொழிகளாலும் , மாநில மொழிகள் தேசிய மொழிகளாலும் , தேசிய மொழிகள் சர்வதேச மொழிகளாலும் பிரதியீடப்படுகின்றன. ஒரு மொழி என்பது வெறுமனே மொழி மட்டுமே அல்ல அது ஒரு இனத்தின் கலாச்சராம் , பண்பாடு , பாரம்பரியம் இப்படி பன்முகத்தன்மை கொண்ட ஒரு தகவல் களஞ்சியம் . ஒரு மொழி அழியும் போது நூற்றுக்கணக்கான வருடங்களால் ஒரு இனத்தால் அரும்பாடுபாடு சேர்க்கப்பட்ட தகவல்களும் சேர்ந்து அழிகிறது.

உடை என்று வரும்பொழுது அது உலகமயமாக்கலின் உச்சம். இன்று ஆண்களுக்கு சட்டை , பேன்ட் என்பதை தவிர வேறு உடையே உலகில் இல்லை என்று ஆகிவிட்டது. என்ன ஒரு கொடுமை. நம்ம ஊரில் ஆண்களுக்கு வேட்டி என்று இருப்பது/இருந்தது  போல உலகில் அனைத்து நாகரீகங்களும் அவர்களுக்கு என்று தனித்த பாரம்பரியம் கொண்ட உடைகளை கொண்டிருக்கின்றன . ஆனால் அவை எல்லாம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

சிறிய வட்டங்கள் பெரிய வட்டங்களால் விழுங்கப்பட்டு அந்த பெரிய வட்டம் அதை விட பெரிய வட்டத்தால் விழுங்கப்பட்டு கடைசியில் ஒரே ஒரு வட்டம் மட்டுமே எஞ்சி இருப்பது போன்ற நிலைதான் உண்டாகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது . Atlast only one choice would be leftover for human :( . 

நான் இங்கு வணிகப் போட்டியைப் பற்றி கூறவரவில்லை. எனக்கு மக்களின் ரசனைகள் அனைத்தும் ஒரே மாதிரி ஆகிவிட்டன என்றே பயம். சிறிது நினைத்துப் பாருங்கள் உலகின் அனைத்து மக்களும் Dominoz பீசாவையோ, Indian Curry யோ மட்டுமே சாப்பிட்டுக் கொண்டு,Costa காபியையோ அல்லது Coke யோ மட்டுமே குடித்துக்கொண்டு , ஏதோ Rock இசையை மட்டுமே கேட்டுக் கொண்டு Cricket அல்லது football யோ மட்டுமே விளையாடிக் கொண்டு, ஹாலிவுட் அல்லது பாலிவுட் படங்களை மட்டுமே பார்த்துக் கொண்டு, ஐயையோ நினைத்துப் பார்க்கவே படுபயங்கரமாக இருக்கிறது . இப்படி அனைவரின் ரசனையும் ஒரே மாதிரி ஆகிவிட்டால் அவர்களின் சிந்தனைகளும் ஒரே மாதிரி ஆகிவிடும் என்றே பயமாக இருக்கிறது. சிறிது நினைத்துப் பார்த்தால் மூன்றாம் கண்ணோட்டம் (third party view) என்பதே இல்லாமல் போகிவிடுமோ என்று தோன்றுகிறது. நான் சொல்லுவது கொஞ்சம் அதிகப்படியாகவே தோன்றலாம். ஆனால் நான் சொல்லுவதற்கு கொஞ்சம் குறைந்தோ அல்லது குறைந்த வேகத்திலோ ஆனால் நான் பயப்படும் திசையில் இந்த உலகம் செல்லுவதாகவே தோன்றுகிறது. இதில் இந்த நாடு அந்த நாடு , இவர் அவர் என்றில்லை. பிறரின் எதோ ஒரு அடையாளம் நம்முடைய அடையாளத்தை அழிக்கும்போது நம்முடைய எதோ ஒரு அடையாளம் பிறரின் அடையாளத்தை அழிக்கிறது .

உலகமயமாக்கல் என்பதற்கு ஒரு காலம் உண்டானபொழுது உள்ளூர்மயமாக்கல் (localization) என்பதற்கு ஒரு காலம் வரவேண்டும். குறைந்தபட்சம் உலகமயமாக்களுக்குள் உள்ளூர்மயமாக்கல் என்பதாவது  உருவாகவேண்டும் (localization within globalization).நான், மற்ற பகுதி மக்கள் சார்ந்த விசயங்களை ஒருவர் பின்பற்றக் கூடாது என்று சொல்லவில்லை, ஆனால் நமக்கு சவுகரியமான மற்றவர்களின் விசயங்களைப் பின்பற்றும்போது நாம் சார்ந்த விசயங்களை மறந்துவிடக்கூடாது என்றே தோன்றுகிறது .

எனக்குத் தெரிந்து மற்ற உயிரினங்களைக் காட்டிலும் மனிதர்களிடையே தான் பன்முகத்தன்மை (diversity) அதிகம் என்று தோன்றுகிறது. உணவு , உடை , உறைவிடம் , பொழுதுபோக்கு , ரசனை, கலாச்சாரம், மொழி, கடவுள்(!) இப்படி தான் சார்ந்த அனைத்து விசயங்களிலும் இத்தனை வித்தியாசங்கள் கொண்ட உயிரினம் எனக்குத் தெரிந்து உலகில் இல்லை. மனித வாழ்க்கையில் சுவாரசியத்திற்கு மிக முக்கிய அடிப்படையே  இந்த பன்முகத்தன்மை தான் . மனிதன் தங்களுக்குள்ளே உள்ள வேறுபாடுகளை மறந்து வாழ வேண்டும் ஆனால் அதே சமயம் தான் கொண்ட பன்முகத்தன்மை மறைந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இல்லையென்றால் வாழ்க்கை சுவாரசியமற்றுப் போவதோடு இல்லாமல் அனைவரின் சிந்தனைகளும் ஒன்றாகி உலகில் ஒரே ஒரு கண்ணோட்டம் என்பதே உருவாகிவிடும் :( .

பின்குறிப்பு :
இங்கு கலாச்சாரம் என்று நான் கூறுவது உணவு , உடை , உறைவிடம் , பொழுதுபோக்கு இப்படி மனிதன் சார்ந்த அனைத்து விசயங்களையும் குறிக்கும் .

Image Courtesy: shutterstock.com