Saturday, October 18, 2014

ஓநாய் குலச்சின்னம் - எனது அனுபவம்


ஒரு பாரில் ஒருவர் ஒயின் குடித்துக்கொண்டிருந்தார் . ரொம்ப நேரம் ஆகியும்  அவர் கையில் இருந்த ஒயின் கிளாஸ் அப்படியே இருந்தது . ஒருவர்  அவரிடம் போய் என்ன சார் நீங்க குடிக்கலையானு கேட்டாராம், அதற்கு அவர், இல்ல அப்பத நான் குடித்த அந்த ஒரு சிப் ஒயினின் சுவையையே இன்னமும் ரசித்துக்கொண்டிருக்கிறேன் என்றார் . அதேமாதிரிதான் நானும் இந்த ஓநாய் குலச்சின்னம்  புத்தகத்தை ரசித்து ரசித்து படித்தேன்.  சில நாளிலாம் புத்தகத்தின் சுவாரசியத்தில் ரொம்ப பக்கங்கள் படித்துவிடுவேன் . கொஞ்ச நேரத்துல, அய்யயோ ரொம்ப பக்கம் படிச்சுட்டோம்னு , டக்குனு புத்தகத்த மூடிருவேன் . இந்த புத்தகத்த ஒரு  சுவாரசியமான புத்தகமாக  மட்டும் கருதி வேகமாக படிக்க விரும்பல. ஏன்னா இந்த புத்தகம் நம் கண் முன்னே மங்கோலியாவையும் அதன் நாடோடி வாழ்க்கையையும் அவ்வளவு அழகா விவரிக்கிறது .

ஓநாய் குலச்சின்னம் - இந்த புத்தகத்த ஒரு வருடத்திற்கே முன்பே எனக்குத் தெரிஞ்சது . இந்த வருட புத்தக கண்காட்சியில் கட்டாயம் வாங்கனும்னு நினைச்சுட்டுப் போன புத்தகமும் இதுதான். இந்த புத்தகம்  என்னை முதலில் கவர்ந்ததற்குக் காரணம் இயற்கையும் ஓநாயும். இயற்கை - எப்பொழுதும் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்று.  அடுத்தது  ஓநாய் என்ற விலங்கைப் பற்றி ஆற்றிய ஆர்வம் . ஓநாயைப் பற்றி எனக்குப் பெரிசா நல்ல அபிப்பிராயம் கிடையாது இந்த புத்தகத்தை படிக்கிறவரை. என்னதான் எனக்கு இயற்கையை ரொம்ப பிடிக்கும், விலங்குகள், பறவைகள ரொம்ப பிடிக்கும்னு சொல்லிக்கிட்டாலும் , புலி , யானை போன்ற பெரிய பாலூட்டிகளின் மீது நல்ல அபிப்பிராயமும், நரி , ஓநாய் , கழுதைப் புலி போன்ற சில விலங்குகளின் மீது நல்ல அப்பிப்பிராயம் இல்லாமல் இருந்தது . இந்த புத்தகத்த படிச்சபுறம்தான்  இப்பூமியில் ஒவ்வொரு உயிரினத்தின் அவசியத்தையும் ஆழமா உணர முடியுது. 

இப்புத்தகம் சீன கலாச்சார புரட்சி காலகட்டத்தில் நடக்கிறது . ஜென்சென்னும் அவருடைய தோழர்கள் மூவர் உட்பட மாணவர்கள் பலர் சீன அரசாங்கத்தால் ஒலோன் புலோக் என்னும் மங்கோலிய உட்பகுதிக்கு அனுப்பப்படுகிறார்கள் . சீன கலாச்சாரப் புரட்சியின் ஒரு பகுதியாக, கிராமப்புற மக்களுடன் பழகுவதற்கும்,  நான்கு பழமைகளான பழைய சிந்தனை, பழைய கலாச்சாரம், பழைய சடங்குகள் , பழைய பழக்க வழக்கங்களை நீக்கி புரட்சியை பூரணமாக்குவதற்காக அக்காலங்களில்சீனாவில் கிராமப்புறங்களுக்கு இவ்வாறு மாணவர்கள் அனுப்பப்பட்டார்கள் . அவர்களுடன் படைப்பிரிவினரும் செல்வார்கள். இப்படியான சீனக் கலாச்சாரப் புரட்சியினால் மங்கோலியர்களின் கலாச்சாரமும், அவர்களின் புல்வெளியும் அந்தப் புல்வெளியைக் காக்கும் ஓநாய்களும் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதை மிக இயல்பாக விவரிக்கிறது இந்த  புத்தகம் . இந்த புத்தகத்திலிருந்து மங்கோலியர்களின் நாடோடி வாழ்க்கை முறையையும் , அவர்களின் காலச்சராத்தையும் , இயற்க்கைக்கு அவர்கள் கொடுத்த மதிப்பையும், அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு அவர்களின் ரத்தத்தில் கலந்து ஓடியதையும் மிக அருமையாக விவரிக்கிறது . இந்த புத்தகமானது சீன மாணவர் ஜென்சென்னின் மங்கோலிய அனுபவத்தை அடிப்படையாகக்  கொண்டது. 

கலாச்சார புரட்சியின் ஒரு பகுதியாகச் செல்லும் இந்த மாணவர்கள் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து வாழ்வார்கள். அவர்களுக்கு அப்பகுதி மக்களுக்குண்டான வேலைகள் பகிர்ந்தளிக்கப்படும். இப்படிச் செல்லும் ஜென்சென், ஒலோன் புலொக்கின் தலைவர் போன்று விளங்கும்  பெரியவர் பில்ஜியுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். இப்படி பில்ஜியுடன் இருக்கும்போது, இயற்கையுடன் இயைந்த மங்கோலியர்களின் நாடோடி வாழக்கை முறையையும் , சீனர்கள் வெறுக்கும் ஓநாயை மங்கோலியர்கள் தங்கள் குலச்சின்னமாக போற்றுவதையும் அறிகிறார் . 

மங்கோலியர்களின் வாழ்க்கை முறையானது ஆடு , மாடுகளையும், குதிரைகளையும் மேய்த்து வாழும் ஒரு நாடோடி வாழ்க்கை முறையாகும். இந்த வாழ்க்கை முறையை ஏன் மங்கோலியர்கள் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை அறிய நாம் மங்கோலியாவை அறிய வேண்டும் . மங்கோலியா ஆசியாவில் சீனாவிற்கும், ரசியாவிற்கும் இடையில் உள்ள முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நாடாகும். அந்நாட்டின் பெரும்பகுதியை உலகின் மிகப் பெரிய குளிர்ப்பாலைவனங்களில் ஒன்றான கோபி பாலைவனம் ஆக்கிரமித்திருக்கிறது. அதனாலையே இது ஸ்டெப்பி புல்வெளிகள் அமைந்த, பெரிதாக வேறு எந்த ஒரு பயிரும் விளையாத ஒரு பகுதியாகும். அதனாலையே இப்பகுதி மக்களுக்கு மேய்ச்சல் தவிர வேறு எந்த ஒரு தொழிலும் செய்ய முடியாது இருந்தது. இந்த மேய்ச்சலுக்கு முக்கியத்தேவை புல்வெளி . 

மங்கோலியர்களின் வாழ்க்கைக்கு அடிப்படை, மேய்ச்சல் நிலம். அவர்களைப் பொருத்தவரை மேய்ச்சல் நிலமே பெரிய உயிர். அங்கு வாழும் மற்ற அனைத்து உயிர்களும் மனிதன் உட்பட மேய்ச்சல் நிலம் என்னும் பெரிய உயிரைச் சார்ந்து வாழும் சிறிய உயிர்கள். அந்த பெரிய உயிரைப் பாதுகாக்க ஓநாய்கள், கடவுள் டெஞ்சரால் அனுப்பப்பட்டவை. அவையே மேய்ச்சல் நிலக்காவலன். அவைகளே இந்த புல்வெளியானது மான்களாலும், முயல்களாலும், மோர்மோட்டுகள் என்னும் ஒரு வகை அணில்களாலும், ஆடு, மாடு, குதிரைகளாலும் அதிகமாக மேயப்பட்டு அழிந்துவிடாமல் தடுக்கின்றன. அதானலையே இந்த ஓநாய்கள் மங்கோலியர்களுக்கு  குலச்சின்னம், மேய்ச்சல் நில ஆன்மா.

ஓநாய்கள் 4-5 ஓநாய்கள் உள்ள சிறிய கூட்டத்திலிருந்து, 40-50 ஓநாய்கள் கொண்ட பெரிய கூட்டமாக வாழும். அவை ஒரு தலைவனின் கீழ் செயல்படும். இந்த ஓநாய்களின் அறிவு நுணுக்கத்தையும், வீரத்தையும் பற்றி இந்த புத்தகத்தில் குடுத்திருப்பதைப் படித்தால் மிக ஆச்சரியமாக இருக்கும். உதாரணமாக  ஒரு இடத்தில் ஆயிரம் மான்கள் கொண்ட ஒரு கூட்டத்தை 40-50 ஓநாய்கள் கொண்ட ஒரு கூட்டம் வேட்டையாடும் .  முதலில் தலைமை ஓநாய் அக்கூட்டத்தை அலசும், பின் தன்னுடைய கூட்டத்திலிருந்து ஒரு ஓநாயை மலையின்  அந்தப் பக்கத்திற்கு அனுப்பும் . ஏனென்றால் , மான்களின் கூட்டம் அதிகம் இருப்பதால் மேலும் பல ஓநாய்களைத் திரட்டுவதற்காக. அவை மான் கூட்டத்தை சுற்றி இருந்து சரியான தருணத்தில் வட்டத்தை முடிக்கும் ( சக்கர வியூகம் !) . அப்படி வளைக்கும்போது அக்கூட்டதிலுள்ள பெரிய மான்கள் எல்லாம் ஒன்று திரண்டு ஓநாய் வட்டத்தை ஒரு பகுதியில் உடைத்து வெளியேறும் . அதை தலைமை ஓநாய் பக்கத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கும் . அந்த பெரிய கொம்பு உள்ள முரட்டு ஆண் மான்கள் வெளியேறியவுடன் , சரியான தருணத்தில் உடைப்பை மூடிவிடும். இப்பொழுது பெரிய மான்களிடம் அடிபட்டு கிழிபட வேண்டாம். அப்பொழுதும் அந்தப் பெரிய கூட்டத்தை  40-50 ஓநாய்கள் சமாளித்துக் கொல்ல முடியாது . அதனாலையே அந்த பலம் குறைந்த மான்களை பனி ஏரிக்கு விரட்டிச் சென்று தள்ளிக் கொள்ளும் . இப்படி பெரிதாக இழப்பின்றி ஒரு பெரிய மான் கூட்டத்தையே வளைத்துவிடும் .

ஓநாய்களிடம் இருந்தே மங்கோலியர்கள் பலவற்றையும் கற்றனர். ஓநாய்கள் வேட்டையாட தக்க தருணம் வரும்வரை மிகப் பொறுமையாகக் காத்திருக்கும். அது ஒரு மிகச் சிறந்த போர் வீரன். அது மிகச் சிறந்த போர் வியூகம் வகுக்கும்.  செங்கிஸ்கான், மங்கோலியாவின் மிகப் பெரும் பேரரசர். இதுவரை உலகில்  இருந்த சாம்ராஜ்ஜியங்களில், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு அடுத்து மிகப் பெரிய சாம்ராஜ்ஜியம் செங்கிஸ்கானின் மங்கோல் சாம்ராஜ்ஜியம். இந்த புத்தகம் முழுவதும் செங்கிஸ்கான் தன்னுடைய போர் திறமைகளை ஓநாய்களிடம் இருந்தே கற்றதாக வரும். மேலே சொன்ன மான் வேட்டை போன்ற ஒரு வியூகத்தை பின்பற்றியே செங்கிஸ்கானின் ஒரு தளபதி , ஹேன் சீனர்களை ஏரியில் தள்ளி வெல்வார் . 

செங்கிஸ்கான் இந்த உலகை வென்றதற்கு ஒரு முக்கிய காரணம் மங்கோலியாவின் நிலப்பரப்பு ஆகும்.  ஏனெனில் மங்கோலியாவின் நிலப்பரப்பு ஈவு இரக்கமற்றது, குரூரமானது . அது கோழைகளை ஏளனம் செய்யும். அங்கு துணிந்தவர்களே உயிர் வாழ முடியும்.  மென்மையான இதயம் கொண்டவர்களால் அங்கு வாழ முடியாது . இந்த யுத்த களமான வாழ்க்கையே மங்கோலியர்களை உலகை  வெல்பவர்கள் ஆக்கியது.  இவைதான்  அந்த காலத்தில் மங்கோலியர்களை கண்டு, உலகை அலறி நடுங்கச் செய்தது.  செங்கிஸ்கானின்  வீரர்கள் குளிக்கமாட்டார்களாம். அதனாலையே ரொம்ப தூரத்திலேயே செங்கிஸ்கான் வீரர்கள் புழுதி பறக்க வரும்போது வரும் வாடையிலேயே பல எதிராளிகள் அலறி அடித்து ஒடுவார்களாம். அந்த அளவிற்குப் அவர்களின் நினைப்பே  பயத்தை ஏற்படுத்தியது .

மங்கோலியாவின் முரட்டுத்தனமான காலநிலை அங்கு  வாழ்ந்த உயிரினங்கள் அனைத்தையும் அந்த  சூழ்நிலையைப் போலவே மாற்றியது . மங்கோலியாவில் குதிரைகள் உண்டு . மங்கோலியக் குதிரைகள் அரபுக் குதிரைகள்  போல் ஆஜானுபாகுவாக உயர்ந்திருக்காது. அரபுக் குதிரைகளை  குள்ளமாக சற்றுக் குண்டாகவும் இருக்கும். ஆனால் முரட்டுத்தனமானது.

செங்கிஸ்கானின் தலைமையிலான மங்கோலியப் படையின் குதிரைப்படையைப் பார்த்தே இந்த உலகம் மிகவும் பயப்பட்டது. மற்ற  படைகளிலிருந்து மங்கோலியப் படை ஒரு விதத்தில் மிகவும் உயர்ந்து இருந்தது . அது விரைந்த தாக்குதல். அவர்கள் ஒரு நாளில் 1000 லீ தூரம் அளவிற்கு கடந்தனர். அதாவது 300 மைலுக்கும் மேலே. சுமார்  50,000 படை வீரர்கள் ஒரு நாளில் 300 மைல் அதாவது சென்னையிலிருந்து மதுரை வரையிலான தூரத்தைக் கடக்க முடிந்தது  அந்த காலத்தில் மிக அசாத்தியமான ஒன்று. அவர்களால் இதைச் சாதிக்க முடிந்தது மங்கோலியக் குதிரைகளினாலே. மங்கோலிய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு குதிரைகள் இருக்குமாம். இவ்வாறு தாக்குதலின் போது ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்லும்போது ஒரு குதிரை களைத்துவிடும்பொழுது மற்றறொரு குதிரையில் ஏறிக் கொள்வார்களாம் . மங்கோலியர்கள் தங்கள் காலநிலையும் , நிலப்பரப்பும் தங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த தகவைமைப்பைக் கொண்டு இந்த உலகையே வென்றனர் . அந்தக் காலத்தில் அறியப்பட்ட உலகமான பழைய உலகில் ( ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்ரிக்கா) கிட்டத்தட்ட 35% ஆண்டனர்

செங்கிஸ்கானிற்கு முன்பே மங்கோலியர்கள் இந்த உலகை வெல்லும் திறமை கொண்டவர்களாகத்தான் இருந்தனர் . செங்கிஸ்கான் செய்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். பல இனக்குழுக்களாக பிரிந்து தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை ஒரு தலைமையின் கீழ் இணைத்து மங்கோலியாவையும்தாண்டி உலகம் உண்டு என்று காட்டியதுதான். 

இந்தப் புத்தகத்தில் மிகப் பெரியளவில் வெளிப்படுவது , இயற்கையுடன் இயைந்த வாழ்வும்,  எதையும் அளவோடு பயன்படுத்தி இயற்கையின் சமநிலையைப் பேணுவதாகும் .  மங்கோலியர்களின் புல்வெளி சீனர்களின் வரவால் எந்த அளவிற்குப் பாதிக்கப்படுகிறது , சீனர்களின்அளவற்றப் பயன்பாட்டால் புல்வெளியில் வாழ்க்கைச் சமநிலை எந்த அளவிற்குப் பாதிக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. 

பெரியவர் பில்ஜி ஓநாய்களைப் போற்றும் மங்கோலியத் தலைமுறையின் கடைசித் துளி.  தங்கள் கலாச்சாரத்தை விட்டுவிட்டு, ஓநாய்களின் பெருமையையும் அறியாது அவற்றை அழிக்கவும், வரன்முறையற்ற மேய்ச்சலுக்குத் துணை போய் மங்கோலிய  புல்வெளிகள் அழிவதற்குக் காரணமாகும் தங்கள் இனத்தவர்கள் மீது அவருக்குப் பெரும் கோவம். எங்கே தான் இறக்கும் போது ஒலோன் புலோக்கிலுள்ள ஓநாய்களெல்லாம் அழிக்கப்பட்டு தான் வான் சமாதி* அடைய முடியாமல் போய் தான் டெஞ்சரை அடையமுடியாமல் போய்விடுமோ என்று மிகக் கவலை கொள்வார் . அந்தப் பெரியவர் பயப்பட்ட மாதிரி பெரியவர் இறந்த இருபது ஆண்டுகளுக்குள்ளேயே அதீத மேய்ச்சலால் மங்கோலியப் புல்வெளியானது அழிந்துவிட்டது.  அதன் காரணமாக இன்று பீஜிங்கில் புழுதிப் புயல் வீசுகிறது . 

சீன ஹெனனான ஜென்சென்னுக்கும் , ஒலோன் புலொக்கின் பெரியவர் பில்ஜிக்கும் இடையிலான உறவு மிகவும் நெகிழ்வானது . ஜென்சென் , பெரியவர் பில்ஜியை தன் தந்தையைப் போன்றே கருதுவான் . ஓநாயைப் போற்றும் கடைசி மங்கோலியத் தலைமுறையினரான பில்ஜியிடமிருந்து ஓநாய்களைப்  பற்றியும் , மங்கோலியாவின் மேய்ச்சல் கலாச்சாரத்தைப் பற்றியும் , அதன் எளிய வாழ்க்கை முறைப் பற்றியும் அறிய ஆர்வம் கொள்ளுவான் . பில்ஜிக்கோ , தங்கள் மங்கோலியர்களே ஓநாய்களைப் போற்றாத போது , அவற்றின் மீது ஆர்வம் கொள்ளும் ஹேன் சீனன் மீது அவருக்கு அளவுக்கதிக  ஆர்வம் உண்டாகிறது . தான் அறிந்த தன கலாச்சாரத்தை இந்த சீனன் மூலம் கடத்தி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லலாம் என நினைக்கிறார் . 

 இந்த புத்தகத்தை படித்து முடித்த போது மனம் முழுவதும் ஒலோன் புலோக்கும், டெஞ்சரும், பில்ஜியும், ஓநாய்களுமே நிறைந்திருந்தது . புத்தகம் முழுவதும் குடியானவர்களைப் பற்றிய எள்ளல்கள் அதிகம் . இதன் மீது வைக்கபடும் ஆகப் பெரிய குற்றச்சாட்டும் அதிகம் . இந்த புத்தகம் முழுவதும் மங்கோலியர்கள் சீன ஹெனர்களை ஆட்டிற்கு இணையாகவும் , தங்களை ஓநாய்க்கு இணையாகவும் சொல்வார்கள். அவர்களைப் பொருத்தவரை ஆடுகள் கோழைகள் , ஓநாய்கள் வீரம் நிறைந்தவை.

எனக்கு இந்த புத்தகத்தில் மிகப் பிடித்தது அதன் ஆன்மா. ஆம், நிச்சயமாக. இது எந்த ஒரு நிகழ்வையோ, விசயத்தையோ  வெறும் ஒரு வரலாற்றுப் பதிவாகவோ அல்லது ஒரு சாதாரண விஷயமாகவோ சொல்லாமல் ஒரு உயிரோட்டத்துடன் நம் கண் முன்னே விரிக்கிறது . விரிக்கிறது என்று சொல்வதைக் காட்டிலும் விரிகிறது என்று சொல்லலாம். ஒரு புத்தகத்திற்கு அதன் உயிரோட்டம் முக்கியம. இந்த புத்தகம் எதைப் பற்றி பேச வந்தாலும் அது ஓநாயாகட்டும் , இயற்கை ஆகட்டும் , புல்வெளி ஆகட்டும் , குதிரை ஆகட்டும் , வாழ்க்கைத் தத்துவம் ஆகட்டும்  எதுவாக இருந்தாலும்  அதில் நான் முற்றிலுமாக ஒன்றிப் போனேன் . எனக்கு இந்த புத்தகத்தில் எந்த ஒரு பக்கமும் சுவாரசியமாக இல்லாமல் இல்லை. ஏன் சொல்லப் போனால் ரொம்ப சுவாரசியமாக இருப்பதால் சீக்கிரம் முடிந்துவிடுமோ என்ற கவலைதான் இருந்தது . 

சீனரான ஜியோன்ங் ரோங்க் எழுதிய இந்த புத்தகம் வெளிவந்த இரண்டு ஆண்டுகளில் 40 லட்சம் பிரதிகள் சீனாவில் விற்றுத் தீர்த்துவிட்டது. 

இந்த புத்தகம் இவ்வளவு சுவாரசியமாக இருப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் அதன் மொழி நடை. ரொம்ப மிக எளிய மொழி நடையைக் கொண்டு இது ஒரு மொழி பெயர்ப்பு நூல் என்ற நினைப்பே தோன்ற விடமால் செய்கிறது . அந்த ஒரு காரணத்திற்காகவே இதன் மொழி பெயர்ப்பாளர் மோகனைப் பாராட்டலாம். நீங்கள் இயற்கையையும் , அதனுடைய இயைந்த வாழ்வையும் பற்றி அறிய விரும்பினால் இப்புத்தகம் மிகச் சிறந்தது. நீங்கள் அப்படி இல்லாவிட்டாலும் பரவாயில்லை, நீங்கள் ஒரு வாசிப்பாளராக இருந்தாலே போதும் , இந்த புத்தகத்தின் சுவாரசிய ஓட்டமே உங்களைக் கவர்ந்துவிடும் .

பின்குறிப்பு : 

1. இந்த பதிவிற்கு நான் புத்தக விமர்சனம் என்று தலைப்புக் குறிப்பிடவில்லை . இது இந்த புத்தகத்துடனான என்னுடைய  அனுபவத்தையே கூறவருகிறது . மதுவைப் பொருத்தவரை என்னுடைய புத்த விமர்சனங்கள் , விமர்சனங்களாகவே இருப்பதில்லை. உணமைதான் , புத்தகங்களைப்  பற்றிக் கூறவந்தது பெரும்பாலும் என்னுடை அனுபவங்களையே கூறி உள்ளேன் . இந்த பதிவில் கூட சென்கிச்கானைப் பற்றிக் கூறியவற்றில் பெரும்பானவை நான் மற்ற தளங்களில் அறிந்தவையே . எனக்கு புத்தக விமர்சனத்தைவிடவும் அதன் அனுபவத்தைக் கூறவே பிடித்துள்ளது. இருந்துவிட்டுப் போகட்டும் :) 

2. இந்தப் பதிவானது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு என்ற பதம் என்ற அளவிலேயே கூறி உள்ளேன் . மது சொன்னமாதிரி , புத்தக விமர்சனம், அனுபவம் என்ற பெயரில் மொத்த புத்தகத்தையும் எழுத விரும்பவில்லை. 

3. வான் சமாதி - மங்கோலியர்கள் இறந்தவுடன் அவர்களின் உடல்களை புதைக்கவோ, எரிக்கவோ மாட்டார்கள் . இறந்த உடல்களை மலைச்சரிவில் போட்டுவிடுவார்கள் . அவைகள் ஓநாயால் தின்னப்பட்டுவிடும் . இரண்டு மூன்று நாட்களிலேயே அவர்களின் உடல்கள் உண்ணப்பட்டுவிட்டால் , அவர்கள் டெஞ்சரை அடைந்துவிட்டார்கள் என்று அர்த்தம் . செங்கிஸ்கானின் உடலையும் வான் சமாதிதான்  செய்தார்கள். பார்சி இனத்தவர்களிடமும் இது போன்ற பழக்கம் உண்டு . அவர்களின் உடல்களை  கழுகுக்கு இரையாக்கி விடுவார்கள்.

Photo Courtesy :  eweb4