Friday, October 11, 2013

சச்சின் !

அன்று அந்த சின்னப் பையன் பாகிஸ்தான் மண்ணில் காலெடி எடுத்து வைத்த போது அவன் இந்த கிரிக்கெட்டில்  காலாகாலத்திற்கும் நிலைத்திருக்கக்கூடிய  பல சாதனைகளைப் படைத்து இந்த உலகில் கிரிக்கெட்டின் போக்கையே மாற்றப் போகிறான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை . சச்சினின் 200* டெஸ்ட் போட்டி , அதிக ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றது, ஒரு நாள் போட்டியில் முதல் 200 ரன்கள், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள், 100 சதங்கள் போன்ற சாதனைகள், பிராட்மேனின் 99.94, ஜிம்னாஸ்டிக்கில் perfect 10 போன்று சாகா வரம் பெற்றவை.
இவற்றிலெல்லாம் சச்சினின் ஆகப் பெரிய சாதனை என்னவென்றால் கடைக்கோடி ரசிகனிலிருந்து கிரிக்கெட் விமர்சகர் வரை அனைவராலும் விரும்பப்பட்டதுதான்.  சச்சினின் அந்த straight drive பவுண்டரியைத் தாண்டும்போது அதில் இருக்கும் மின்னல் வேகம் கடைக்கோடி ரசிகனைக் கவரும் போது, அதே நேரத்தில் அதில் இருக்கும் அந்த நேர்த்தி அந்த விமர்சகரை கவர்ந்தது. இப்படி அந்த கடைக்கோடி ரசிகனிலிருந்து அந்த விமர்சகர் வரை அனைத்து ரசிகர்களுக்கும் கொடுப்பதற்கு சச்சினிடம் ஏதாவது ஒன்றாவது இருந்தது.

இந்த விளையாட்டு உலகில் முகமது அலி, ரோஜர் பெடரர், டைகர் உட்ஸ், டான் ப்ராட்மான், பீலே, மைக்கேல் ஜோர்டன், கார்ல் லீவிஸ் போன்ற மிகச் சிலரே அனைத்து காலகட்டத்திலும் சிறந்தவர்களாக விளங்கி உள்ளார்கள். அந்த வரிசையில் சச்சினுக்கும் இடம் இருக்கிறது என்று நினைக்கும் போது இனம் புரியாத பேருவகை  உண்டாகிறது. சச்சினால் front foot,back foot, off side, on side, இப்படி அனைத்து வித முறைகளிலும் ஆட முடியும். எப்படி spin bowling அ சமாளித்து ஆட முடியுமோ அதே அளவிற்கு fast bowling லிலும் ஆட முடியும். டெஸ்ட் , ஒரு நாள் போட்டி, T20 என்று கிரிக்கெட்டின் அனைத்து பரிமாணங்களிலும் பரிமளிக்க முடியும். சச்சினின் விளையாட்டில் எந்த ஒரு குறையும் சொல்ல முடியாது. ஒரு முழுமையான கிரிக்கெட் வீரர். சச்சினைப் பற்றி விவியன் ரிச்சர்டர்ஸ் கூறியது சாலப் பொருந்தும் . 'I think he is marvellous. I think he will fit in whatever category of Cricket that has been played or will be played, from the first ball that has ever been bowled to the last ball that's going to be. He can play in any era and at any level. I would say he's 99.5% perfect'  - Viv Richards.

சச்சின் அனைவராலும் பாராட்டப்படுவதற்கு காரணம் அவரின் திறமை மட்டுமல்ல கிரிக்கெட்டின் மீதான அவரின் ஈடுபாடு மற்றும் அர்பணிப்பு உணர்வு . இந்த உலகில் ஒருவர் தன்னுடைய திறமையை மட்டுமே வைத்து முன்னேறி விடமுடியாது. திறமை மட்டுமே கொண்டிருந்த பலரும் இந்த உலகில் எரி நட்ச்சத்திரங்கள் போல சிறிது காலம் மட்டுமே மின்னி மறைந்து போய்விட்டார்கள். அர்பணிப்பு உணர்வும் தீர்மானமும் தான் ஒருவரை சூரியன் போல பல ஆண்டுகள் பிரகாசிக்கச் செய்யும். நல்ல காலகட்டங்களில்தான் ஒருவரின் திறமை வெற்றிக்கு வழி வகுக்கும், ஆனால் ஒருவரின் வாழ்நாளின் மோசமான தருணங்களில் அவரின் ஈடுபாடும், அர்பணிப்பு உணர்வும், மன உறுதியும், வெற்றி பெறவேண்டும் என்ற தீர்மானமும்தான் அவரின் வெற்றிக்கு வழி வகுக்கும். இவை அனைத்தும் சச்சினிடம் அதிகம்.

சச்சின் முழங்கை மூட்டுப் பிரச்சனையால் தன்னுடைய form ஐ இழந்து தவித்த போது, சச்சின் இனி அவ்வளவுதான் என்று கூறியவர்களுக்கு தன்னுடைய அர்பணிப்பு உணர்வாலும் தீர்மானத்தாலும் மிகுந்த பயிற்சி எடுத்து தன்னுடைய விளையாட்டு முறையையே மாற்றி தான் இழந்த form ஐ மீட்டு, அவர்களுக்கு பதில் கூறினார். என்னைப் பொருத்தவரை அவர் தன்னுடைய முழங்கை மூட்டுப் பிரச்சினையால் form ஐ இழந்து தவித்ததற்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்வேன். இல்லையென்றால் பிற்காலத்தில் வரும் சந்ததிகள், கடவுளின் அருளால் சச்சின் பிறக்கும்போதே அனைத்து திறமைகளையும் கொண்டிருந்தார், கடவுளின் அருள் பெற்றவர் செய்யும் சாதனைகளில் என்ன சிறப்பு இருக்கப் போகிறது என்று கூறி இருப்பார்கள். அந்த முழங்கை மூட்டுப் பிரச்சினைதான், இல்லை, சச்சின் ஒன்றும் கடவுளின் அருளால் தன்னுடைய திறமையைப் பெறவில்லை, அவரின் திறமை அனைத்தும் அவரே தானே கஷ்டப்பட்டு வளர்த்துக் கொண்டது என்பதை நிலைநிறுத்தியது.

சச்சின் அளவிற்கு இந்த கிரிக்கெட்டில் வேறு எந்த ஒரு வீரரும் இவ்வளவு அழுத்தத்தைச் சந்தித்திருக்கமாட்டார்கள். 90 களில் இந்தியா முழுக்க முழுக்க சச்சினை மட்டுமே நம்பி இருந்தது. சச்சின் ஒவ்வொரு முறை களம் இறங்கும் போதும் அவரின் நூறு கோடி ரசிகர்கள் அவரிடம் இருந்து சதத்திற்கு குறைவாக வேறு எதையும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. சச்சின் 20 ரன்களில் அவுட் ஆனால் கூட சச்சின் இன்னைக்கு சதத்தை தவறவிட்டுட்டாண்டா என்றுதான் கூறினார்கள். இத்தனை அழுத்தத்திற்கு இடையிலும் சச்சின் 100 சதங்களை எட்டியதுதான் அவரின் சாதனை. இதுதான் சச்சினின் சாதனைகளை மற்றவர்களின் சாதனைகளிலிருந்து வேறுபடுத்திக்காட்டியது.  அவரின் இந்தச் சாதனையும், அர்பணிப்பு உணர்வும், கிரிக்கெட்டை அவர் தொழுததும்தான் அவரின் கோடானுகோடி ரசிகர்களை அவரைத் தொழச் செய்தது. இதுதான், மாத்யூவ் ஹைடனை 'I have seen God, he bats at no. 4 for India' என்று கூற வைத்தது. 

சச்சினை பற்றிப் பல பிரபலங்களும் வியந்து கூறி இருக்கிறார்கள். அவற்றில்
Peter Roebuck கூறியது , இந்தியாவில் சச்சின் என்ற ஒரு தனி மனிதன் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் என்பதைத் தெளிவாகக் காட்டும். 'On a train from Shimla to Delhi, there was a halt in one of the stations. The train stopped by for few minutes as usual. Sachin was nearing century, batting on 98.The passengers, railway officials, everyone on the train waited for Sachin to complete the century. This Genius can stop time in India!!' - Peter Roebuck 

 பிற்கால சந்ததிகள் சச்சின் என்ற ஒரு கிரிக்கெட் வீரர் இருந்தார், அவர் இந்த அளவிற்கு இந்தியாவில் தாக்கத்தை கொண்டிருந்தார், அவர் காலத்தில் என்னைப் போன்ற கோடிக்கணக்கான ரசிகர்களும் வாழ்ந்தார்கள் என்பதை நம்ப மறுப்பார்கள்.

என் தம்பி மது கூறியது போல என்னுடைய கிரிக்கெட் சச்சினிடம் தொடங்கி சச்சினிடமே முடிந்து விட்டது. சச்சின் இல்லாத கிரிக்கெட்டை நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் சச்சின், என்னைப் போன்ற கோடானு கோடி ரசிகர்களுக்கு நீ கொடுக்கவேண்டியது எல்லாம் கொடுத்துவிட்டாய். இதற்கு மேலும் நாங்கள் உன்னிடம் இருந்து வேறு எதுவும் எதிர்பார்க்கவில்லை. Its enough. Take rest.